விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டம், கல்குறிச்சி ஊராட்சி, சமத்துவபுரத்தில் (14.01.2026) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் முன்னிலையில், நிதி,சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் தலைமையில் சாதி, இன, மத என எவ்வித வேறுபாடுமின்றி அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து பங்கேற்கும் மயிலாட்டம், கரகம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் கூடிய சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, சமத்துவப் பொங்கல் விழா நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நம்முடைய சமத்துவபுரத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில், மிகச்சிறப்பான வகையிலே நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இந்த பொங்கல் விழாவிற்கு வருகை புரிந்துள்ள அனைவருக்கும் மனமார்ந்த பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணையின்படி, தமிழ்நாடு முழுவதும் சமத்துவப் பொங்கலாக கொண்டாட ஆணையிடப்பட்டதைத் தொடர்ந்து, இன்றைய தினம் மிகச் சிறப்பான முறையில் சமத்துவப் பொங்கல் கொண்டாடப்பட்டுள்ளதைத் தாங்கள் அறிவீர்கள்.இந்த பொங்கல் சமத்துவப் பொங்கல் என்றழைக்கப்பட ஒரே காரணம் இந்தியாவின் பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு பகுதிகளில் அந்தந்த நிலப்பகுதியையோ, அவர்கள் சார்ந்துள்ள சமுதாய மரபினை சார்ந்தோ அவர்களின் பாரம்பரிய மரபு படி ஒவ்வொரு பண்டிகையினையும் கொண்டாடுவது இயற்கை. தமிழ்நாட்டிலும் அது போன்றே. ஆனால், சாதி,மத,இன,பொருளாதார ரீதியில் எந்த வித பாகுபாடும் இல்லாமல், எந்த வித ஏற்றத்தாழ்வும் இல்லாமல் நாம் அனைவரும் தமிழர் நாம் அனைவரும் பேசக் கூடிய மொழி தொன்மையான தமிழ் மொழி. இது தமிழர் திருநாள்.உழவர் திருநாள். எனவே, இது தான் சமத்துவப் பொங்கல் நடைபெறக் கூடிய நாளாக இருக்கும். இது தான் உண்மையான சமத்துவ நாளாக இருக்கும் என்கிற வகையில் அமையப் பெற்றுள்ளது.இந்த பொங்கல் விழாவினை ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமாக கொண்டாடுவர்.பைசாகி என்று வட இந்தியாவில் கொண்டாடுவர். ஆனால், நம்முடைய தமிழ்நாட்டிலே இத்திருநாளை சூரியன் போக்கினை வைத்து, உழவர்களுக்கான அறுவடைத்திருநாளாக கொண்டாடுகிறோம். பொருளாதாரத்திலே 11.6 சதவீதம் என்ற வளர்ச்சி இலக்கினை அடைந்துள்ளோம் . இவ்வளர்ச்சியானது சமுதாயத்திலே உள்ள அடித்தட்டு மக்களின் வளர்ச்சியினையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். அது சமூக நலத்திட்டங்களால் மட்டுமே சாத்தியம் என்பதால் தான் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் எல்லா விதத் திட்டங்களையும் செயல்படுத்தியுள்ளார்.இந்த ஆண்டின் துவக்கத்தில் 1 கோடியே 13 இலட்சம் மகளிருக்கு மகளிர் உரிமைத் தொகை திட்டம் வழங்கப்பட்டுள்ள நிலையில், நீட்டிக்கப்பட்டு 1 கோடியே 33 இலட்சம் மகளிருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு மடிக்கணினிகளை நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கியுள்ளார். பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் முதல் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வரை எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எல்லா விதமானத் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார். இந்த தைத்திருநாள் அனைவருக்கும் மகிழ்ச்சிகரமானதாக அமையும் வகையில் என் இனிய மனமார்ந்த பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.இன்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விருதுநகர் மாவட்டத்தில் 450-கிராம ஊராட்சிகளிலும் சமத்துவப் பொங்கல் கொண்டாட ஆணையிட்டதைத் தொடர்ந்து, சமத்துவபுரத்தில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த ஆண்டு பொங்கல் திருநாளை இனிதே கொண்டாடும் வகையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சுமார் 6 இலட்சத்து 4 ஆயிரம் குடும்பங்களுக்கு தலா ரூ.3 ஆயிரம் வீதம் ரூ.181 கோடி வழங்கப்பட்பட்டுள்ளது. தொடர்ந்து, ஒரு கிலோ பச்சரிசி,ஒரு கிலோ சர்க்கரை,கரும்பு உள்ளிட்டவைகளை வழங்கியுள்ளார் நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்.அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்தார். தொடர்ந்து, சமத்துவபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள தந்தை ஈ.வெ.ரா.பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும், பொங்கல் பரிசுத் தொகுப்பினை நிதி,சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் பயனாளிகளுக்கு வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திரு.வீ.கேசவதாசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்(12.01.2026) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி-IV தேர்வில் தேர்ச்சி பெற்று, விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் இளநிலை உதவியாளர் பணியிடத்தில் தேர்வு செய்யப்பட்ட 5-தேர்வாளர்களுக்கு பணிநியமன ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S,. அவர்கள் வழங்கினார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில் (12.01.2026) நடைபெற்றது.இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலை வாய்ப்பு, விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நல உதவித்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்தகுடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்குச் சென்று, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்டதுறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள்.மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்கள். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு, மரணமடைந்த திருமதி கமலி என்பவரின் மகள் செல்வி யாசிகா என்பவருக்கு தீருதவித் தொகை ரூ.12 இலட்சத்திற்கான காசோலையினையும், வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு, மரணமடைந்த 2 நபர்களின் குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா ஒப்படைப்பு ஆணையினையும், தகுதியான மூன்று நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா ஒப்படைப்பு ஆணையினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். மேலும், குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர் (தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டம் 1986 மற்றும் குழந்தைத் தொழிலாளர் தடை செய்தல் மற்றும் முறைப்படுத்துதல் திருத்தச் சட்டம் 2016-ன் கீழ், மீட்கப்பட்ட 5 வளரிளம் பருவத் தொழிலாளர்களுக்கு தலா ரூ.40 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.2 இலட்சத்திற்கான காசோலையினையும், PMJJBY-திட்டத்தின் கீழ், தாமோதரன் என்பவருக்கு ரூ.2 இலட்சத்திற்கான காசோலையினையும், கட்டிட இடுபாடுகளில் சிக்கி உயிரிழந்த திரு.பூமிராஜன் என்பவரின் மகன் திரு.அஜித்குமார் என்பவருக்கு முதலமைச்சரின் நிவாரண நிதி ரூ.1 இலட்சத்திற்கான காசோலையினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 4-நபர்களுக்கு ரூ.19,200/- மதிப்பில் காதொலிக்கருவிகளையும், 5-நபர்களுக்கு ரூ.12,500/-மதிப்பில் கைக்கடிகாரங்ளையும் மொத்தம் ரூ.31,700/-மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஆனந்தி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திரு.காளிமுத்து, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி பிர்தௌஸ் பாத்திமா, அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் வீட்டில் உள்ள இயற்கை சார்ந்த தேவையில்லா பொருட்களை எரித்து பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையினை கொண்டாடி வந்துள்ளனர். ஆனால் தற்பொழுது போகி பண்டிகையின் போது பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப், காகிதம், இரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவதோடு இதனால் வெளிப்படும் நச்சுவாயுக்களால் மூச்சுதிணறல், கண் எரிச்சல் போன்ற நோய்களால் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்படுவதோடு விபத்துகளுக்கும் காரணமாக உள்ளது.எனவே, போகி பண்டிகையின் போது பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து காற்றின் தரத்தை பாதுகாத்து, சுற்றுச்சூழலை காத்திட பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் ,அவரைச்சார்ந்தோர்கள் மற்றும் தற்பொழுது இராணுவத்தில் பணிபுரியும் படைவீரர்களின் குடும்பத்தினருக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் 19.01.2026 அன்று முற்பகல் 10.00 மணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டரங்கில் நடைபெற உள்ளது.எனவே, விருதுநகர் மாவட்டத்திலுள்ள முன்னாள் படைவீரர்கள்/அவரைச் சார்ந்தோர்கள் மற்றும் தற்பொழுது இராணுவத்தில் பணிபுரியும் படைவீரர்களின் குடும்பத்தினர் மேற்படி சிறப்பு குறைதீர்க்கும் நாளன்று கலந்து கொண்டு தங்களின் குறைகள் பற்றிய விண்ணப்பங்களை இரட்டை பிரதிகளில் சமர்ப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் (F.L-1), F.L-2/F.L-3/ F.L-3A /FL-3AA மற்றும் FL-11 ஆகிய மதுபான உரிம ஸ்தலங்களை 2003-ம் ஆண்டைய தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் விதி 12 துணை விதி (1) The Tamil Nadu Liquor (Licence and Permit) Rules,1981-ன்படி 16.01.2026 (வெள்ளிக்கிழமை) அன்றும், குடியரசு தினமான 26.01.2026 (திங்கள் கிழமை) தற்காலிகமாக மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்களால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேற்படி உத்தரவினை மீறி செயல்படும் டாஸ்மாக் நிறுவனப் பணியாளர்கள் (F.L-1), F.L-2/F.L-3/ F.L-3A /FL-3AA மற்றும் FL-11 மதுபான ஸ்தலங்களின் உரிமதாரர்களின் மீது The Tamil Nadu Liquor (Licence and Permit) Rules 1981-ன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் மரு. என்.ஓ. சுகபுத்ரா , I A S,.. அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் புதிரை வண்ணார் சமூகத்தினருக்கு சாதிச்சான்றிதழ்கள், ஆதார், வாக்களார் அடையாள அட்டைகள் வழங்குவதற்கு சிறப்பு முகாம்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் கீழ்க்கண்ட நாட்களில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.விருதுநகர்-12.01.2026, சிவகாசி-20.01.2026, இராஜபாளையம்-21.01.2026, ஸ்ரீவில்லிபுத்தூர்-22.01.2026, வத்திராயிருப்பு-23.01.2026, வெம்பக்கோட்டை-27.01.2026, சாத்தூர்-28.01.2026, அருப்புக்கோட்டை-29.01.2026, காரியாபட்டி-30.01.2026,திருச்சுழி-30.01.2026.எனவே, மேற்கண்ட நாட்களில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (10.01.2026) அரசுப்பள்ளியில் பயிலும் 65-மாணவர்களுக்கு இந்தியாவில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகம் (NIT) இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் (IIT) மற்றும் பிற பொறியியல் கல்லூரிகளில் இளங்கலை பொறியியல் படிப்புகளில் (B.E / B.Tech) சேர்க்கை பெறுவதற்காக 26.12.2025 முதல் 10.01.2026 வரை 15-நாட்கள் நடைபெற்ற அகில இந்திய நுழைவுத் தேர்வு(JEE) பயிற்சி வகுப்பின் நிறைவு விழா மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டும் திசை திட்டத்தினை தொடங்கி வைத்து, இலச்சினையை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் வெளியிட்டார்,தொடர்ந்து, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பெறும் தொகுதி-IV தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயங்கள் மற்றும் புத்தகங்களையும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மூலம் பயின்று காவலர் தேர்வில் வெற்றி பெற்று உடற்தகுதி தேர்விற்கு தயாராகும் 25-மாணவர்களுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய தொகுப்பினையும் மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள் வழங்கினார். உங்களை சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். மாணவர்களுக்கு 15-நாட்கள் நடைபெற்ற அகில இந்திய நுழைவுத் தேர்வு(JEE) பயிற்சி வகுப்பு பயனுள்ள வகையில் அமைந்திருக்கும் என்று நினைக்கிறேன். இதற்கு உறுதுணையாக நின்ற அனைத்து ஒருங்கிணைப்பாளர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஒரு வாய்ப்பினை ஏற்படுத்தி தருவதால் அம்மாணவர்கள் சாதிப்பார்கள் என்ற நம்பிக்கையோடும், அனைவரின் கூட்டு முயற்சியோடும் ஏற்படுத்தப்பட்டதே இப்பயிற்சி வகுப்பு.போட்டித்தேர்வுகள் எவ்வாறு இருக்கலாம், எவ்வாறு தயாராவது என்பதே பற்றி அறிந்து கொள்வதற்கான ஒரு வாய்ப்பு தான் இந்த பயிற்சி வகுப்புகள்.நாம் நல்ல நிலையில் இருந்தால் நம்மால் முடிந்த உதவிகளை மற்றவருக்கு செய்ய முடியும் என்று எண்ணுவதே மனித இயல்பு. அதற்கு, தகுந்த கல்வி சூழலை அமைத்துக் கொண்டு, நல்ல பணியில் அமர்ந்து மற்றவருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தை வளர்ப்பதற்காக அமைக்கப்பட்டதே இந்நிகழ்ச்சி.ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் உதவியோடு இப்பயிற்சி வகுப்பு 15-நாட்களில் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தகட்டமாக தயாராவதற்கு ஒரு வருட பயிற்சி வகுப்புகள் திட்டமிடப்பட்டுள்ளன. பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இக்கல்வியாண்டில் பயிற்சி வகுப்புகள் துவங்கப்படவுள்ளன. மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும் ஒரு ஆயுதம் தான் கல்வி. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் மாணவர்களின் நலன் மற்றும் மேம்பாட்டிற்காக “நான் முதல்வன்” திட்டம் உட்பட பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம், மாணவர்களின் திறமைகளை மேம்படுத்தி, நாட்டின் செழுமைக்காக அவர்களின் சிறந்த திறமையைக் கண்டறிய வேண்டும். மாணவர்களின் எதிர்கால நலனுக்காக மாணவர்களின் திறன், கல்வித்திறன் மற்றும் மறைந்திருக்கும் திறமை ஆகியவற்றை மேம்படுத்த வேண்டும் என்பதாகும்.இத்திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு உயர்க்கல்வி படிப்புகள், அவை தொடர்பான வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்களை எளிதில் பெறும் வகையிலும் மாணவர்களுக்கான நுழைவுத்தேர்வுகள், எதிர்கால வேலைவாய்ப்புகள், உயர்கல்வி பிரிவுகள் மற்றும் படிப்புகள், வாய்ப்புகள் உள்ளிட்டவைகள் குறித்து மாணவர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.அந்த வகையில், ஒவ்வொரு பாடப்பிரிவிற்கும் 500 மாணவர்கள் என மொத்தமாக 1500 முதல் 1600 வரை மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அம்மாணவர்களுக்கு தொடர்ச்சியாக பயிற்சிகள் நடத்தப்படவுள்ளன. மாணவர்களின் ஒரே குறிக்கோள் கல்வி பயில்வதே.மேலும், அம்மாணவர்களை தேர்வுக்கு எவ்வாறு தயார் செய்வது? தொலைவில் இருந்து வரும் மாணவர்களுக்கு போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்து தருவது, ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்குவது என பல நோக்கங்களை கலந்துரையாடி ஒரே திட்டமாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.அந்த திட்டம் தான் திசை. இந்த திட்டமானது விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாதிக்க விரும்பும் மாணவர்களுக்கு உதவிகரமானதாக அமையும். நாமும் நல்வழியில் சென்று, மற்றவருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற மனப்பாங்குடன் மாணவர்கள் செயல்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.தொடர்ந்து, மாணவர்கள் தனித்தனி குழுக்களாகப் பிரிந்து உயர் அலுவலர்களுடன் கலந்துரையாடினர். அலுவலர்கள் மாணவர்களுக்கு எழும் சந்தேகங்களை நிவர்த்தி செய்து, மாணவர்களின் உயர்கல்வி பயில்வதற்கு உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினர்.இந்நிகழ்ச்சியில், துணை இயக்குநர்(திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம்) மரு.இரா.முருகன்,இ.வ.ப., மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு.கு.அரவிந்தன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திருமதி பிர்தௌஸ் பாத்திமா, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் திருமதி சு.ஞானபிரபா, உதவி இயக்குநர் (சுரங்கம்) திருமதி சுகாதா ரஹீமா, அரசு அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (10.01.2026) விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில், (10.01.2026) கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் ரூ.708 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்ட பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் திரு.சமீரன்,I A S., அவர்கள் தொடர்புடைய அரசு அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, விருதுநகர், சிவகாசி, சாத்தூர், வெம்பக்கோட்டை, அருப்புக்கோட்டை, திருச்சுழி, காரியாபட்டி மற்றும் நரிக்குடி ஒன்றியங்களைச் சார்ந்த 1,286 கிராமக்குடியிருப்புகள் மற்றும் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மற்றும் கயத்தாறு ஒன்றியங்களைச் சார்ந்த 45 கிராம குடியிருப்புகளுக்கான தாமிரபரணி ஆற்றை நீராதாரமாகக் கொண்ட புதிய கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள 1,331 ஊரகக் குடியிருப்புகளுக்கு தாமிரபரணி ஆற்றினை நீராதாரமாகக் கொண்ட கூட்டுக் குடிநீர்த் திட்டமானது ஜல் ஜீவன் மிஷன் நிதி மூலம் நிறைவேற்றப்படவுள்ளது.இத்திட்டத்தில் விருதுநகர் மாவட்டத்தில் இராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, விருதுநகர், சிவகாசி, சாத்தூர், வெம்பக்கோட்டை, அருப்புக்கோட்டை திருச்சுழி, காரியாபட்டி மற்றும் நரிக்குடி ஒன்றியத்தைச் சார்ந்த 1,286 குடியிருப்புகள் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் கயத்தாறு ஒன்றியத்தைச் சார்ந்த 45 குடியிருப்புகள் ஆக மொத்தம் 1,331 கிராம குடியிருப்புகள் பயன்பெற உள்ளன.இத்திட்டம் மூலம் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு கிராம குடியிருப்புகளில் வசிக்கும் நபர் ஒருவருக்கு 55 லிட்டர் என்ற அளவில் குடிநீர் வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது.இத்திட்டம் மூன்று சிப்பங்களாக பிரிக்கப்பட்டு, அதற்கான பணிகள் 88 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், மீதமுள்ள பணிகளை விரைந்து முடிப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.விருதுநகர் மாவட்டத்தில் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் குடிநீர் திட்டப்பணிகளை உரிய காலத்திற்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர தொடர்புடைய அரசு அலுவலர்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், தலைமை பொறியாளர் திரு.எம்.கணேஷ், மேற்பார்வை பொறியாளர் (தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்) திரு.ஆர்.ராமசாமி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (09.01.2026) அனைத்துத்துறை பொதுத் தகவல் அலுவலர்களுக்கு, தகவல் அறியும் உரிமைச் சட்டம் – 2005 தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I AS., அவர்கள் முன்னிலையில், மாநில தகவல் ஆணையர் திரு.வி.பி.ஆர்.இளம்பரிதி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.அரசு அலுவலர்களுக்கான தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வை அதிகரித்தல், குடிமக்கள் உரிமைகளைப் புரியவைத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு நடத்தப்படுகின்றது.விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து துறைகளைச் சார்ந்த பொதுத்தகவல் அலுவலர்களுக்கும் தகவல் அறியும் உரிமைச் சட்டம்-2005 குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் விதிகள் குறித்து விவரிக்கப்பட்டது.மனுதாரர்கள் 6(1)-ன்படி கோரும் தகவல்கள் தங்கள் அலுவலகத்தை சார்ந்தது அல்ல என்றால் 5 நாட்களில் 6(3)-ன்படி உரிய பொதுத் தகவல் அலுவலருக்கு அனுப்ப வேண்டும். மனுதாரர்களுக்கும் இது குறித்து தெரிவிக்கப்பட வேண்டும். அரசு துறைகள் தங்கள் அலுவலகம் சார்ந்த தகவல் என்றால் 30 நாட்களுக்குள் தகவல்கள் வழங்க வேண்டும். தகவல்கள் வழங்கும் அலுவலர் அவரது பெயர் மற்றும் கையொப்பம், பொது தகவல் அலுவலரின் சீல் கட்டாயம் இட வேண்டும். மனுதாரர்களுக்கு மேல் முறையீட்டு அலுவலர் பெயர் மற்றும் முகவரி குறிப்பிட்டு தெரிவிக்கப்பட வேண்டும். பிரிவு 7(3)-ன்படி தகவல்கள் வழங்கும் நிலையில் பக்கத்திற்கு ரூ.2/-வீதம் கணக்கிட்டு பணம் செலுத்தும் வழி வகைகள் தெரிவிக்க வேண்டும். தகவல் பெறும் உரிமைச்சட்ட பிரிவு 5(3)-ன்படி பொது தகவல் அலுவலரிடம் தனக்கு வேண்டிய தகவல் தொடர்பாக விவரங்களை மனுதாரர் கோரி வரும்போது அவருக்கு தேவையான நியாயமான உதவிகளை பொது தகவல் அலுவலர் வழங்க வேண்டும். தவறான தகவல்கள் மற்றும் திசை திருப்பும் தகவல்கள் வழங்கக்கூடாது. கட்டாயம் தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்களை பிரத்யேகமாக உள்ள தனிப்பதிவேடுகளில் பதிவு செய்ய வேண்டும்.பொது தகவல் அலுவலர் பெயர் மற்றும் மேல்முறையீட்டு அலுவலர் பெயர் குறிப்பிடப்பட்ட முகவரி பலகை தங்கள் அலுவலகத்தில் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும். ஆணையத்திலிருந்து விசாரணை அறிவிப்பு (சம்மன்) கிடைக்கப் பெற்றால் கட்டாயம் அரசு அலுவலர்கள் ஆணையம் முன்பு விசாரணைக்கு வருகை தர வேண்டும் எனத் தெரிவித்தார். தொடர்ந்து, நிலுவையிலுள்ள தகவல் அறியும் உரிமைச் சட்டம்-2005 வருவாய்த்துறை, கூட்டுறவுத்துறை, பள்ளிக்கல்வித்துறை, வட்ட வழங்கல் துறை ஆகிய துறைகளின் இரண்டாம் மேல்முறையீட்டு மனுக்கள் மீது அலுவலர்களிடம் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையின்போது 30 மேல்முறையீட்டு மனுக்கள் தொடர்பாக மனுதாரர்கள் மற்றும் தொடர்புடைய பொது தகவல் அலுவலர்கள் ஆகியோர்களிடம் விசாரணை நடைபெற்றது. விசாரணையின் முடிவில் பொது தகவல் அலுவலர்களுக்கு மாநில தகவல் ஆணையர் அவர்களால் தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த அறிவுரைகள் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.கருப்பையா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திருமதி பிர்தௌஸ் பாத்திமா, அனைத்துத் துறை பொதுத் தகவல் அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.