விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் (11.08.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு அரசு திட்டப்பணிகள் மற்றும் நலத்திட்டங்களின் பயன்கள், கருத்துக்கள் குறித்து பயனாளிகளிடம் கலந்துரையாடினார்.அதன்படி, விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், சூலக்கரையில் செவித்திறன் குறைபாடுயுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளியில் 1 முதல் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர் விடுதியில் 32 மாணவர்கள் தங்கி பயில்வதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, பள்ளியின் செயல்பாடுகள், மாணவர்களுக்கு கற்பிற்கப்படும் கல்விமுறை, அடிப்படை வசதிகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.அதனை தொடர்ந்து, அருப்புக்கோட்டை ஊராட்சி சூலக்கரையில் உள்ள அன்னை சத்யா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் காப்பகத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய், காப்பகத்தின் செயல்பாடுகள், மாணவியர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம், தங்கும் வசதிகள், அவர்களது கல்வி விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.பின்னர், சூலக்கரை ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.17.25 இலட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுத்தினார். மேலும், அருகில் உள்ள அங்கன்வாடி மையத்தினை பார்வையிட்டு, அங்கு பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை, குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து பொருட்களின் தரம் குறிந்து பணியாளர்களிடம் கேட்டறிந்து ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள், உதவிப் பொறியாளர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், பட்டம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் (11.08.2025) பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை சார்பில் தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு, நடைபெற்ற நிகழ்ச்சியில் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினார்.விருதுநகர் மாவட்டத்தில் ஒரு வயது முதல் 19 வயது வரையுள்ள சிறுவர், சிறுமியர்களுக்கு குடற்புழுக்களால் ஏற்படும் இரத்த சோகை, உடல் சோர்வு, மனச்சோர்வு, மூளை வளர்ச்சி குன்றுதல் போன்ற பாதிப்பு ஏற்படாமல் குழந்தைகளை பாதுகாக்கும் பொருட்டு, அனைத்துக் குழந்தைகளுக்கும் குடற்புழு நீக்க மாத்திரை இன்று வழங்கப்படுகிறது.அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் ஒரு வயது குழந்தை முதல் 19 வயது வரையுள்ள 5,78,289 சிறுவர், சிறுமியர்களுக்கும் மற்றும் 20 முதல் 30 வயது வரை உள்ள 1,33,116 பெண்களுக்கும் குடற்புழுக்களால் ஏற்படும் இரத்த சோகை, உடல் சோர்வு, மனச்சோர்வு, மூளை வளர்ச்சி குன்றுதல் போன்ற பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கும் பொருட்டு, அனைத்துக் குழந்தைகளுக்கும் தேசிய குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் பணிகள் இன்று நடைபெற்று வருகிறது.மனித உடல் இயங்க வேண்டும் என்றால் அதிகமான சத்துக்கள் வேண்டும். மனிதனுடைய உடல் கட்டமைப்பு புரதச்சத்துக்களில் தான் வருகிறது. நமது உடல் எடையை பொறுத்தமட்டில் ஒரு கிலோ எடைக்கு சுமார் 1 கிராம் புரத சத்து உள்ள உணவுப்பொருட்களை சாப்பிட வேண்டும். நம்முடைய உடலுக்கு தேவையான புரதச்சத்தை விட குறைவாக நாம் பெறும் போது தான் உடல் வலிமை குறைகிறது.இந்நிலையில் நம்முடைய வயிற்றில் உள்ள குடற்புழுக்கள் ஒட்டுண்ணியாக செயல்பட்டு, நாம் உட்கொள்ளும் உணவில் இருந்து சத்துக்களை உறிஞ்சி கொள்ளும்.சுகாதார வசதிகள் குறைவாக உள்ள இடங்களில் மண்மூலம் குடற்புழு ஒட்டுண்ணிகளால் குடற்புழு தொற்று பரவுவதால், குழந்தைகளின் வளர்ச்சியிலும் மற்றும் உடல்நலனிலும் குறைபாட்டை ஏற்படுத்துகிறது. இதனால் அவர்களுக்கு இரத்தசோகை ஏற்படுகிறது. இதனால் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படுகிறது. எனவே, திறந்தவெளி கழிப்பிடத்தை பயன்படுத்தாமலும் நமது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்வதனாலும் இரத்தசோகை வராமல் தடுக்க முடியும். எனவே, திறந்தவெளி கழிப்பிடத்தை பயன்படுத்தாமலும் நமது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்வதனாலும் இரத்தசோகை வராமல் தடுக்க முடியும். இதனடிப்படையில், விருதுநகர், பட்டம்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் வைத்து அப்பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு மதிய உணவு உண்ட பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினார்.மேலும், இம்மாத்திரைகளை தவறாமல் வாங்கி மென்று உட்கொள்ளுமாறும் மற்றும் இதனை மருத்துவர்களும், பள்ளி ஆசிரியர்களும் உறுதி செய்ய வேண்டும் எனவும்,மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட சுகாதார அலுவலர் மரு.வே.யசோதாமணி, வட்டார மருத்துவ அலுவலர் மரு.ஆரோக்கிய ரூபன்ராஜ், மருத்துவர்கள், பணியாளர்கள், அரசு அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ / மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் ராஜீக்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் (09.08.2025) மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை மற்றும் வருவாய்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பழங்குடி இன முகாம்களில் வாழும் 61 நபர்களுக்கு பிறப்புச் சான்றிதழ்களையும், 3 நபர்களுக்கு மின்னணு குடும்ப அட்டைகளையும், 7 நபர்களுக்கு ஆதார் அட்டைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் வழங்கினார்.விருதுநகர் மாவட்டத்தில், வத்திராயிருப்பு வட்டத்தில் ராம் நகர், ஜெயந்தி நகர், அத்திக்கோவில் ஆகிய 3 முகாம்களிலும், இராஜபாளையத்தில் அய்யனார் கோவிலில் 1 முகாமிலும் என மொத்தம் 4 முகாமில் ஏறத்தாழ 200-ற்கும் மேற்பட்ட மலைவாழ் குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.சமீபத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மலைவாழ் பழங்குடியின மக்கள் வசிக்கும் முகாம்களில் ஆய்வு மேற்கொண்ட போது,ஆதார் அட்டைகள், குடும்ப அட்டைகள் வேண்டி கோரிக்கைகளை வைத்தனர்.அதன்படி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தொடர்புடைய கோட்டாட்சியர், வட்டாட்சியர் மற்றும் அரசு அலுவலர்களுக்கு உடனடி தீர்வுக்கு உத்தரவிட்டிருந்தார்.அந்த வகையில், பெரும்பாலும் முன்பு மலைவாழ் மக்களின் பிறப்பு வீட்டிலேயே நடந்ததாலும், மருத்துவமனையில் ஏற்படும் குழந்தை பிறப்புகளுக்கு அவர்களின் போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் பிறப்புச் சான்றிதழ்களை பெறாமல் இருந்ததையும், பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தினால் ஆதார் அட்டை, குடும்ப அட்டை போன்றவற்றை பெற இருந்த நடைமுறை சிக்கல்களை கண்டறிந்து, அதனை சரி செய்து பழங்குடியின மக்களுக்கு வழங்கிட நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதன்பேரில், உரிய அரசு அலுவலர்கள் உடனடியாக பரிசீலனை செய்து, அதில் உள்ள நடைமுறை சிக்கல்களை எல்லாம் களைந்து, அவர்களுக்கு 15 நாட்களுக்குள் பிறப்பு சான்றிதழ், ஆதார் அட்டை, மின்னணு குடும்ப அட்டை உள்ளிட்டவற்றை இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இதுவரை பிறப்புச் சான்றிதழ்கள் கிடைக்கப்பெறாமல் இருந்த சுமார் 16 முதல் 70 வயதுள்ள முதியவர்களுக்கு கூட இதன் மூலம் பிறப்புச் சான்றிதழ்கள் கிடைத்துள்ளது.இதற்காக மலைவாழ் மற்றும் பழங்குடியின மக்கள் அனைவரும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கும், தமிழக அரசுக்கும் தங்களின் நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.இந்நிகழ்வில், மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.உதயசங்கர், சிவகாசி கோட்டாட்சியர் திரு.பாலாஜி, வட்டாட்சியர்கள், பழங்குடியின மக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் வட்டம், சிவந்திபட்டி கிராமத்தில் வருவாய்த்துறையின் மூலம், இலவச வீட்டுமனைப் பட்டா ஆணை பெற்று, வீடுக்கட்டி குடியிருந்து வரும் 17 பயனாளிகளுக்கு இணையவழி பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அவர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று வழங்கினார்.தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து மாவட்டங்களிலும் அதிகமான பட்டாக்களை வழங்கிய மாவட்டமாக நமது மாவட்டம் தான் முதலிடத்தில் இருக்கிறது. இதுவரை சுமார் 40000 -த்திற்கும் மேற்பட்ட பட்டாக்களை வழங்கி இருக்கிறது.மேலும், உங்களுடன் ஸ்டாலின் முகாமானது மாவட்டத்தில் 15.07.2025 முதல் நடைபெற்று வருகிறது. உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் முகாமில், இலவச வீட்டுமனைப் பட்டா வேண்டி விண்ணப்பித்துள்ளவர்களுக்கு மனுவை உடனடியாக பரிசீலனை செய்து இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டு வருகிறது.அதனடிப்படையில், இன்று திருவில்லிபுத்தூர் வட்டம், சிவந்திபட்டி கிராமத்தில், வருவாய்த்துறையின் மூலம், இலவச வீட்டுமனைப் பட்டா ஆணை பெற்று, வீடுக்கட்டி குடியிருந்து வரும் 17 பயனாளிகளுக்கு இணையவழி பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் அவர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று வழங்கினார்.இந்நிகழ்வின் போது, சிவகாசி கோட்டாட்சியர் திரு.பாலாஜி, வட்டாட்சியர் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம், குல்லூர்சந்தை கிராமத்தில் (09.08.2025) நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், நடைபெற்ற பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.நலம் காக்கும் ஸ்டாலின் முகாமானது 02.08.2025 அன்று அமைச்சர் பெருமக்கள் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.தமிழகம் முழுவதும் ”நலம் காக்கும் ஸ்டாலின்” என்ற திட்டத்தின்கீழ் 1256 பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள், 17 சிறப்பு மருத்துவர்களைக் கொண்டு பிரதி வாரம் சனிக்கிழமை தோறும் நடைபெற உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 36 பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது.இம்முகாமில் உயர் இரத்த அழுத்தம், எக்கோ, எக்ஸ்ரே, நீரழிவுநோய் கண்டறிதல்,மார்பக புற்றுநோய், வாய் புற்றுநோய் பரிசோதனை, மின் இதய வரைபடம்,அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்,கருப்பை வாய் பரிசோதனை, காச நோய் மற்றும் தொழு நோய், சிறுநீரக நோய் பரிசோதனை, உள்ளிட்ட 24 வகையான இரத்த பரிசோதனைகளும் மற்றும் பொது மருத்துவம், மகளிர் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், கண் மருத்துவம், இயன்முறை மருத்துவம், நீரழிவுநோய் மருத்துவம்,பொது அறுவை சிகிச்சை, குழந்தை மருத்துவம், தோல் மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம், கதிரியக்கவியல் மருத்துவம், சித்தா மருத்துவம், எலும்பு மருத்துவம், இருதய மருத்துவம், பல் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம் போன்ற இலவச சிறப்பு மருத்துவ சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், இம்முகாமில் மேலே குறிப்பிட்டுள்ள பரிசோதனைகள் மட்டும் இன்றி முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் பதிவு செய்தல், மாற்று திறனாளிகளுக்கான அரசு அடையாள அட்டை வழங்குதல், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான தொழிலாளர் நல வாரியத்தின் உறுப்பினர் அடையாள அட்டை வழங்குதல் மற்றும் வருவாய்துறையினர் மூலமாக வருமானச் சான்றிதழ் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.அதன்படி, இன்று அருப்புக்கோட்டை வட்டம், குல்லூர்சந்தை கிராமத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், நடைபெற்ற பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமில், மூன்று மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிஅடையாளஅட்டையினைமாவட்டஆட்சித்தலைவர்அவர்கள்வழங்கினார்.இந்நிகழ்வில், விருதுநகர் மாவட்ட சுகாதார அலுவலர் மரு.யசோதாமணி, வட்டாட்சியர், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே சாட்சியாபுரத்தில் அமைந்துள்ள சிதிலமடைந்த 72 அரசு அலுவலர் வாடகை குடியிருப்பு கட்டிடங்கள் அகற்ற அனுமதி தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், மதுரை வீட்டு வசதி பிரிவிற்குட்பட்ட விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே சாட்சியாபுரத்தில் அமைந்துள்ள சிதிலமடைந்த 72 அரசு அலுவலர் வாடகை குடியிருப்பு கட்டிடங்கள் சேதமடைந்து வசிக்க தகுதியற்ற நிலையில் உள்ளன. ஆபத்தான இந்த குடியிருப்புகளை இடித்து அப்புறப்படுத்த தற்போது அரசு அனுமதி வழங்கியுள்ளது.இது குறித்து மதுரை வீட்டு வசதி பிரிவு, செயற்பொறியாளர் (ம) நிர்வாக அதிகாரி அவர்கள் விடுத்துள்ள செய்தி குறிப்பு - விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சாட்சியாபுரத்தில் அமைந்துள்ள சிதிலமடைந்த 72 அரசு அலுவலர் வாடகை குடியிருப்பு கட்டிடங்கள் பழுதடைந்து குடியிருக்கத்தக்க இயலாத நிலையில் உள்ளதால் இடித்து இக்கட்டிடங்கள் அப்புறப்படுத்தப்பட உள்ளன.இப்பணிக்கு அரசு துறை கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்திய அனுபவம் வாய்ந்தவர்கள் 11.08.2025 முதல் https://tntenders.gov.in/ என்ற இணையதள முகவரியில் ஏல விபரங்களை பார்த்து மேற்படி ஏலத்தில் கலந்து கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (07.08.2025) தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், 2025-ஆம் ஆண்டுக்கான மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிக்கான இணைய வழியில் விண்ணப்பிக்க QR குறியீட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் வெளியிட்டார்.முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் - 2025 (Chief Minister’s Trophy Games - 2025) அனைத்து மாவட்ட மற்றும் மண்டல அளவில் வருகின்ற 22.8.2025 முதல் 12.9.2025 வரை நடத்தப்படவுள்ளன. இப்போட்டிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு பணியாளர்கள் என ஐந்து பிரிவுகளில் ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கும் வகையில், மாவட்ட அளவில் 25 வகையான விளையாட்டுப் போட்டிகளும், மண்டல அளவில் 7 வகையான விளையாட்டுப் போட்டிகளும், மாநில அளவில் 37 வகையான விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்படவுள்ளன. தனி நபர் போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1 இலட்சம், இரண்டாம் பரிசாக ரூ.75 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.50 ஆயிரம் வழங்கப்படும். குழு போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.75 ஆயிரம், இரண்டாம் பரிசாக தலா ரூ50 ஆயிரம், மூன்றாம் பரிசாக தலா ரூ.25 ஆயிரம் வழங்கப்படும். இப்போட்டிகளில் வழங்கப்படும் சான்றுகள் மூலம் சிறப்பு மதிப்பெண்கள் மற்றும் சலுகைகள் பெற இயலும்.தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் 19 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கும், 25 வயதிற்குட்பட்ட கல்லூரி மாணவர்களுக்கும், 15 வயது முதல் 35 வரை பொதுப் பிரிவினருக்கும், அனைத்து வயது மாற்றுத்திறனாளிகளுக்கும், தமிழ்நாடு அரசு மற்றும் அரசு நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளர்கள், தமிழ்நாட்டில் பணிபுரியும் ஒன்றிய அரசு பணியாளர்கள் ஆகியோருக்கும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படவுள்ளது.எனவே முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் விளையாட்டு வீரர்கள் அனைவரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளமான https://cmtrophy.sdat.in, https://sdat.tn.gov.in வாயிலாக 16.8.2025 க்குள் முன்பதிவு செய்து தனிநபர் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மாவட்ட அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம். ஆடுகளம் தகவல் தொடர்பு மையத்தை அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 9514 000 777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்வில் மாவட்ட விளையாட்டு அலுவலர் திரு.குமாரமணிமாறன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், விருதுநகர், சிவகாசி, திருவில்லிபுத்தூர் வட்டாரப் பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் (08.08.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதன்படி, விருதுநகர் நகராட்சி ஆத்துப்பாலம் அருகில் நீர்வளத்துறை வைப்பாறு வடிநிலைக்கோட்டம், விருதுநகர் மூலம் கௌசிகா நதியை ரூ.20.44 கோடி மதிப்பில் புனரமைத்து, நவீனமயமாக்கல் பணி மற்றும் வரத்து கால்வாய்களை தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்.திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம், திருவண்ணாமலை ஊராட்சியில் ஆவின் -க்கு சொந்தமான 60 ஏக்கர் நிலத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, அந்த நிலத்தினை எவ்வாறு பயன்படுத்தலாம் என்று அலுவலர்களிடம் கலந்துரையாடி அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.பின்னர், திருவில்லிபுத்தூர் வட்டம், மம்சாபுரம் பேரூராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, இரண்டு பயனாளிகளுக்கு புஞ்சை நில பட்டா மாறுதலுக்கான ஆணையினையும், 3 பயனாளிகளுக்கு வீட்டு வரி ரசீது நகலினையும், ஒரு பயனாளிக்கு மின்சார வாரியத்தில் பெயர் மாற்றம் செய்த நகலினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.இந்த ஆய்வின் போது, விருதுநகர் நகராட்சி ஆணையாளர், உதவி செயற்பொறியாளர்கள், வட்டாட்சியர் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ் வளர்ச்சிக்காகப் பணியாற்றி வரும் ஆர்வலர்களைக் கண்டறிந்து அவர்களின் தமிழ்த் தொண்டினைப் பெருமைப்படுத்தும் வகையில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ஆண்டுதோறும் மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் தமிழ் ஆர்வலரைத் தேர்வு செய்து தமிழ் செம்மல் விருது வழங்கப்பெற்று வருகின்றது. 2025ஆம் ஆண்டிற்கான தமிழ்ச் செம்மல் விருது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.விருதுநகர் மாவட்டத்தில் தமிழ் செம்மல் விருதுக்கான விண்ணப்பப் படிவத்தினை நேரிலோ தமிழ் வளர்ச்சித் துறையின் வலைத்தளத்திலோ (www.tamilvalarchithurai.tn.gov.in) கட்டணமின்றி பெற்றுக் கொள்ளலாம்.தன்விவரக்குறிப்புகளுடன் வட்டாட்சியர் வழங்கும் குடியிருப்புச் சான்றிதழ் அல்லது ஆதார் அட்டை (நகல்), நூல்கள், கட்டுரைகள், பெற்ற விருதுகள், தமிழ்ச்சங்கங்களின் பொறுப்பு, தமிழறிஞர் / தமிழ் அமைப்புகளின் பரிந்துரைக் கடிதம் மற்றும் 2 கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) அளவு புகைப்படம், ஆற்றிய தமிழ்ப் பணிகளுக்கான சான்றுகள் ஆகியவற்றை இணைத்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கிவரும் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் 25.08.2025-க்குள் அளிக்க வேண்டுமெனவும் நேரடியாக சென்னை தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில்அளிக்கப்பெறும்விண்ணப்பங்கள்ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட 450 கிராம ஊராட்சிகளில் சுதந்திர தினத்தை முன்னிட்டு15.08.2025 - அன்று கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் கீழ்க்காணும் கூட்டப் பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.1. கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல்.(01.04.2025 முதல் 31.07.2025 வரை),2. கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை3. தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல்4. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்5. அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-II6. ஜல் ஜீவன் திட்டம்7. இதர பொருட்கள்எனவே,15.08.2025 அன்று நடைபெறவுள்ள கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.