25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Aug 07, 2025

விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் வணிகர்களுக்கான சிறு தானியங்கள் ஏற்றுமதி பயிற்சி மற்றும் உற்பத்தியாளர் வணிக இணைப்புக்கூட்டம் - 2025

விருதுநகர் மாவட்டம், விருதுநகர் ஸ்ரீ அம்பாள் கிராண்ட்  மண்டபத்தில் (06.08.2025) வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் வணிகர்களுக்கான சிறு தானியங்கள் ஏற்றுமதி குறித்த பயிற்சி மற்றும் உற்பத்தியாளர் வணிக இணைப்புக்கூட்டம் - 2025 வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை ஆணையர் (சென்னை) திரு.த.ஆபிரகாம்,I A S., அவர்கள், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள் மற்றும் சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.அசோகன் அவர்கள்ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.சிறுதானியங்கள், காலநிலை மாற்றத்திற்கேற்ற பயிராக உலகளவில் அங்கீகரிப்பட்டுள்ளது. இச்சிறுதானியங்கள் இரசாயன உரங்கள் இன்றி, இயற்கை முறையில் விளைவிக்கப்படுவதால் ஏற்றுமதிக்கு உகந்த பயராகவும் உள்ளது.இந்தியாவிலிருந்து சிறுதானியங்கள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதிக ஊட்டச்சத்து  காரணமாக, சந்தைகளில் இவற்றின் தேவை பெரிதும் அதிகரித்து வருகின்றது. சிறுதானிய உற்பத்தி மற்றும் மதிப்புக் கூட்டுதலில் முன்னோடி மாவட்டமாக  விருதுநகர் மாவட்டம் திகழ்கிறது.மேலும், தமிழ்நாட்டில் அதிக அளவில் பயிரிடப்படும் சிறுதானியங்களை ஏற்றுமதி செய்வதற்காக உள்நாட்டு மற்றும் சர்தேச சந்தைகளை ஆய்வு செய்வது அவசியமாகின்றது.மேலும்,  உற்பத்தியாளர்களுக்கு அதிக விளை கிடைத்திடவும், ஏற்றுமதியை ஊக்குவிக்கும் பொருட்டும், விநியோகச் சங்கிலியின் செயல்திறனை அதிகரிக்கவும்,  விவசாயிகளுக்கு இது போன்ற பயிற்சிகள் மற்றும் உற்பத்தியாளர் வர்த்தகர்கள் இணைப்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டு  வருகின்றன.தென் மாவட்டங்களில் சிறுதானியங்கள், சிறுதானிய உணவு ஆரோக்கியமான உணவாக கருதப்படுகிறது. அதற்கான தேவை இருக்கிறது.எனவே, விவசாயிகள், வணிகர்கள்  வணிகம் செய்வது, மதிப்பிக்கூட்டல், வங்கி கடனுதவிகள், ஏற்றுமதி வாய்ப்புகள் உள்ளிட்டவைகளை நன்கு அறிந்து கொண்டு பயன் பெற  வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை ஆணையர் அவர்கள் தெரிவித்ததாவது:தமிழ்நாடு அரசு, இந்திய அளவிலே முதல் முறையாக வேளாண்மைக்காக 5 முறை தனியாக நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து,   வேளாண் உற்பத்தியை பெருக்குவதற்கும், வேளாண்மை பொருட்களை மதிப்பு கூட்டி சந்தைப்படுத்தி, வேளாண் பெருமக்களுக்கு உரிய விலை கிடைப்பதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் தான் இந்த உற்பத்தியாளர் மற்றும் வணிகர்களுக்கான இணைப்பு கூட்டம் இன்றைக்கு நடைபெறுகிறது. இது போல் இணைப்பு கூட்டங்கள் தமிழ்நாட்டில் பல்வேறு மண்டலங்களில் நடைபெற்று வருகிறது.இந்த நிகழ்ச்சியினுடைய நோக்கம் என்னவென்றால், வேளாண் பெருமக்களுக்கு அவர்களின் விளை பொருட்களுக்கு, சரியான விலை நிர்ணயித்து வாங்குபவரை கண்டறிந்து, அவர்களுடைய பொருளை சரியான விலைக்கு விற்று உரிய விலையை பெற வேண்டும் என்பதும், தொழில்நுட்ப உரைகள் மற்றும் தொழில்நுட்ப கருத்தாய்வுகளில் விவசாயிகள் தங்களது அறிவை மேம்படுத்தி, விவசாயத்தில் மதிப்புக் கூட்டுதல் போன்ற அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு வேளாண் பெருமக்கள் செல்வதை ஊக்கப்படுத்துவதற்காகவும், இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. சிறுதானிய உற்பத்தியை ஊக்குவிக்க 2023-ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 2023 ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ளது. மேலும், இந்திய அரசு தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக சிறுதானியங்களை சேர்த்துள்ளது.அதன்படி, தமிழ்நாடு அரசு இந்த சிறுதானிய இயக்கத்தின் கீழ், மதிப்பு கூட்டல் நிறுவனங்களுக்கு  இயந்திரங்களை வாங்குவதற்காக 75 சதவீதம் மானியத்துடன் கூடிய நிதி உதவியை வழங்கி வருகிறது.அந்த வகையில் இதுவரை 31 பயனாளிகள் ரூ.3.05 கோடி மதிப்பிலான மானியங்களை பெற்று தொழில்களை தொடங்கி இருக்கிறார்கள். மேலும், தமிழ்நாடு அரசின் நிதி நிலை அறிக்கையில், வேளாண் விளைப்பொருட்களுக்கான 100 மதிப்புக்கூட்டும் மையங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அந்த வகையில் இத்திட்டத்தின் மூலம் 10 கோடி வரையிலான திட்டங்களுக்கு 25 சதவீதம் மானியமும்,பெண்கள், தொழில் முன்னேற்றத்தில் பின்தங்கிய வட்டாரங்களில் தொழில் துவங்கும் தொழில் முனைவோர்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் என மொத்தம் 35 சதவிகிதம் மானியமாக அதிகப்பட்சம் ரூ.1.50 கோடி வழங்கப்படுகிறது.இந்த புவிசார் குறியீடு உரிமம் பெறுவதன் மூலமாக ஏற்றுமதிகளை நாம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து, மிகப்பெரிய அந்நிய செலவாணியை ஈட்ட முடியும். இதுபோன்று, தமிழ்நாடு அரசானது வேளாண் பெருமக்களின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இது போன்ற கூட்டங்களை விவசாய பெருமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், வேளாண்மை இணை இயக்குநர் திருமதி மு.சுமதி அவர்கள் சிறுதானிய பயிர்களின் சாகுபடியை ஊக்குவிக்கும் மத்திய மாநில திட்டங்கள் என்ற தலைப்பிலும்,வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் மண்டல தலைவர் திருமதி சோபனா அவர்கள் சிறு தானியப் பயிர்களின் ஏற்றுமதி வாய்ப்புகள், சந்தை தேவைகள் மற்றும் APEDA நிறுவனத்தின் பங்கு என்ற தலைப்பிலும்,வேளாண் ஏற்றுமதி தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டு கழகத்தின் முத்த மேலாளர் திரு.பரத்குமார் அவர்கள் சிறுதானியப் பயிர்கள் ஏற்றுமதியில் TNAPEX  நிறுவனத்தின் பங்கு என்ற தலைப்பிலும்,இந்திய சிறுதானியங்கள் ஆராய்ச்சி நிலையம் (ஹைதராபாத்) முனைவர் ஏ.சீனிவாஸ் அவர்கள் சிறுதானியங்கள் மதிப்புச் சங்கிலி மேம்பாடு மற்றும் சந்தை வாய்ப்புகள் என்ற தலைப்பிலும்,உணவு அறிவியல் துறை, சமுதாய அறிவியல் கல்லூரி இணைப் பேராசிரியர் (மதுரை)   முனைவர் A.கலைச்செல்வன் அவர்கள் வளர்ந்து வரும் சந்தைகளுக்கு ஏற்ற நவீன சிறுதானிய மதிப்பு கூட்டு தொழில்நுட்பங்கள்  என்ற தலைப்பிலும்,தாவர சுகாதார மையத்தின் அலுவலர் முனைவர் ஸ்ரீ ஹர்சா அவர்கள் சிறுதானியப் பயிர்களின் ஏற்றுமதி தரத்தை அடைவதற்கான பியர் சுகாதார நடவடிக்கைகள் என்ற தலைப்பிலும்,குறு,சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகத்தின் உதவி இயக்குநர் திரு. Gசிமியோன் அவர்கள் சிறுதானியப்பயிர்களின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் மதிப்புக் கூட்டுகலுக்கான திட்டங்கள் என்ற தலைப்பிலும்இளம் தொழில்முறை நிபுணர், வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் ((DGFT), கோவை     திருமதி B.ஹரிப்பிரியா அவர்கள் சிறுதானியப்பயிர்களின் ஏற்றுமதியை ஊக்குவிப்பதில் DGFT  நிறுவனத்தின் பங்கு என்ற தலைப்பிலும்,துணை இயக்குநர், இந்திய சிப்பம் கட்டும் நிறுவனம் (சென்னை) அவர்கள் ஏற்றுமதிக்கேற்ற தளத்தில் சிறுதானிய பயிர்களை சிப்பமிடும் முறைகள் என்ற தலைப்பிலும்,இந்திய ஏற்றுமதி கடன் உத்திரவாத நிறுவனம்(ECGC)), மதுரையின் கிளை மேலாளர் திரு.சுபாஷ் குமார் ஜா அவர்கள் சிறுதானியப் பயிர்கள் ஏற்றுமதியில் இந்திய கடன் உத்தரவாத ஏற்றுமதி நிறுவனத்தின் பங்கு என்ற தலைப்பிலும்,மதுரை வேளாண் தொழில்முனைவோர் ஊக்குவிப்பு மையம், மதுரை, முதன்மை செயல் அலுவலர் திரு.K.கணேசமூர்த்தி அவர்கள் சிறுதானியப்பயிர்களின் ஏற்றுமதியை ஊக்குவிப்பதில் MABIF  நிறுவனத்தின் பங்கு என்ற தலைப்பிலும்,UCORP Exim, திருச்சி திரு.உதயகுமார் அவர்கள் வேளாண் ஏற்றுமதி: உலக வர்த்தகத்தில் உங்களின் நுழைவாயில் என்ற தலைப்பிலும்,அங்கக வேளாண்மை ஆலோசர் திரு.மகேந்திரா எம் மணிவாசன் அவர்கள் அங்கக உணவுப்பொருட்கள் ஏற்றுமதிக்கான நடைமுறைகளும், சான்றிதழ்களும் என்ற தலைப்பிலும்,இணை பேராசிரியர் NIFTEM தஞ்சாவூர் முனைவர் அகல்யா அவர்கள் சிறுதானிய பயிர்களின் ஏற்றுமதில் மதிப்புக்கூட்டுதலின் இன்றியமையாமை என்ற தலைப்பிலும் கருத்துரை வழங்கினார்கள்.

Aug 07, 2025

வடக்கு தேவதானம் ஊராட்சியில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட வடக்கு தேவதானம் ஊராட்சியில் (06.08.2025) செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக வைக்கப்பட்டுள்ள தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டனர்.

Aug 07, 2025

பனை சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் மற்றும் பனை சார்ந்த சிறு தொழில் முனைவோர்கள் திட்டத்தில் சேர்ந்து பயன்பெற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாட்டின் மாநில மரமும் தமிழர்களின் வாழ்வோடும் மொழியோடும் இயைந்துள்ளதுமான பனை மரம், நிலத்தடி நீரை அதிகரித்தும், மண் அரிப்பினை தடுத்தும், மண்ணை  உறுதிப்படுத்தி வளப்படுத்தியும் மண்ணிற்குகந்த மரமாக விளங்குவதோடு, அடி முதல் நுனி வரை பயனளித்து மக்கள் பலரின் வாழ்வாதாரமாகவும் விளங்குகிறது. விருதுநகர் மாவட்டத்திற்கு 2025-26 ஆம் நிதி ஆண்டில் பனை மேம்பாட்டு இயக்கத்திட்டத்தில் ரூ.6.30/-இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.பனை மரத்தின் பரப்பினை அதிகரிக்கும் பொருட்டு விவசாயிகள் தங்கள் வயலின் வரப்புகளிலும், வயல் ஓரங்களிலும் நடவு செய்து பயன்பெறும் வகையில் பனை மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் தோட்டக்கலைத்துறை மூலம் 40,000 பனை விதைகள் விநியோகம் செய்ய ரூ.1.20/-இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு பயனாளி அதிகபட்சமாக 50 விதைகளும், பொது இடங்களில் தொண்டு நிறுவனங்கள்/ஊராட்சி மன்றங்கள் மூலம் நடுவதற்கு அதிகபட்சமாக 100 விதைகளும் 100 சதவீத மானியத்தில் வழங்கப்படும்.மேலும் 600 பனங்கன்றுகள் விநியோகம் செய்ய ரூ.60,000/- நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு பயனாளி அதிகபட்சமாக 15 பனங்கன்றுகளும், பொது இடங்களில் தொண்டு நிறுவனங்கள்/ஊராட்சி மன்றங்கள் மூலம் நடுவதற்கு அதிகபட்சமாக 30 பனங்கன்றுகளும் 100 சதவீத மானியத்தில் வழங்கப்படும்.பனை சாகுபடி அல்லது பனை சார்ந்த தொழில் செய்யும் விவசாயிகளில் தொடக்க பனை வெல்ல கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக உள்ள விவசாயிகளை பனை சாந்த சிறு தொழில் முனைவோர்களாக ஊக்குவிக்கும் பொருட்டு 160 சதுர அடியில் நிரந்தர மதிப்புக் கூட்டப்பட்ட பனைபொருட்கள் தயாரிக்கும் கூடம் அமைப்பதற்காக 50 சதவீதம் மானியத்தில் ஒரு அலகிற்கு அதிகபட்சமாக ரூ.50,000/- வீதம் 9 அலகிற்கு ரூ.4.50/- இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.எனவே விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பனை சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் மற்றும் பனை சார்ந்த சிறு தொழில் முனைவோர்கள் இத்திட்டத்தில் பயன்பெற https://tnhorticulture.tn.gov.in  என்ற இணையதளத்திலோ, உழவன் செயலியில் பதிவு செய்தோ  அல்லது அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகி உரிய ஆவணங்கள் சமர்ப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.     

Aug 07, 2025

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காரீப் பருவத்தில் வாழை மற்றும் வெங்காயம் பயிர்களுக்கு உடனடியாக காப்பீடு செய்து பயன்பெறலாம்.

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் (PMFBY) காரீப் 2016 பருவம் முதல் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் தொகுப்பு -XIV-ல் (Cluster- XIV)-ன் கீழ் வரும் நமது விருதுநகர் மாவட்டத்தில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஜெனரல் இன்சுரன்ஸ் கம்பெனி லிட்  (SBI  General Insurance Company Limited)  மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.மாநில அரசின் பங்களிப்புடன் மத்திய அரசால் செயல்படுத்தப்படும் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் காரீப் பருவம் ஆரம்பமாகியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் காரீப் பருவ தோட்டக்கலைப்பயிர்களான வாழைப்பயிருக்கு மங்களம், திருத்தங்கல், நத்தம்பட்டி ஆகிய குறுவட்டங்கள் மற்றும் வெங்காயம் பயிருக்கு காரியாபட்டி, முடுக்கன்குளம், மல்லி ஆகிய குறுவட்டங்களுக்கு பயிர் காப்பீடு செய்திட அறிவிப்பு வரப்பெற்றுள்ளது.இத்திட்டத்தின் கீழ் கடன் பெறும் விவசாயிகள் அவர்கள் கடன் பெறும் வங்கிகளில் கட்டாயமாகப் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்யப்படுவர்.  கடன் பெறா விவசாயிகள் விருதுநகர் மாவட்டத்தில் இத்திட்டத்தை செயல்படுத்தும் காப்பீட்டு நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலமாகவோ, பொது சேவை மையங்கள் மூலமாகவோ, வங்கிகள்/தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம்.பயிர் காப்பீட்டுத் தொகையில், விவசாயிகள் 5 சதவீதம் மட்டும் அதாவது காரீப் பருவ தோட்டக்கலைப் பயிர்களான வாழை ஏக்கருக்கு ரூ.4426/- மற்றும் வெங்காயம் ஏக்கருக்கு ரூ.1573/- எனவும் பயிர் காப்பீடு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.எனவே, விவசாயிகள்  கடைசி நேர தாமதத்தை தவிர்த்து உடனடியாக பயிர் காப்பீடு செய்து பயன் பெற்றுக் கொள்ளுமாறு  கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.விருதுநகர் மாவட்டத்தில் 2025-26 ஆம் ஆண்டின் நடப்பு காரீப்  பருவத்தில் வெங்காயப் பயிருக்கு பதிவு செய்ய கடைசி நாள்: 01.09.2025 எனவும் மற்றும் வாழைப்பயிர்களுக்கு பதிவு செய்ய கடைசி நாள் 16.09.2025 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் போது முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல்/விதைப்பு அறிக்கை, வங்கிக் கணக்கு புத்தகத்தின் (Bank Pass book) முதல் பக்க நகல், ஆதார் அட்டை (Aadhar Card) நகல் ஆகியவற்றை இணைத்து, கட்டணத் தொகையை செலுத்திய பின் அதற்கான இரசீதையும் பொதுச் சேவை மையங்கள்/ தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் பெற்றுக் கொள்ளலாம்.எனவே, விவசாயிகள் எதிர்பாராமல் ஏற்படும் இயற்கை பேரிடர்களையும், பூச்சி நோய் தாக்குதலால் ஏற்படும் இழப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளையும் கருத்தில் கொண்டு தங்களது பயிர்களுக்கான காப்பீட்டை (Crop Insurance)  அருகிலுள்ள பொதுச்சேவை மையங்களிலோ (CSC)  தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலோ (PACCS) அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலோ  உரிய காப்பீட்டு கட்டணம் (Premium) செலுத்தி தங்களது பயிர்களை காப்பீடு செய்து பயன் அடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Aug 06, 2025

பட்டாசு விபத்துக்களை தடுக்கும் பொருட்டு, பட்டாசு தொழிற்சாலை சங்க பிரதிநிதிகளுடன் நடைபெற்ற பாதுகாப்புக்குழு கூட்டத்தில் பாதுகாப்பான பட்டாசு உற்பத்தி செய்வது குறித்து அறிவுரை மற்றும் ஆலோசனை.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  (05.08.2025) தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சார்பில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில் பட்டாசு விபத்துக்களை தடுக்கும் பொருட்டு, பட்டாசு தொழிற்சாலை சங்க பிரதிநிதிகளுடன் நடைபெற்ற பாதுகாப்புக்குழு கூட்டத்தில்  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் மற்றும்  நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் ஆகியோர் பாதுகாப்பான பட்டாசு உற்பத்தி செய்வது குறித்து அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்கள்.இக்கூட்டத்தில் பட்டாசு தொழிற்சாலைகளில் மேற்கொள்ளப்படும் குழு ஆய்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பட்டாசு தொழிற்சாலைகளில் பாதுகாப்பு சம்பந்தமான விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும், தொழிலாளர்களின் உடலுக்கோ, உயிர்க்கோ பாதுகாப்பற்ற சூழல் ஏற்படாத வகையில் பாதுகாப்பான முறையில் பட்டாசு உற்பத்தி பணியை மேற்கொள்ள வேண்டும் என்றும், விபத்து இல்லாத சூழ்நிலையை பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் பட்டாசு தொழிற்சாலை சங்க பிரதிநிதிகளிடம் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.அரசு அலுவலர்கள் பட்டாசு தொழிற்சாலை நிர்வாகத்தினரிடமிருந்து தடைவிலக்கு ஆணை பெறுவதற்கான விண்ணப்பம் பெறப்பட்டவுடன் உடனுக்குடன் பரிசீலித்து, மீண்டும் தொழிற்சாலைகளில் உற்பத்தி  பணிகள் தொடங்க விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என அறிவுறுத்தினார்கள்.மேலும், எதிர் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு,விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலைகளில் அதிக பட்டாசு உற்பத்தி செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாலும், விதிமீறல்களால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாலும், அதனை தவிர்க்கும் பொருட்டு மிகுந்த பாதுகாப்புடனும் விதிமுறைகளை பின்பற்றியும், பட்டாசு உற்பத்திகளை மேற்கொள்ள அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமென அமைச்சர் பெருமக்கள் அவர்கள் தெரிவித்தார்கள்.இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.தெ.கண்ணன்,த.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார துறை இணை இயக்குநர்கள் திரு.ஆர்.ரவிச்சந்திரன், திரு.பி.ராஜ்குமார், வெடிபொருள் கட்டுப்பாட்டு அலுவலர், மாவட்ட தீயணைப்புத் துறை அலுவலர், தனி வட்டாட்சியர் (தீ.தொ.அ), அனைத்து பட்டாசு தொழிற்சாலைகள் சங்க பிரதிநிதிகள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Aug 06, 2025

புதிய அருங்காட்சியகம் ரூ.6.8 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருவதைஅமைச்சர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, பணிகள் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார்.

விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்க மைதானம் அருகில் அருங்காட்சியங்கள் துறை சார்பில் ரூ.6.8 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய அருங்காட்சியக கட்டிட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள் முன்னிலையில், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு (05.08.2025) நேரில் சென்று பார்வையிட்டு, பணிகள் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார்.அருங்காட்சியகத்தின் பயனை தொலைவில் உள்ள அனைத்து மாவட்ட மக்களும் பெற வேண்டும் என்கின்ற தமிழக அரசின் உயரிய நோக்கத்துடன் 23 மாவட்டங்களில் அருங்காட்சியகங்கள் செயல்பட்டு வருகின்றன. ஒரு மாவட்டத்தின் நிலவியல், தொல்லியல், வரலாறு, கலை, பண்பாடு, கனிம வளங்கள், இயற்கை அமைப்புகள், தாவர வகைகள் மற்றும் விலங்கினங்கள் இவற்றை ஒரே இடத்தில் அறிந்து கொள்கின்ற நல்வாய்ப்பினை பொது மக்கள் மற்றும் மாணவர்களுக்கு வழங்குகின்ற இடமாக மாவட்ட அருங்காட்சியகங்கள் திகழ்கின்றது.ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு அருங்காட்சியம் அமைத்தல் என்ற அரசின் சீரிய நோக்கத்தினை செயல்படுத்தும் விதத்தில் அருங்காட்சியகங்கள் துறை செயல்பட்டு வருகிறது.விருதுநகர் மாவட்டத்தில், அரசு அருங்காட்சியகம் 10.03.2001 அன்று தோற்றுவிக்கப்பட்டது. தற்சமயம்  விருதுநகரில் அரசு அருங்காட்சியகம்  வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகின்றது. இங்கு தொல்லியல், வரலாறு, புவியியல், இயற்கை வரலாறு, மானுடவியல், உயிரியல் மற்றும் விருதுநகர் மாவட்டத்தின் சிறப்புகளை விளக்கும் புகைப்படங்கள் எனப் பல்வகை பிரிவுகளைச் சார்ந்த சுமார் 1200 அரும்பொருட்கள் காட்சிக் கூடங்களிலும்(Showcases) அருங்காட்சியக இருப்பிலும் (Reserve Collection) உள்ளன.வாடகைக் கட்டிடத்தில் இயங்கிவரும் அருங்காட்சியகத்தை சொந்தக் கட்டிடத்தில் மாற்றியமைக்கவும், இருப்பில் உள்ள அனைத்து அரும்பொருட்களையும் காட்சிப்படுத்திடவும், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் என அனைவரும் எளிதில் வந்து செல்லக்கூடிய முக்கியமான இடத்தில் அமைக்க வேண்டிய கோரிக்கையின் அடிப்படையில் விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்க மைதானம் அருகில் அரசு அருங்காட்சியகம் அமைப்பதற்கு சுமார் 2 ஏக்கர்  நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, ரூ.6.8 கோடி மதிப்பில் புதிய அருங்காட்சியக அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.இந்த புதிய அருங்காட்சியக கட்டடத்தில் தரை தளத்தில் 6 காட்சி கூடங்கள், முகவுரை காட்சி கூடம், அரசியல் தொடர்பான காட்சி கூடம், முந்தைய வரலாற்று காட்சி கூடம், நாணயவியல் காட்சி கூடம், ஆய்தவியல் காட்சி கூடம், இசை மற்றும் கலை தொடர்பான காட்சி கூடம் மற்றும் 2 கல்வெட்டு காட்சி கூடங்களும், முதல் தளத்தில் சிறப்பு கண்காட்சி பகுதி, நிர்வாக அறை, குழு அறை,  கண்காணிப்பாளர் அறையும்,  இரண்டாம் தளத்தில் சேகரிக்கப்பட்ட பொருட்கள் வைப்பு அறையும் மொத்தம் 17,409 சதுரடி பரப்பளவில் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.அதன்படி, புதிதாக அமைக்கப்பட்டு வரும் அருங்காட்சியக கட்டடத்தை  நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள், (05.08.2025) நேரில் சென்று பார்வையிட்டு பணிகளின் முன்னேற்றம் குறித்து அரசு அலுவலர்களிடம் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.இந்நிகழ்ச்சியில், விருதுநகர் நகர்மன்ற தலைவர் திரு.ஆர்.மாதவன், காப்பாட்சியர் திரு.பால்துரை, செயற்பொறியாளர், உதவிபொறியாளர்கள், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Aug 06, 2025

மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊரகப் பகுதிகளில் தடையில்லாமல் குடிநீர் விநியோகம் வழங்குவது குறித்து, அமைச்சர் அவர்கள் ஆகியோர் தொடர்புடைய அரசு அலுவலர்களுடன் கலந்துரையாடி, அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்கள்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் கூட்டரங்கில் (05.08.2025) மாவட்டத்தில் உள்ள அனைத்து  ஊரகப் பகுதிகளில் தடையில்லாமல் குடிநீர் விநியோகம் வழங்குவது குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில்,   வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் மற்றும்  நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் ஆகியோர் தொடர்புடைய அரசு அலுவலர்களுடன் கலந்துரையாடி, அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்கள். இக்கூட்டத்தில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் குடிநீர் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள மேல்மட்ட நீர்தேக்கத்தொட்டிகள், கிணறுகள் உள்ளிட்டவைகளின் எண்ணிக்கை குறித்தும், அவற்றில் தற்போது செயல்பாட்டில் உள்ளவை குறித்தும், பழுதாக உள்ளவைகளின் எண்ணிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தனர்.மேலும், குடிநீர் சீராக வழங்குவதில் உள்ள சிரமங்கள் குறித்தும், குடிநீர் சீராக வழங்குவதற்கு தடையின்றி மின்சாரம்  வழங்குவது குறித்தும், பல்வேறு பழுதுகள் ஏற்படும் போது உடனடியாக சீர் செய்ய நடவடிக்கை எடுப்பது குறித்தும், பொது நிதியினை பயன்படுத்தி ஆழ்துளை கிணறு அமைத்து கூடுதலாக குடிநீர் சீராக வழங்க நடவடிக்கை எடுப்பது குறித்தும், அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கி குடிநீர் வழங்கப்படுவதை உறுதிப் படுத்த தேவையான நடவடிக்கை எடுப்பது குறித்தும் அரசு அலுவலர்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்கள்.தற்போது ஊரகப் பகுதிகளில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இல்லாத சூழ்நிலையில் குடிநீர் தொடர்பாக, பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் குறைகள், பத்திரிகை மூலம் கிடைக்கப்பெறும் குறைதீர்க்க வேண்டிய செய்திகளுக்கு அரசு அலுவலர்கள் உடனடியாக செயல்பட்டு அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டும்.குடிநீர் விநியோகம் தொடர்பாக ஊரக வளர்ச்சித்துறை மற்றும் குடிநீர் வடிகால் வாரியம் மிக கவனத்துடன் இருக்க வேண்டும்.மேலும், அனைத்து பகுதிகளிலும் தேவையான குடிநீர் வழங்குவதற்கு  உரிய நடவடிக்கைளை தொடர்ந்து மேற்கொண்டு கண்காணிக்க வேண்டும்.நடப்பாண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நடைபெறும் கட்டிடப்பணிகள் மற்றும் பிற பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என  அமைச்சர் பெருமக்கள் அவர்கள் தெரிவித்தனர்.இக்கூட்டத்தில், திட்ட இயக்குநர்(மா.ஊ.வ.மு) திரு.வீ.கேசவதாசன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) (பொ) திரு.பாலசுப்பிரமணியன், அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், தமிழ்நாடு குடிநீர் வாரிய அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Aug 06, 2025

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களான விருதுநகர்/ அருப்புக்கோட்டை/ சாத்தூர்/ திருச்சுழியில் 2025-ம் ஆண்டிற்கான ஓராண்டு/ ஈராண்டு தொழிற்பிரிவுகளில் சேர பயிற்சியாளர்கள் நேரடிச்சேர்க்கைக்கு 31.08.2025 அன்று வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது

விருதுநகர் மாவட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்களான விருதுநகர் / அருப்புக்கோட்டை / சாத்தூர்/திருச்சுழி ஆகியவற்றில்  2025-ம் ஆண்டிற்கான ஓராண்டு / ஈராண்டு தொழிற்பிரிவுகளில் பயிற்சியாளர்களின் நேரடிச்சேர்க்கை 31.07.2025 முடிய காலஅவகாசம் வழங்கப்பட்டிருந்தது.இச்சேர்க்கையில் பூர்த்தி செய்யப்பட்ட இடங்கள் போக காலியாகவுள்ள தொழிற்பிரிவுகளில் இன ஒதுக்கீடு மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ள மதிப்பெண்களின் தரவரிசை அடிப்படையில் நேரடிச்சேர்க்கைக்கான கால அவகாசம் 31.08.2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் உரிய அசல் கல்விச்சான்றிதழ்களுடன் நேரில் வருகை புரிந்து  இந்நேரடிச்சேர்க்கையில் மாணவ ஃ மாணவிகள் அதிகளவில் சேர்ந்து தொழிற்கல்வியினை பயின்று வேலை வாய்ப்பினை பெற்று பயன்பெறலாம். மேலும் இப்பயிற்சியில் ஓராண்டு தொழிற்பிரிவுக்கான கட்டணம் ரூ.185-ம் மற்றும் ஈராண்டு தொழிற்பிரிவுக்கான கட்டணம் ரூ.195-ம் நேரிடையாக செலுத்தப்பட வேண்டும்.இந்நிலையத்தில் பயிற்சி பெறும் தகுதியுள்ள அனைத்து பயிற்சியாளர்களுக்கும் விலையில்லா மிதிவண்டி / கட்டணமில்லா பேருந்து பயணச் சலுகை / மாதாந்திர கல்வி உதவித் தொகை ரூ.750/- (வருகைக்கு ஏற்ப) /சீருடை 2 செட் (தையல்கூலியுடன்) / மூடு காலணி 1 செட்  / பாடப்புத்தகங்கள் / வரைபட கருவிகள் மற்றும் பயிற்சியாளர் அடையாள அட்டை/ இவற்றுடன்  6-ம் வகுப்பு முதல் 10  வகுப்பு முடிய அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வி பெறும் ஆண் / பெண் பயிற்சியாளர்களுக்கு தமிழ்புதல்வன் ஃ புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ரூ.1000- உதவித்தொகை பெற்று வழங்கப்படும்.  இவ்வாய்ப்பினை 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மற்றும் அதற்கு மேல் கல்வித்தகுதியுடைய +1 /2/  பட்டய / பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற / தோல்வியடைந்த / இடைநின்ற மாணவ / மாணவியர் தொழிற்கல்வியினை பயின்று நல்ல ஊதியத்துடன் வேலை வாய்ப்பினை பெற தனியார் / மத்திய / மாநில அரசு தொழிற் நிறுவனங்களில் வளாகத் தேர்வு மூலம் வேலை வாய்ப்பு பெற்று தரப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார். 

Aug 05, 2025

உணவு பண்டங்கள் தரமாக உள்ளனவா என்பன குறித்து நேரில் கண்டறிவதற்காக நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகன திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று(04.08.2025) உணவு பாதுகாப்புத் துறை சார்பில் நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். உணவுகளின் தரம் குறித்து மக்கள் அறிந்துகொள்ளும் வகையில், உணவகங்களில் உணவு வகைகள் கலப்படமின்றி தயாரிக்கப்படுகின்றனவா, கடைகளில் விற்கப்படும் உணவு பண்டங்கள் தரமாக உள்ளனவா என்பன குறித்து நேரில் கண்டறிவதற்காக, நடமாடும் உணவு பகுப்பாய்வு கூட வாகன திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி உள்ளது. அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில், இந்த நடமாடும் பகுப்பாய்வுக்கூடம், ஆகஸ்ட் மாதம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை மற்றும் இதர அரசு விடுமுறைகள் தவிர்த்து, மாவட்டத்தின் அனைத்து ஒன்றியங்களுக்கும், மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளுக்கு பயணம் செய்யும். இந்த நடமாடும் உணவு பகுப்பாய்வுக்கூடம் இம்மாதம் 4-ம் தேதி விருதுநகர் நகராட்சி பகுதிகளிலும், 5 மற்றும் 6-ஆம் தேதிகளில் விருதுநகர் ஒன்றியத்திலும், 7-ம் தேதி அருப்புக்கோட்டை நகராட்சியிலும், 8-ம் தேதி அருப்புக்கோட்டை ஒன்றியத்திலும், 11-ஆம் தேதி காரியாபட்டி ஒன்றியத்திலும், 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் முறையே நரிக்குடி மற்றும் திருச்சுழி ஒன்றியங்களிலும், 14-ம் தேதி சாத்தூர் நகராட்சியிலும், 18-ம் தேதி வெம்பக்கோட்டை ஒன்றியத்திலும், 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் சிவகாசி மாநகராட்சி பகுதிகளிலும், 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் முறையே சிவகாசி மற்றும் வத்திராயிருப்பு ஒன்றியங்களிலும், 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் முறையே திருவில்லிபுத்தூர் ஒன்றியம் மற்றும் நகராட்சியிலும், 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் முறையே இராஜபாளையம் நகராட்சி மற்றும் ஒன்றியத்திலும் ஆய்வினை மேற்கொள்ளும். அப்போது, நுகர்வோர்கள் தமது வீடுகளில் உள்ள உணவுப் பொருட்களின் தரம் குறித்து அறிய உணவு மாதிரி கொடுத்து, அந்த இடத்திலேயே பகுப்பாய்வறிக்கையைப் பெற்றுக்கொள்ளலாம். உணவு வணிகர்களும் இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும், பள்ளிஃகல்லூரிகளில் உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடத்தப்படவுள்ளது.எனவே, பொது மக்கள் மற்றும் உணவுப் பொருள் விற்பனை செய்வோர் தங்கள் பகுதிக்கு இந்த வாகனம் வரும் போது, உணவுப் பொருட்கள் தொடர்பான தங்களின் சந்தேகங்களைக் கேட்டும், பரிசோதித்தும் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

Aug 05, 2025

“11-வது தேசிய கைத்தறி தினத்தைக்” கொண்டாடும் விதமாக 07.08.2025 அன்று மாவட்ட ஆட்சியரக அலுவலக வளாக தரை தளத்தில் சிறப்பு கைத்தறி கண்காட்சி நடத்தப்படவுள்ளது

1905-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி தொடங்கப்பட்ட “சுதேசி இயக்கத்தினை” நினைவுகூரும் வகையில், நாடு முழுவதும் நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வரும் கைத்தறி நெசவாளர்களை கௌரவிக்கும் விதமாகவும், இந்தியாவின் கைத்தறித் தொழிலை முன்னிலைப்படுத்தும் விதமாகவும் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 7ஆம் தேதி தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்படுகிறது.இந்த நாளில் கைத்தறித் தொழிலின் முக்கியத்துவம் மற்றும் தனித்தன்மை, நாட்டின் சமூக-பொருளாதார வளர்ச்சியில் கைத்தறித் துறையின் பங்களிப்பு, கைத்தறி தொழிலினை ஊக்குவித்தல் தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது.அதன்படி “11-வது தேசிய கைத்தறி தினத்தைக்” கொண்டாடும் விதமாக விருதுநகர் மாவட்டத்தில் 07.08.2025 வியாழக் கிழமையன்று மாவட்ட ஆட்சியரக  அலுவலகத்தின் தரை தளத்தில் சிறப்பு கைத்தறி கண்காட்சி நடத்தப்படவுள்ளது. மேற்படி நிகழ்வினை விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, கைத்தறி நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கவுள்ளார். மேலும், நெசவாளர்கள் அதிகம் வசிக்கும் சுந்தரபாண்டியத்தில் விருதுநகர் மாவட்ட சுகாதாரத் துறையுடன் இணைந்து, “வருமுன் காப்போம்” திட்டத்தின்கீழ் பொது மருத்துவம், மகளிர் மருத்துவம், குழந்தைகள் நலம், பல் மருத்துவம், சித்த மருத்துவம், இரத்த சர்க்கரை அளவு பரிசோதனை மற்றும் நவீன ECG பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதன் மூலம் சுமார் 850 நெசவாளர்கள்  பயனடைவர்.மேலும், கல்லூரி மாணவியர்களிடையே கைத்தறி இரகங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கைத்தறி இரகங்களைப் பிரபலப்படுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி “விருதுநகர் வே.வ.வன்னியப் பெருமாள் மகளிர் கலைக் கல்லூரியில்” நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

1 2 ... 87 88 89 90 91 92 93 ... 140 141

AD's



More News