விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் FL-1 / FL-2 / FL-3 / FL-3A / FL-3AA / FL-4A மற்றும் FL-11 ஆகிய மதுபான உரிம ஸ்தலங்களை 2003-ம் ஆண்டைய தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் விதி 12 துணை விதி (1) The Tamil Nadu Liquor (Licence and Permit) Rules, 1981-ன்படி வள்ளலார் இராமலிங்கனார் நினைவு தினமான 01.02.2026 ஞாயிற்றுக் கிழமை அன்று (ஒரு நாள் மட்டும்) தற்காலிகமாக மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர் அவர்களால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேற்படி, உத்தரவினை மீறி செயல்படும் டாஸ்மாக் நிறுவனப் பணியாளர்கள் FL-1 / FL-2 / FL-3 / FL-3A / FL-3AA / FL-4A மற்றும் FL-11 ஆகிய மதுபான ஸ்தலங்களின் உரிமதாரர்களின் மீது (1) The Tamil Nadu Liquor (Licence and Permit) Rules, 1981-ன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
2026-2027 ஆம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற் பிரிவுகள் / தொழிற் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் துவங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன. www.skilltraining.tn.gov.inஎன்ற இணையதளம் மூலம் 29.02.2026 வரை விண்ணப்பிக்கலாம். இதற்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.2026-2027 ஆம் கல்வியாண்டிற்கு அங்கீகாரம் பெற ஒரு தொழிற்பள்ளி ஒரு இணையதள விண்ணப்பம் சமர்ப்பித்தால் போதுமானது. விண்ணப்பிக்கவுள்ள அனைத்து தொழிற்பிரிவுகள் / கூடுதல் அலகுகளுக்கு தேவையான விவரங்கள் அனைத்தும் ஒரேவிண்ணப்பத்தில் மட்டும் விண்ணப்பிக்கவேண்டும். மேலும், அங்கீகாரம் குறித்த தகவல் மற்றும் அறிவுரைகள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளலாம்.மேலும், கூடுதல் விவரங்களை, 044 -22501006 (113) என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது detischennai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அறிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி, ராக்லாண்ட் நினைவு திருமண மண்டபத்தில் (22.01.2026) தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில், மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில், சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் முன்னிலையில், நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நலவாரியத் தலைவர் டாக்டர் திப்பம்பட்டி.வெ.ஆறுச்சாமி அவர்கள் ஆய்வு மேற்கொண்டு, தூய்மைப்பணியாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.மேலும், இக்கூட்டத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பட்டு கழகம் (தாட்கோ) சார்பில், 40-தூய்மை காவலர்களுக்கு நல வாரிய அட்டைகளையும், 2-தூய்மை காவலர் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகையாக தலா ரூ.1,000/- வீதம் மொத்தம் ரூ.2,000/-னையும், சிவகாசி மாநகராட்சி சார்பில் 370 தூய்மை காவலர் மற்றும் பணியாளர்களுக்கு கையுறை, காலுறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களையும் தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நலவாரியத் தலைவர் டாக்டர் திப்பம்பட்டி.வெ.ஆறுச்சாமி அவர்கள் வழங்கினார்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நலவாரியம் மூலம் நிதியை ஒதுக்கீடு செய்து, அதனை முழுவதும் தூய்மை பணியாளர்கள் நலத்திற்கும், அவர்களின் குழந்தைகளின் கல்விக்கும் தான் செலவழிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.இந்த நலவாரியத்தில் தூய்மைப்பணியாளர்கள் பணியின் போது மரணமடைந்தால் ரூ.5 இலட்சமாக இருந்த தொகையை, ரூ.10 இலட்சம் என உயர்த்தப்பட்டுள்ளது. இயற்கை மரணமடையும் தூய்மை பணியாளர்களுக்கு ரூ.50 ஆயிரமாக இருந்த தொகையினை ரூ.1 இலட்சமாகவும், தூய்மைப்பணியாளர் பெண் குழந்தைகளின் திருமணத்திற்கு வழங்கப்பட்டு வந்த ரூ.25 ஆயிரத்தினை ரூ.50 ஆயிரமாகவும், குழந்தைகளின் கல்விக்கு வழங்கப்பட்டு வந்த மாதாந்திர உதவித்தொகை ரூ.1,500/-னை ரூ.3,000/- ஆகவும் உயர்த்தி வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.அதுமட்டுமல்லாமல், தூய்மைப்பணியாளர் குழந்தைகளுக்கு உயர்கல்வி உதவித்தொகை, கலைஞர் கனவு இல்லத்தில் சிறப்பு முன்னுரிமை, தூய்மைப் பணியாளர்களுக்கு மருத்துவத்திட்டம் என்று ஒவ்வொரு திட்டமாக தேடிப் பிடித்து உங்களை வாழ வைக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு பணியாற்றிக் கொண்டிருக்கின்ற நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு என்றென்றும் நன்றிக்கடனுடன் இருக்க வேண்டும்.மேலும் தூய்மை பணியாளர்கள் ஆகிய நீங்கள் உங்களுடைய குழந்தைகளை தயவு செய்து படிக்க வையுங்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உங்களுக்காக பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறார்.அதனால் உங்களுடைய குழந்தையை படிக்க வையுங்கள், கையுறை, முக கவசத்தை பயன்படுத்தி நோய் நொடி இல்லாமல் பாதுகாப்பாக இருங்கள். மேலும் நலம் காக்கும் ஸ்டாலின் என்ற திட்டத்தின் மூலமாக பல்வேறு முகாம்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. அதை பயன்படுத்திக்கொண்டு உங்களது உடல் நலத்தை பேணி பாதுகாத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கான வாழ்வாதாரத்தை கொடுப்பதற்கு என்றைக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு என்றும் உறுதுணையாக இருக்கும் என தமிழ்நாடு தூய்மைப்பணியாளர் நல வாரிய தலைவர் அவர்கள் தெரிவித்தார்.தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நலவாரியமானது, தூய்மை காவலர் மற்றும் பணியாளர்களுக்கு தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் முறையாக சென்றடைகிறதா என்பது குறித்து மாவட்டந்தோறும் தொடர்ச்சியாக ஆய்வு மேற்கொண்டு அதை உறுதி செய்து வருகிறது. மேலும், அவர்களிடமிருந்து குறைகளை கேட்டறிந்து அதனை நிவர்த்தி செய்தும், அவர்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து கொண்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் தெரிவித்து அதனை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.அந்த வகையில், இன்று விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர் நல வாரிய தலைவர் அவர்கள் இன்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நலவாரியம் மூலம் விபத்து மற்றும் இயற்கை மரண உதவித் தொகை, கல்வி உதவித் தொகை மற்றும் திருமண உதவித் தொகை, மகப்பேறு உதவித்தொகை, கண் கண்ணாடி உதவி, முதியோர் ஓய்வூதியம் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டைகள் மூலம் மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றது.இம்மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் தற்காலிக தூய்மை பணியாளர்களுக்கு மேற்கண்டவாறு பலன்கள் வழங்க ஏதுவாக தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நலவாரியத்தின் application.tncwwb.com என்ற இணையதளத்தில் விவரங்கள் பதிவேற்றம் செய்திடவும் தெரிவித்துக்கொள்கிறேன்.மேலும், நமது மாவட்டத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் மூலம் பல்நோக்கு மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது. உங்களுடைய கிராம பஞ்சாயத்தில் நடைபெறுகின்ற முகாமில் கலந்து கொண்டு, உங்களுடைய உடல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். இந்த முகாம்களில் ரத்த பரிசோதனை, இ.சி.ஜி, எக்கோ போன்ற எல்லா பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படும். அதனை தூய்மைப் பணியாளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் தூய்மைப் பணியாளர்களுக்கென்று தனியாக சிறப்பு பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை தூய்மைப் பணியாளர்கள் பயன்படுத்திக் கொண்டு, நல வாரிய அட்டை, முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு அட்டை போன்றவைகளை பெற்று பயனடையலாம். தமிழ்நாடு அரசின் மூலம் தூய்மைப்பணியாளர்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து திட்டங்களும் அவர்களுக்கு சென்றடையும் வகையில் அனைத்து முயற்சிகளையும் மாவட்ட நிர்வாகம் எடுக்கும் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், சிவகாசி மாநகராட்சி ஆணையர் திரு.சரவணன், தாட்கோ மேலாளர் திருமதி மஞ்சுளா, சிவகாசி மாநகராட்சி துணை மேயர் திருமதி விக்னேஷ் பிரியா, மாநகர் நல அலுவலர் மரு.ஸ்ரீ.தேவி, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள், சிவகாசி மாநகராட்சி மற்றும் சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் பணிபுரியும் சுமார் 500-க்கும் மேற்பட்ட தூய்மை காவலர்கள் மற்றும் தூய்மைப்பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டத்தில் கே.எம்.எஸ் 2025-2026 பருவத்தில் விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்வதற்கு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் வத்ராப், கான்சாபுரம், முஷ்டாக்குறிச்சி, இராமசாமியாபுரம், தம்பிப்பட்டி, தேவதானம், சேத்தூர், மேட்டுப்பட்டி, சுந்தரபாண்டியம், முடுக்கன்குளம் மற்றும் சென்னிலைக்குடி ஆகிய இடங்களில் 11 (பதினொன்று) நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்து செயல்பட்டு வருகின்றன. மேலும், தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள மேலூர் துரைச்சாமியாபுரம், அயன்கொல்லங்கொண்டான், ஜமீன்நல்லமங்களம், கோவிலூர், முகவூர், கம்மாப்பட்டி, கீழகாஞ்சிராங்குளம் மற்றும் ஏ.முக்குளம் ஆகிய பகுதிகளில் 8 (எட்டு) நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட உள்ளன. அவ்வாறு கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கான தொகை குவிண்டால் ஒன்றுக்கு சன்ன ரகம் (GR”A”) ரூ.2545/- மற்றும் பொது ரகம் (common) ரூ.2500/-ம் விவசாயிகள் வங்கிக் கணக்குகளில் ECS மூலம் வரவு வைக்கப்படும். எனவே, விருதுநகர் மாவட்ட அனைத்து விவசாயிகளும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் செயல்படுத்தப்படும் மேற்குறிப்பிட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அறுவடை செய்த நெல்லினை விற்பனை செய்து பயனடையுமாறும், நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் நெல்லினை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். மேலும் வியாபாரிகள் நெல் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், நெல் கொள்முதல் தொடர்பாக தேவையான விபரங்களுக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலக தொலைபேசி எண். 04562 252607-ல் தொடர்பு கொள்ளலாம் எனவும் மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் (20.01.2026) வேளாண்மைத் துறையில், தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்கத்திட்டத்தின் கீழ், சத்துமிகு சிறுதானியங்கள் குறித்த திட்ட விளக்க விழிப்புணர்வு பிரச்சார ஊர்திகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்க திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்தில் சத்துமிகு சிறுதானியங்களின் முக்கியத்துவத்தினை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் அறிந்து கொள்ளச் செய்யும் நோக்கத்தில் பிரச்சார வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த பிரச்சார வாகனங்களில் சிறுதானியத்தின் முக்கியத்துவம், சத்துமிகு தானியங்களின் மானிய திட்ட விளக்கங்கள், சிறுதானிய உணவு பயன்பாடு, அதன் நன்மைகள் குறித்த விபரங்கள், விளம்பரப் பலகைகள் மூலம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.இந்த பிரச்சார வாகனங்கள் அனைத்து வட்டாரங்களில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளது. அதன்படி இன்று 11 வட்டாரங்களுக்கு 8 வண்டிகள் மூலம் 20.01.2026 முதல் 24.01.2026 வரை சிறுதானிய சாகுபடிக்கான முக்கியத்துவத்தினையும், அதன் பயன்களையும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு 3 நாட்களுக்கு விருதுநகர் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களிலும் பிரச்சார வாகனம் செல்லவுள்ளது. இதில் சோளம், கேழ்வரகு, கம்பு, குதிரைவாலி, வரகு, சாமை, தினை போன்ற பயிர்களின் சாகுபடி மற்றும் சிறுதானியத்தின் முக்கியத்துவம் போன்றவற்றை ஒலி பெருக்கி மூலம் அனைத்து விவசாய பெருமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தவுள்ளது.சிறுதானிய உணவில் நார்ச்சத்து, வைட்டமின்கள் நிறைந்தவை. இவை நீரழிவு நோய் கட்டுப்பாடு, எலும்பு வலிமை, செரிமானம் மேம்பாடு, இருதய ஆரோக்கியம் போன்ற பல நன்மைகளை தருகின்றன. நஞ்சில்லா சிறுதானியங்கள் உணவு உட்கொள்வதன் மூலம் மனிதர்களின் ஆரோக்கியம் மேம்படுகிறது. சிறுதானிய சாகுபடி பரப்பினை அதிகரித்து, உற்பத்தியினை அதிகரிப்பதன் மூலம் ஊட்டச்சத்து மிகுந்த சிறுதானிய உணவு உட்கொள்வது அனைத்து தரப்பு மக்களுக்கும் இன்றியமையாததாக உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், வேளாண்மை இணை இயக்குநர் திரு.மோகன்தாஸ் சௌமியன், வேளாண்மை துணை இயக்குநர்/ மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவ.,) அ.அம்சவேணி, வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய அரசு திட்டம்) அ.நாச்சியார் அம்மாள் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டம், பிசிண்டி கிராமத்தில் நீர்வளத்துறை சார்பில் குண்டாற்றின் குறுக்கே ரூ.23.85 கோடி மதிப்பில் அணைக்கட்டு கட்டுமானம் அமைத்து வக்கணாங்குண்டு கண்மாய் மற்றும் இதர கண்மாய்களுக்கு பாசன நீர் வழங்கும் கட்டுமானப் பணிகளை நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் துவக்கி வைத்தார்.விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டம், பிசிண்டி கிராமத்தின் வழியே செல்லும் குண்டாறு வடிநிலக் கோட்டம் குண்டாற்றின் குறுக்கே அணைக்கட்டு கட்டுமானம் அமைத்து தலை மதகின் வழியே வழங்கு வாய்க்கால் மூலம் வக்காணாங்குண்டு மற்றும் இதர கண்மாய்களுக்கு பாசன நீர் வழங்கும் திட்டத்திற்காக தமிழக அரசால் அரசாணை பெறப்பட்டு, அதற்கான பணிகள் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளன.அதன்படி, புதிதாக அமையவுள்ள இந்த அணைக்கட்டு 170 மீட்டர் நீளம், 2 மீட்டர் உயரத்துடன் விநாடிக்கு 42,000 கன அடி நீர் வெளியேற்றும் திறனுடனும், 4 எண்ணம் மணற்போக்கி(2.10 x 2.00 மீட்டர்) வினாடிக்கு 3240.00 கன அடி வெளியேற்றும் திறனுடனும், 2 எண்ணம் தலைமதகு (1.80 x 0.60 மீட்டர்), வினாடிக்கு 62 கன அடி வெளியேற்றும் திறனுடனும் அமையவுள்ளது.இந்த புதிய அணைக்கட்டு அமைப்பதன் மூலம் வக்கணாங்குண்டு கண்மாய், சித்துமூன்றடைப்பு கண்மாய், அல்லிகுளம் கண்மாய் மற்றும் அத்திகுளம் கண்மாய் ஆகிய கண்மாய்களுக்கு பாசன நீர் சென்று பிசிண்டி, வடகரை, கரிசல்குளம், வக்கணாங்குண்டு, சித்துமூன்றடைப்பு, அல்லிகுளம் மற்றும் அத்திகுளம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த சுமார் 284 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும்.மேலும், இவ்வணைக்கட்டினால் சுற்றியுள்ள கிராமங்களின் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து கிராம பொது மக்கள் மற்றும் கால்நடைகளின் குடிநீர் தேவைக்கும் பயனுள்ளதாக அமையும் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் திரு.மதன சுதாகரன், உதவி பொறியாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பாசன விவசாயிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டம், சென்னம்பட்டியில் நீர்வளத்துறைச் சார்பில், குண்டாறு வடிநிலக்கோட்டத்தில், ரூ.22.50 கோடி மதிப்பில் சென்னம்பட்டி இடது பிரதான கால்வாய் புனரமைத்தல் பணிகளை நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசு நீர் வளத்தைப் பெருக்குவதற்காக பல்வேறுத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. வானம்பார்த்த பூமியான நமது பகுதியில் அடிப்படையான பணியாக விவசாயம் இருக்கிறது. மண்ணையும், மழையையும், நம்பி இருக்கக்கூடிய இந்தபகுதியில் பாசனத்திட்டங்களை பெருக்கக்கூடிய நலத்திட்டங்கள் தேவை என்பதை உணர்ந்து தான் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி வட்டத்தில் உள்ள 19 கண்மாய்களுக்கும் மதுரை மாவட்டம் கள்ளிக்குடி வட்டத்தில் உள்ள 2 கண்மாய்களுக்கும் பாசனநீர் வழங்குவதற்காக மதுரை மாவட்டம், கள்ளிக்குடி வட்டம் சென்னம்பட்டி கிராமத்தில் கவுண்டாநதியின் குறுக்கே அணைக்கட்டு கட்டி வலது மற்றும் இடது கால்வாய்கள் 1986-1991 ஆம் வருடத்தில் அமைக்கப்பட்டது.சென்னம்பட்டி அணைக்கட்டின் இடது கால்வாயின் மொத்த நீளம் 15,785 மீட்டர் ஆகும். இக்கால்வாய் மூலம் 1686 ஏக்கர் பாசன நிலங்கள் பயன் பெறுகின்றன. சென்னம்பட்டி இடது கால்வாயில் உள்ள கட்டுமானங்கள் அனைத்தும் சிதிலமடைந்து இருப்பதால் கால்வாயிலிருந்து தண்ணீர் கசிந்து வீணாகிறது. வாய்காலில் மண் படிந்து மேடாக இருப்பதால் தண்ணீர் செல்லும் திறன் வெகுவாக குறைந்து கடைமடை வரை தண்ணீர் செல்வதில்லை. எனவே, இக்கால்வாயினை புனரமைப்பு செய்ய வேண்டியுள்ளதால் புனரமைப்பு பணிகளுக்கு அரசாணை மூலம் நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டு பணிகள் துவக்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தில் 6 மடைகள் மறுகட்டுமானம் மற்றும் மறுசீரமைத்தல், 3 பாலங்கள் மறுசீரமைத்தல், ஒரு மேலோட்ட நீர்போக்கி மறுகட்டுமானம் மற்றும் மறுசீரமைத்தல், ஒரு தொட்டிபாலம் மறுகட்டுமானம், 3 சுரங்கவழி நீர்போக்கி மறுகட்டுமானம் மற்றும் மறுசீரமைத்தல், 4 சுரங்கவழி ஒடை நீர்போக்கி மறுகட்டுமானம் மற்றும் மறுசீரமைத்தல், கரிசல்குளம் கண்மாயின் நீர் கட்டுப்படுத்தி மறுகட்டுமானம், தலை மதகு மறுகட்டுமானம் மற்றும் மறுசீரமைத்தல், சுமார் 550 மீட்டர் வழிபடுத்துச் சுவர்கள் கட்டும் பணிகள், 15,785 மீ. பிரதான வாய்க்கால் துார்வாரும் பணிகள் ஆகியவை மேற்கொள்ளப்பட உள்ளன.இப்பணிகள் மூலம் சென்னம்பட்டி இடது கால்வாயின், விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டத்தில் உள்ள 10 கண்மாய்களும், மதுரை மாவட்டம், கள்ளிக்குடி வட்டத்தில் உள்ள 2 கண்மாய்களும் போதிய பாசனநீர் பெற்று, சுமார் 1,686 ஏக்கர் பாசன நிலங்கள் பயனடைந்து அதிக பயிர் மகசூல் பெறும். மேலும், இப்பணிகள் மூலம் கண்மாய்களுக்கு தங்கு தடையின்றி தண்ணீர் வழங்கும் நிலையில் அப்பகுதிகளில் உள்ள கிராமங்களின் நிலத்தடிநீர் வெகுவாக உயர்ந்து கிணறு மற்றும் ஆழ்துளை கிணறு நிரம்பி பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் குடிநீர் பிரச்சனை தீர்வதுடன் இப்பகுதி கிராமமக்களின் வாழ்வாதாரம் உயரும் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர்(வைப்பாறு வடிநில வட்டம்) திரு.மதன சுதாகர், நீர்வளத்துறை செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர், உதவிப்பொறியாளர் கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பாசன விவசாயிகள், கிராம பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி சித்துராஜபுரம் கொங்கலாபுரத்தில் (18.01.2026) நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில், ரூ.58.50 கோடி மதிப்பில்விஸ்வநத்தம் – வெங்கடாசலபுரம் சாலை, சாத்தூர் - சிவகாசி – கழுகுமலை சாலை மற்றும் சிவகாசி – ஆலங்குளம் ஆகிய சாலைகளை இணைக்கும் சிவகாசி நகருக்கான வெளி வட்டச்சாலை அமைக்கும் பணிகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி அவர்கள் தலைமையில், சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.அசோகன் அவர்கள் மற்றும் சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் ஆகியோர் முன்னிலையில், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சாலை வசதிகளை மேம்படுத்துவதற்காவும், விரிவுபடுத்துவதற்காவும், சாலை பாதுகாப்பினை உறுதிபடுத்துவதற்கும் பல்வேறு திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகிறார்கள்.நம்முடைய விருதுநகர் மாவட்டத்தின் உடைய மையப் பகுதியில் இருக்கக்கூடிய இந்த சிவகாசி மாநகராட்சிக்கு ஒரு சுற்று வட்டச் சாலை அமைப்பது தான் நீண்ட காலமாக இங்கே இருக்கக்கூடிய இந்த போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்கும், பொது மக்கள் மிக சரியான வகையிலே இந்த மாநகராட்சிக்கு உள்ளே வந்து செல்வது என்பது எளிதாக ஒன்றாக அமைய வேண்டும் என்பதற்காக தான் நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பல்வேறு திட்டங்களை தீட்டியுள்ளார்.குறிப்பாக, இன்றைக்கு அடிக்கல் நாட்டபட்டுள்ள திருத்தங்கல் ரயில்வே மேம்பாலம், ஏற்கனவே, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ள சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலம் இவையனைத்தும் சிவகாசி மாநகராட்சியின் வளர்ச்சிக்கு மிக குறிப்பிடத் தகுந்த பணிகளாகும். இந்த சுற்றுச்சாலை சிவகாசி மாநகராட்சிக்கு மிக மிக முக்கியமான ஒன்றாக கருதப்பட்டு இந்த சுற்று வட்டார சாலை மூன்று கட்டங்களாக இன்றைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றது.இன்றைக்கு ஏறத்தாழ ரூ. 58 கோடி செலவில் இந்த இரண்டாம் கட்ட பணிகளுக்கு நாம் அடிக்கல் நாட்டி இருக்கின்றோம். அதனடிப்படையில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில், ரூ.58.50 கோடி மதிப்பில் விஸ்வநத்தம் – வெங்கடாசலபுரம் சாலை, சாத்தூர் - சிவகாசி – கழுகுமலை சாலை மற்றும் சிவகாசி – ஆலங்குளம் ஆகிய சாலைகளை சிவகாசி நகருக்கான வெளி வட்டச்சாலை அமைக்கும் பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டி பணிகள் துவக்கி வைக்கப்பட்டது. முதற்கட்ட பணிகளில் பெருமளவில் நடைபெற்று ஏறத்தாழ ரூபாய் 120 கோடி அளவில் எடுத்துக் கொள்ளப்பட்டு, 56 சிறு பாலங்களில் 50 பாலங்கள் நிறைவு பெற்று, அப்பணிகள் முழுமையாக நிறைவு பெறக் கூடிய நிலையில் இருக்கிறது.சிவகாசி வெளிப்புற சுற்றுச்சாலை அமையவுள்ள சாலையின் மொத்த நீளம் 33.520 கி.மீ ஆகும். இதனால் திருவில்லிபுத்தூர் - சிவகாசி சாலை, விருதுநகர் -சிவகாசி சாலை, சாத்தூர்-சிவகாசி - கழுகுமலை சாலை, சிவகாசி - ஆலங்குளம் சாலை, சிவகாசி - எரிச்சநத்தம் சாலை, சிவகாசி - கன்னிசேரி சாலை மற்றும் விஸ்வநத்தம்- வெங்கடாசலபுரம் சாலை உள்ளிட்டவை சுற்றாக இணைக்கப்படும். இதில் கீழத்திருத்தங்கல், ஆனையூர் என இரு பகுதிகளில் இரயில் தண்டவாளங்கள் செல்வதால் மேற்படி இடங்களில் இரயில்வே மேம்பாலம் அமைக்க இரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளது.நில எடுப்பு பணிகளில் தொழிற்சாலைகள் மற்றும் அதிகமான குடியிருப்பு பகுதிகள் பாதிக்கப்படுவதை தவிர்க்கும் பொருட்டு 33.481 கிமீ நீளத்திற்கு 147.00 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்த நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டு நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.இத்திட்டப்பணியானது, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் அவர்களால் 2024-25 நிதி நிலை அறிக்கை கூட்டத்தில் அறிவிக்கப்பட்டு, முதல் கட்டமாக கி.மீ.23/6 முதல் 32/520 வரை ஈஞ்சார் விலக்கு, வடபட்டி முதல் சுக்கிரவார்பட்டி வரை 9.92 கி.மீ. நீளத்திற்கு பணி நடைபெற்று வருகிறது.இரண்டாம் கட்டமாக கி.மீ. 12/500 முதல் 19/200 வரை 6.7 கி.மீ. தூரத்திற்கு ரூ.58.50 கோடி மதிப்பீட்டில் இன்று பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.சிவகாசி வெளி வட்டச்சாலை முடிவடையும் சமயத்தில் சிவகாசி நகரை சுற்றியுள்ள 20 க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் பெரிதும் பயனடைவார்கள் என மாண்புமிகு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.சிவகாசியின் வளர்ச்சி என்பது விருதுநகர் மாவட்டத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் குறியீடாக அமைகிறது. அந்த வகையில் என்றைக்கும் பொதுமக்களின் உடைய வளர்ச்சியில் அக்கறை கொண்டிருக்கக் கூடிய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நாம் என்றும் நன்றியோடு இருக்க வேண்டும் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், நெடுஞ்சாலைத்துறை திருநெல்வேலி கோட்ட பொறியாளர் திரு.லிங்குசாமி(திட்டங்கள்), கோவில்பட்டி உதவி கோட்டப் பொறியாளர் திருமதி உமாதேவி, கோட்டப்பொறியாளர் (க&ப, விருதுநகர்) திருமதி பாக்கியலட்சுமி, சாத்தூர் கோட்டாட்சியர் திரு. கனகராஜ், சிவகாசி வட்டாட்சியர் திரு.இலட்சம், சிவகாசி மாநகராட்சி துணை மேயர் திருமதி விக்னேஷ் பிரியா, முன்னாள் சிவகாசி ஊராட்சி ஒன்றியக் குழு துணைத்தலைவர் திரு.விவேகன் ராஜ், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி திருத்தங்கலில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை(இரயில்வே திட்டப்பணிகள்) சார்பில், ரூ.45.60 கோடி மதிப்பில் புதிய இரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கு, மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி அவர்கள் தலைமையில், சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.அசோகன் அவர்கள் மற்றும் சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் ஆகியோர் முன்னிலையில், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் (18.01.2026) அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.நீண்ட கால திட்டமாக இருந்தாலும், சமூக நலத் திட்டமாக இருந்தாலும் அதனை செவ்வனே நிறைவேற்றக் கூடிய அரசு தான் நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு.விருதுநகர் மாவட்டத்திலே கேந்திரமாக அமைந்திருக்கக்கூடிய இந்த சிவகாசி மாநகராட்சியின் வளர்ச்சி தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான ஒன்று என்று கருதி, விருதுநகர் மாவட்டத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு சிவகாசி மாநகராட்சிக்கு திட்டப் பணிகள் அமைக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் நம்முடைய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அதை நிறைவேற்றியுள்ளார். சிவகாசியின் நீண்ட கால கனவினை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நிறைவேற்றியுள்ளார். மேலும், செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த காலத்தில் முடிக்கப்படுமா என்ற ஐயத்தை முறித்து குறித்த காலத்திற்கு முன்னரே முடித்த அரசு.அதுபோன்று, தான் இந்த சிவகாசி- திருத்தங்கல் மேம்பாட்டு பணிகளுக்கு ரூ. 45.6 கோடி ஒதுக்கப்பட்டு, அதற்கான நிர்வாக அனுமதி பெறப்பட்டு, உடனடியாக அப்பணிகளை தொடங்குவதற்கு அடிக்கல் நாட்டும் பணிகளை மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். உள்கட்டமைப்பை செயல்படுத்துவதில் இந்த அரசு ஆர்வத்துடன் செயல்பட்டு வருகிறது. சிவகாசியும், திருத்தங்கலும் மறுமலர்ச்சியினை பெறுகிறது. மக்கள் நீண்ட காலமாக கேட்டு கொண்டுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றி கொண்டுள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்.திருத்தங்கல் கடவு எண் 424-ல் உள்ள பாதை இரயில் போக்குவரத்திற்காக அடிக்கடி மூடப்படுவதால், பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது. மேலும் இப்பகுதி பல தொழிற்சாலைகள், பள்ளிகள், கல்லூரிகள் இயக்கும் இடமாக இருப்பதால், தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் மிகுந்த சிரமம் அடைகிறார்கள்.இதனை கருத்தில் கொண்டு, இன்று திருவில்லிபுத்தூர் - சிவகாசி - விருதுநகர் -அருப்புக்கோட்டை - திருச்சுழி - நரிக்குடி - பார்த்திபனூர் சாலை 23/6-ல் கடவு எண்.424-க்கு மாற்றாக சிவகாசி மற்றும் திருத்தங்கல் இரயில் நிலையங்களுக்கு இடையில் சுமார் ரூ.45.60 கோடி மதிப்பீட்டில் புதிதாக மேம்பாலம் கட்டும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.இந்த திட்டமிடப்பட்டுள்ள சாலை மேம்பால பணியானது ஸ்ரீவில்லிபுத்தூர் சிவகாசி-விருதுநகர் -அருப்புக்கோட்டை திருச்சுழி - நரிக்குடி பார்த்திபனூர் சாலை (மாநில நெடுஞ்சாலை 42) கி.மீ 23/6ல் அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரும் நிலையில் ஆலமலத்துப்பட்டி, செங்கமலநாச்சியார்புரம், புதுப்பட்டி, ஜமீன்சல்பட்டி நாரணபுரம், கீழ் திருத்தங்கல் செங்கமலப்பட்டி சுக்கிரவார்பட்டி மற்றும் அதிவீரன்பட்டி கிராம மக்கள் பயனடைவார்கள்.இந்த புதிய பாலமானது 8.5 மீ அகலத்தில் 15 தூண்களுடன் 804 மீ நீளத்தில் அமைக்கப்படவுள்ளது. பாலம் மொத்த 804 மீ நீளத்துடன், பாலத்தின் கண் 18.6மீ( 15 எண்ணம்), 13.6மீ (2 எண்ணம்), 17 ஓடுதளத்துடன், பயனுறு சாலையின் அகலம் 5.50 மீ நீளத்துடனும், 1216 மீ நீளத்திற்கு வடிகால் மற்றும் 2 குறும்பாலங்கள் அமைக்கும் பணியை உள்ளடக்கியுள்ளது.மேம்பாலம் மற்றும் பயனுறு சாலை அமைக்கும் பணிக்கு திருத்தங்கல் கிராமத்தில் 2489.5 ச.மீ மற்றும் கீழத்திருத்தங்கல் கிராமத்தில் 4170 ச.மீ என மொத்தம் 6659.5 ச.மீ நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.எனவே, இந்த பகுதியில் இடையூறு இல்லாமல் போக்குவரத்தை தடையின்றி மேம்படுத்துவதற்கு இந்த இரயில்வே மேம்பாலம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும்.சுமார் 1 கோடியே 31 லட்சம் மகளிருக்கு மகளிர் உரிமைத்தொகை, மகளிர் விடியல் பயணம், குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம், கல்லூரி மாணவர்களுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகை, மடிக்கணினி உள்ளிட்ட சமூக நலன் திட்டங்கள், அதே நேரத்தில் எதிர் காலத்தினை வடிவமைக்கும் வகையில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி தருகின்ற ஒரு அரசு தான் இந்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு.இம்மேலான, திட்டங்களுக்கு தாங்கள் அனைவரும் ஒத்துழைப்பை தர வேண்டும் எனத் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தலைமையில் (19.01.2026) நடைபெற்றது.இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலை வாய்ப்பு, விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நல உதவித்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்தகுடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்குச் சென்று, மாவட்ட ஆட்சியர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.இம்மனுக்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் சம்மந்தப்பட்டதுறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள்.மேலும், முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவுறுத்தினார்கள். தொடர்ந்து, திருவில்லிபுத்தூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு 2023-2024-ஆம் ஆண்டில் பால் வழங்கிய 327 கறவை உறுப்பினர்களுக்கு மிகை ஊதியமாக ரூ.8.50 இலட்சம் வழங்க ஆணையிடப்பட்டதைத் தொடர்ந்து, சங்கத்திற்கு அதிக பால் வழங்கிய 3-நபர்களுக்கு ரூ.67,081/- மதிப்பிலான காசோலைகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.மேலும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் 6 பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்களையும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஆனந்தி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திரு.காளிமுத்து, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி பிர்தௌஸ் பாத்திமா, அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.