தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தனியார் நிறுவனம் மற்றும் தாட்கோ இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு, ஒப்பனை மற்றும் அழகுக்கலை (Cosmetology, Aesthetic training and Dermaplaining training) ஆகிய பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. இப்பயிற்சியினை பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்தவராக இருக்க வேண்டும். இப்பயிற்சிக்கு எட்டாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்தவராக இருக்க வேண்டும். 18 முதல் 35 வயது வரையும், குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ,3.00 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இப்பயிற்சிக்கான கால அளவு 90 நாட்கள் ஆகும். மேலும், இப்பயிற்சி இராணிப்பேட்டை மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ளது. இங்கு தங்கும் வசதிகள், உணவுகள் உட்பட செலவினத் தொகை தாட்கோவால் ஏற்கப்படும். இப்பயிற்சி முடித்தவுடன் தகுதியான நபர்களை பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாக தேர்வு செய்து அந்நிறுவனத்தின் சார்பாக ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ.18,000/- முதல் ரூ.25,000/- வரை வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். இப்பயிற்சியில் சேருவதற்கு தகுதியான நபர்கள் தாட்கோ இணையதளம் (www.tahdco.com) என்ற முகவரியில் பதிவு செய்ய வேண்டும். தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் பதிவு செய்து இவ்வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S ., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், காரியபட்டி வட்டம், ஆவியூர் ஊராட்சியில் (10.02.2026), பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை சார்பில், தேசிய குடற்புழு நீக்க தினம்-2026னை முன்னிட்டு, குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் துவக்கி வைத்தார்.விருதுநகர் மாவட்டத்தில் ஒரு வயது குழந்தை முதல் 19 வயது வரையுள்ள 5,78,289 சிறுவர், சிறுமியர்களுக்கும் மற்றும் 20 முதல் 30 வயது வரை உள்ள 1,33,116 பெண்களுக்கும் குடற்புழுக்களால் ஏற்படும் இரத்த சோகை, உடல் சோர்வு, மனச்சோர்வு, மூளை வளர்ச்சி குன்றுதல் போன்ற பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கும் பொருட்டு, அனைத்துக் குழந்தைகளுக்கும் தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தார். சுகாதார வசதிகள் குறைவாக உள்ள இடங்களில் மண்மூலம் குடற்புழு ஒட்டுண்ணிகளால் குடற்புழு தொற்று பரவுவதால், குழந்தைகளின் வளர்ச்சியிலும் மற்றும் உடல்நலனிலும் குறைபாட்டை ஏற்படுத்துகிறது. இதனால் அவர்களுக்கு இரத்தசோகை ஏற்படுகிறது. இதனால் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படுகிறது.எனவே, திறந்தவெளி கழிப்பிடத்தை பயன்படுத்தாமலும் நமது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்வதனாலும் இரத்தசோகை வராமல் தடுக்க முடியும்.இதனடிப்படையில், காரியாபட்டி வட்டம், ஆவியூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு மதிய உணவு உண்ட பின்னர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கினார். மேலும், இம்மாத்திரைகளை தவறாமல் வாங்கி மென்று உட்கொள்ளுமாறும் மற்றும் இதனை மருத்துவர்களும், பள்ளி ஆசிரியர்களும் உறுதி செய்ய வேண்டும் எனவும், மேலும் விடுபட்ட சிறுவர், சிறுமியர்கள் மற்றும் பெண்களுக்கு வரும் 17.02.2026 அன்று குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்தார்.இவ்விழாவில், இணை இயக்குநர் மரு.எஸ்.செந்தில்குமார், விருதுநகர் மாவட்ட சுகாதார அலுவலர் மரு.வே.யசோதாமணி, மருத்துவ அலுவலர்கள் தலைமையாசிரியர், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநரின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் உள்நாட்டு மீனவர் கூட்டுறவுச் சங்க உறுப்பினர்கள் மற்றும் தமிழ்நாடு மீனவர் நலவாரிய உறுப்பினர்கள் தேசிய மீன்வள டிஜிட்டல் தளம் (NFDP) -என்ற இணையதளத்தில் பதிவு செய்யக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.மீனவர் குழு விபத்து காப்பீட்டுத் திட்டத்தின் (GAIS) மூலம் வழங்கப்படும் நிவாரணத் தொகை பெற்றிட தேசிய மீன்வள டிஜிட்டல் தளத்தில் (NFDP) பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.எனவே, அனைத்து உறுப்பினர்களும் அருகாமையிலுள்ள இ-சேவை மையம் மற்றும் CSC கணினி மையங்களை அணுகி தேசிய மீன்வள டிஜிட்டல் தளத்தில் (NFDP) பதிவு செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.மேலும் விவரங்களுக்கு உதவி இயக்குநர் அலுவலகம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், (பழைய கட்டிடம் இரண்டாவது தளம்) விருதுநகர் - 626 001. தொலைபேசி எண்: 04562-244707 என்ற முகவரியில் தொடர்புகொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டம், ஆவியூர் ஊராட்சியில் (10.02.2026) நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டார். தமிழ்நாடு அரசு சாமானிய மக்களும் தரமான மருத்துவ சேவைகளை பெற வேண்டும் என்பதற்காக மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48, வருமுன் காப்போம், இதயம் காப்போம், நடப்போம் நலம் பெறுவோம் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த வரிசையில் தமிழ்நாடு அரசு மற்றொரு மருத்துவ சேவை சார்ந்த திட்டமான நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தினை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. மாநிலம் முழுவதும் 1,256 நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம்களை நடத்தி, அனைத்து வயதினருக்கும், குறிப்பாக ஏழை எளிய மக்களுக்கும் அதிநவீன பரிசோதனை சாதனங்கள் மூலம் நோய்களை கண்டறிந்து, நோய் கண்டறியப்பட்டவர்களுக்கு உடனடியாக இலவச சிகிச்சை அளித்து அவர்களின் ஆரோக்கியத்தையும், உயிரையும் காப்பாற்றுவதே நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். பொதுவாக தனியார் மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனைகள் செய்ய ரூ.15,000 வரை செலவாகிறது. ஆனால், நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாமில் மக்களை தேடிச் சென்று அனைத்து பரிசோதனைகளும் இலவசமாக செய்யப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், நோய் கண்டறியப்பட்டால், அதற்கான சிகிச்சைகளும், மருந்துகளும் கூட இலவசமாகவே வழங்கப்படுகின்றன.இதனால், கட்டணம் செலுத்தி மருத்துவம் பார்க்க வசதி இல்லாத ஏழை, எளிய மக்கள் பெரியளவில் பயனடைந்து வருகின்றனர். போக்குவரத்து வசதி அதிகம் இல்லாத இடங்களிலும் முகாம்கள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு முகாமின் போது பொதுமக்கள் எளிதாக புரிந்துக் கொள்ளும் வகையில் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. இம்முகாமில் உயர் இரத்த அழுத்தம், எக்கோ, எக்ஸ்ரே, நீரழிவுநோய் கண்டறிதல்,மார்பக புற்றுநோய், வாய் புற்றுநோய் பரிசோதனை, மின் இதய வரைபடம், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்,கருப்பை வாய் பரிசோதனை, காச நோய் மற்றும் தொழு நோய், சிறுநீரக நோய் பரிசோதனை, உள்ளிட்ட 24 வகையான இரத்த பரிசோதனைகளும் மற்றும் பொது மருத்துவம், மகளிர் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், கண் மருத்துவம், இயன்முறை மருத்துவம், நீரழிவு நோய் மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, குழந்தை மருத்துவம், தோல் மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம், கதிரியக்கவியல் மருத்துவம், சித்தா மருத்துவம், எலும்பு மருத்துவம், இருதய மருத்துவம், பல் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம் போன்ற இலவச சிறப்பு மருத்துவ சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருகிறது.மேலும், இம்முகாமில் குறிப்பிட்டுள்ள பரிசோதனைகள் மட்டும் இன்றி முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் பதிவு செய்தல், மாற்று திறனாளிகளுக்கான அரசு அடையாள அட்டை வழங்குதல், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான தொழிலாளர் நல வாரியத்தின் உறுப்பினர் அடையாள அட்டை வழங்குதல் மற்றும் வருவாய்துறையினர் மூலமாக வருமானச் சான்றிதழ் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 36 பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. அதன்படி, காரியாபட்டி வட்டம் ஆவியூரில் 31 ஆவது முகாம் இன்று நடைபெற்றது. மேலும் இந்த சிறப்பு மருத்துவ முகாமில், 3 நபர்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டைகளையும், 5 தூய்மை காவலர்களுக்கு தொழிலாளர் நல வாரிய அட்டைகளையும், 2 நபர்களுக்கு மாற்றுத் திறனாளி அடையாள அட்டைகளையும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.தொடர்ந்து, தேசிய குடற்புழு தினத்தினை முன்னிட்டு குடற்புழு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.மேலும், குடற்புழு நீக்க மாத்திரைகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் மாணவர்களுக்கு வழங்கினார். இந்நிகழ்வில், விருதுநகர் மாவட்ட சுகாதார அலுவலர் மரு.யசோதாமணி, மருத்துவத்துறை அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இருக்கண்குடி நீர்த்தேக்கத்தின் மீன்பாசி குத்தகை உரிமைகளை 5-ஆண்டு காலங்களுக்கு குத்தகைக்கு விடுவது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு, குறைந்தபட்ச குத்தகைத் தொகை நிர்ணயம் செய்யப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.மேலும், எதிர்வரும் 17.02.2026-அன்று நடைபெறவுள்ள இருக்கண்குடி நீர்த்தேக்கத்தின் மீன்பாசி குத்தகை உரிமையை குத்தகைக்கு எடுக்க விருப்பம் உள்ளவர்கள் அதற்கான விண்ணப்பங்கள் மற்றும் தொடர்புடைய விவரங்களை www.tntenders.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.மேலும் விவரங்களுக்கு, உதவி இயக்குநர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, அறை எண்: 228, இரண்டாம் தளம், பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம், கூரைக்குண்டு, விருதுநகர் - 626002. தொலைபேசி எண். 04562 - 244707, 9943053799, 8608011144, 9894893219, மின்னஞ்சல் முகவரி: adfisheriesvnr@gmail.com என்ற முகவரியில் இயங்கிவரும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு உரிய விவரங்களைப் பெற்று பயனடையலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில் (09.02.2026) நடைபெற்றது.இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலை வாய்ப்பு, விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நல உதவித்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்தகுடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்குச் சென்று, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். இம்மனுக்கள் மீது தொடர்புடைய அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்குமாறும், முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.பின்னர்,மாவட்டவழங்கல்மற்றும்நுகர்வோர்பாதுகாப்புத்துறைசார்பில்12பயனாளிகளுக்குமின்னனுகுடும்பஅட்டைகளையும்,மாவட்ட அளவிலான இடை நிற்றல் மாணவர்களை கண்டறியும் கள ஆய்வில், கண்டறிந்த மாணவனை மீண்டும் பள்ளியில் சேர்த்து கல்வி பயில நடவடிக்கை எடுத்து, மாணவனின் குடும்ப சூழல் கருதி உதவித் தொகையாக ரூ.3000 காசோலையினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி, தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்பு திட்டம்) திரு.கு.மோகனா, முதன்மைக்கல்வி அலுவலர் திரு.அரவிந்தன், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் திருவள்ளூர் மாவட்டத்தில் (09.02.2026) நடைபெற்ற விழாவில், மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் தூய்மை பணியாளர்களுக்கு உணவு திட்டம் விரிவாக்கத்தினை தொடங்கி வைத்து, தூய்மை பணியாளர்களுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.அதனைத்தொடர்ந்து, விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலக வளாகத்தில், மாவட்டத்தில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தினை, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S ., அவர்கள் தலைமையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் தொடங்கி வைத்து, தூய்மை பணியாளர்களுக்கு உணவினை வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தூய்மைப் பணியாளர்கள் தங்களது பணியை அதிகாலையில் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலையில், காலை உணவு சமைப்பதற்கும், அதை பணிபுரியும் இடத்திற்கு கொண்டு வந்து அருந்துவதற்கும் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர். இப்பிரச்சனைகளுக்கு தீர்வாக நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளில் தூய்மைப் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு காலை உணவு அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளால் இலவசமாக வழங்கப்படும். இத்திட்டம் முதற்கட்டமாக பெருநகர சென்னை மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு, படிப்படியாக மற்ற நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளுக்கும் விரிவுப்படுத்தப்படும் என அறிவித்தார்.அதன்படி, சென்னையில் தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கடந்த 2025 நவம்பர் 15 ஆம் தொடங்கி வைத்தார். தற்போது, இன்று மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் தூய்மை பணியாளர்களுக்கு உணவு திட்டம் விரிவாக்கத்தினை தொடங்கி வைத்துள்ளார்.அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி மாநகராட்சியில் 508 தூய்மை பணியாளர்களுக்கும், இராஜபாளையம் நகராட்சியில் 577 தூய்மை பணியாளர்களுக்கும், விருதுநகர் நகராட்சியில் 299 தூய்மை பணியாளர்களுக்கும், திருவில்லிபுத்தூர் நகராட்சியில் 272 தூய்மை பணியாளர்களுக்கும், அருப்புக்கோட்டையில் நகராட்சியில் 391 தூய்மை பணியாளர்களுக்கும் மற்றும் சாத்தூர் நகராட்சியில் 146 தூய்மை பணியாளர்களுக்கும் என மொத்தம் 5 நகராட்சிகளில் பணிபுரியும் 1685 தூய்மை பணியாளர்களுக்கும்,பேரூரட்சிகளில் செட்டியார்பட்டியில் 68 தூய்மை பணியாளர்களுக்கும், காரியாபட்டியில் 77 தூய்மை பணியாளர்களுக்கும், மல்லாங்கிணரில் 39 தூய்மை பணியாளர்களுக்கும், மம்சாபுரத்தில் 38 தூய்மை பணியாளர்களுக்கும், எஸ்.கொடிக்குளத்தில் 30 தூய்மை பணியாளர்களுக்கும், சேத்தூரில் 61 தூய்மை பணியாளர்களுக்கும், சுந்தரபாண்டியத்தில் 31 தூய்மை பணியாளர்களுக்கும், வ.புதுப்பட்டியில் 33 தூய்மை பணியாளர்களுக்கும், வத்திராயிருப்பில் 69 தூய்மை பணியாளர்களுக்கும் என மொத்தம் 9 பேரூராட்சிகளில் பணிபுரியும் 446 தூய்மை பணியாளர்களுக்கும்என ஆக மொத்தம் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பணிபுரியும் 2639 தூய்மை பணியாளர்களுக்கு உணவுகள் வழங்கப்பட உள்ளன.இத்திட்டத்தின் மூலம், வாரந்தோறும் திங்கட்கிழமை இட்லி, மெதுவடை, சாம்பார், செவ்வாய் கிழமை ரவா கிச்சடி மற்றும் கார சட்னி, புதன்கிழமை வெண்பொங்கல் மற்றும் சாம்பார், வியாழக்கிழமை ரவா உப்புமா மற்றும் தேங்காய் சட்னி, வெள்ளிக்கிழமை இட்லி, மெதுவடை, சாம்பார், சனிக்கிழமை ரவா பொங்கல் சாம்பார், ஞாயிற்றுக்கிழமை சேமியா கிச்சடி, சாம்பார் போன்ற உணவு வகைகள் ஒப்பந்ததாரர்கள் மூலம் சுவையாகவும், தரமாகவும் சமையல் செய்து வழங்கப்பட உள்ளது என அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், திருநெல்வேலி மண்டல நகராட்சி நிர்வாக இயக்குநர் திருமதி பெ.விஜயலெட்சுமி, அருப்புக்கோட்டை நகர்மன்றத்தலைவர் திருமதி சுந்தரலட்சுமி சிவப்பிரகாசம், அருப்புக்கோட்டை நகராட்சி ஆணையாளர் திரு.ராஜமாணிக்கம் உட்பட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் (09.02.2026) கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு ‘கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு” உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா.,I A S ., அவர்கள் தலைமையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர். “இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி மனிதனை வணிகப் பொருளாக்குதலும், வலுக்கட்டாயமாக வேலை சுமத்தும் வழக்கங்களும், கடன் பிணையத் தொகை வழங்கி கட்டாயப் பணிக்கு வற்புறுத்துவதும் தண்டனைக்குரிய குற்றமாக வரையறை செய்யப்பட்டுள்ளதால், கொத்தடிமைத் தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழித்திடும் நோக்கத்தை கருத்திற்கொண்டு, சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும், கொத்தடிமைத் தொழிலாளர் முறை எந்தத் தொழிலில் இருந்தாலும் அதனை அடையாளங்கண்டு தக்க நடவடிக்கை எடுக்க முழு முயற்சி செய்வேன் என்றும், எந்தத் தொழிற்சாலையிலும் தொழிலாளர்களுக்கு முன்பணம் கொடுத்து பணியமர்த்துவதைத் தவிர்க்க வலியுறுத்துவேன் என்றும்,கொத்தடிமைத் தொழிலாளர்களை மீட்டு அவர்களின் முழுமையான மறுவாழ்விற்காகப் பணியாற்றுவேன் என்றும், இந்திய அரசமைப்புச் சட்டம் வகைசெய்துள்ள அடிப்படை உரிமைகளை அனைவருக்கும் உரித்தாக்குவதற்கு, கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்புச் சட்டத்தைச் சீரிய முறையில் செயற்படுத்த உறுதுணையாக இருந்து கொத்தடிமைத் தொழிலாளர் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவதற்கு சிறப்புடன் செயற்படுவேன் என்ற உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர். பின்னர், கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில், தொழிலாளர் உதவி ஆணையர் திரு.காளிதாஸ், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் இணை இயக்குநர்கள் திரு.ஆர்.ரவிச்சந்திரன், திரு.பி.ராஜ்குமார், உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் செங்குன்றாபுரம் ஊராட்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், வீடுகள் கட்டி குடியிருப்பதற்கான உத்தரவுகள் பெற்று, குடியிருந்து வரும் 83 பயனாளிகளுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், இணையவழி பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் பயனாளிகளின் இல்லங்களுக்கு நேரில் சென்று வழங்கினார்.தமிழ்நாடு அரசு சொந்தமாக வீடு இல்லாமல் அரசின் புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் ஏழை, எளிய குடும்பங்களுக்கு சொந்தமாக ஒரு வீடு கட்டி வாழ வேண்டும் என்பதற்காக இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் திட்டம் என்ற உன்னதமான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.இத்திட்டத்தின் மூலம் ஆக்கிரமிப்பு பகுதிகளில் வசிக்கும் ஏழை குடும்பங்கள் பாதுகாப்பான மற்றும் நிலையான வாழ்க்கையை வாழ வழிவகை செய்யப்படுகிறது. இலவச மனை பட்டா வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு இல்லாமல் ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு நிலங்களில் வீடு கட்டி வாழ்ந்து வரும் ஏழை, எளிய குடும்பங்களுக்கு வீட்டு மனை வழங்கப்படுகிறது. மேலும், ஆக்கிரப்பு நிலத்திற்கு உண்டான பட்டாவையும் அரசே இலவசமாக வழங்கி வருகிறது.தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து மாவட்டங்களிலும் அதிகமான பட்டாக்களை வழங்கிய மாவட்டங்களில் ஒன்றாக நமது மாவட்டம் திகழ்கிறது.அந்த வகையில் விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் செங்குன்றாபுரம் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த 83 குடும்பங்கள் அரசு புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி குடியிருப்பதற்கான உத்தரவுகளை பெற்று குடியிருந்து வருவதாகவும், இதுவரை இந்த இடங்களுக்கான பட்டா இல்லை என்பதால், அதற்கான பட்டார்கள் வழங்கிட வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.அதனடிப்படையில், குடியிருந்து வரும் அப்பகுதி மக்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து வருவாய்த்துறையின் மூலம், 83 குடும்பங்களுக்கு இணையவழி பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அவர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று வழங்கினார்.இந்த இடங்களில் நாங்கள் குடியிருந்து வந்தாலும், அரசு பட்டா இல்லாமல் சிரமப்பட்டு இருந்தோம். தற்போது எங்கள் அனைவருக்கும் இலவச பட்டாக்களை, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களே வீடு தேடி வந்து வழங்கியது மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது எனவும், இலவச பட்டா வழங்கியதன் மூலம் நாங்கள் குடியிருந்து வரும் இந்த வீட்டுக்கான அரசு அங்கீகாரம் கொடுத்த தமிழ்நாடு அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் இப்பகுதி மக்கள் நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.இந்நிகழ்வின் போது, விருதுநகர் வருவாய் வட்டாட்சியர் திரு.ராஜ்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின்கீழ் வாழ்வாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள விருதுநகர், சிவகாசி, இராஜபாளையம், திருவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை, திருச்சுழி, நரிக்குடி, சாத்தூர், வெம்பக்கோட்டை, வத்திராயிருப்பு மற்றும் காரியாபட்டி ஆகிய 11 வட்டாரங்களில் காலியாக உள்ள 23 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடம் பூர்த்தி செய்யப்பட உள்ளது.பணியிடமானது எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் நிரப்பட உள்ளன.வட்டார ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தகுதிகள்:1)ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி மற்றும் MS Office-ல் குறைந்தது 03 மாத சான்றிதழ் வகுப்பு (Certificate Course) சான்றிதழ் பெற்றவராக இருத்தல் வேண்டும்.2) 30 வயதிற்குள் மிகாமல் இருக்கவேண்டும்.3) தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் SHG/PLF போன்றவற்றில் குறைந்தது 05 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.4) வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும் பணியிடமுள்ள வட்டாரத்தின் எல்கை பகுதிக்குள் வசிப்பவராக இரு வேண்டும். (Residence in same block)5) இரு சக்கர வாகனம் ஓட்டுநர் உரிமம் பெற்றிருத்தல் வேண்டும். இருசக்கர வாகனம் நன்றாக இயக்க தெரிந்தவராக இருத்தல் வேண்டும்.6) சிறந்த நன்னடத்தையுடன் இருக்க வேண்டும்.7) தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்டம்/புதுவாழ்வு திட்டம்/IFAD திட்டம் போன்றவற்றின்கீழ் பணிபுரிந்து நிரந்தர பணிநீக்கம்/தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டவராக இருக்கக் கூடாது.விண்ணப்ப படிவம் இணையதள முகவரி www.virudhunagar.nic.in இல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.1)விண்ணப்பதாரர்கள் பிறந்த தேதி, பணிபுரிந்ததற்கான பணிஅனுபவச் சான்று, கல்வித் தகுதி, சாதிச் சான்று ஆகியவைகளுக்கு ஒளிநகல் (Xerox Copy) கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.2) விண்ணப்ப படிவத்தில் உள்ள விபரங்கள் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.3) தகுதியில்லாத மற்றும் காலங்கடந்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் இணை இயக்குநர்/ திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, அலுவலக வேலை நாட்களில், காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை நேரிலோ அல்லது இணை இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி துறை அலுவலக வளாகம், விருதுநகர், அஞ்சல் - 626 002, விருதுநகர் மாவட்டம் என்ற முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாகவோ 16.02.2026 (திங்கட்கிழமை) பிற்பகல் 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.