தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் - 2026-னை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் (SVEEP) மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, (01.04.2026) 208-திருச்சுழி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மாணவர்களுக்கான தேர்தல் விழிப்புணர்வு போட்டிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன. நிகழ்ச்சியின் சிறப்பம்சங்கள்:மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு. வீ.கேசவதாசன் மற்றும் மகளிர் திட்ட இயக்குநர் திரு. சு.இலக்குவன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், வாக்காளர் விழிப்புணர்வை வலியுறுத்தி மாணவர்களுக்கு ரங்கோலி, பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு திட்ட இயக்குநர்கள் பரிசுகளை வழங்கிப் பாராட்டினர். விழிப்புணர்வு செயல்பாடுகள்: மாதிரி வாக்குப்பதிவு: இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடு மற்றும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து மாதிரி வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் மாணவர்களுக்கு நேரடி விளக்கம் அளிக்கப்பட்டது. கலை நிகழ்ச்சிகள்: சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் மூவர்ண ஆடை அணிந்து, கோலாட்டம் மற்றும் விழிப்புணர்வு நடன நிகழ்ச்சிகள் மூலம் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை பறைசாற்றினர். உறுதிமொழி மற்றும் கையெழுத்து இயக்கம்: நிகழ்ச்சியின் நிறைவாக, "எனது வாக்கு விற்பனைக்கு அல்ல" மற்றும் "ஜனநாயக கடமையை தவறாமல் ஆற்றுவேன்" என்பதை வலியுறுத்தி மாணவர்களிடையே கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. தொடர்ந்து அனைவரும் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர், உதவித் திட்ட அலுவலர்கள், திருச்சுழி வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ), மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் (SEM) மற்றும் அரசு அலுவலர்கள், மாணவ-மாணவியர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
சட்டமன்றத் தேர்தல் - 2026 நடைபெறவுள்ளதையொட்டி, 18 வயது நிரம்பிய முதல்முறை வாக்காளர்கள், மாற்றுத்திறனாளிகள், மூத்த வாக்காளர்கள் மற்றும் திருநங்கைகள் என அனைத்துத் தரப்பு வாக்காளர்களிடையேயும் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், பொதுமக்கள் தேர்தலில் வாக்களிக்க எந்த வேட்பாளரிடமிருந்தும் பணமோ அல்லது பரிசு பொருட்களோ பெறாமல் கண்ணியமாக வாக்களிப்பதை வலியுறுத்தியும் விழிப்புணர்வு பேரணிகள், கையெழுத்து இயக்கம் மற்றும் ரங்கோலி வரைதல் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, விருதுநகர் புதிய பேருந்து நிலையத்தில், இன்று வாக்காளர் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் திருநங்கை வாக்காளர்கள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர்.பின்னர், நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில், சுமார் 100-க்கும் மேற்பட்ட திருநங்கை வாக்காளர்கள், பொதுமக்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு வாக்களிப்பதன் அவசியம் குறித்து, வாக்களிப்பது நமது உரிமை, கையூட்டு பெறாமல் வாக்களிக்க வேண்டும். நம்மை ஆள்பவரை நாமே தீர்மானிக்க வேண்டும். ஜனநாயக கடமையை நாம் ஆற்ற வேண்டும் என்ற வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தி சென்று, விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பி, விருதுநகர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக நகராட்சி அலுவலகம் வரை சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இந்நிகழ்ச்சியில், தேர்தல் பிரிவு அலுவலர்கள், அரசு அலுவலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டத்தில் வரும் 23.04.2026 அன்று நடைபெறவுள்ள சட்டமன்றப் பொதுத்தேர்தலை முன்னிட்டு, தேர்தல் கண்காணிப்புப் பணிகளுக்காக இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட அனைத்துப் பார்வையாளர்களும் தற்போது தங்களது பணிகளை முழுமையாகத் தொடங்கியுள்ளனர்.மாவட்டத்தில் உள்ள பிற சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஏற்கனவே பார்வையாளர்கள் வருகை தந்து கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதிகளுக்கான பொதுப் பார்வையாளராக ஏற்கனவே நியமிக்கப்பட்டிருந்த திரு. அனுப்குமார் யாதவ், I A S . அவர்களுக்குப் பதிலாக, புதிய பொதுப் பார்வையாளராக திரு. நவநீத் குமார், I A S . அவர்கள் நியமிக்கப்பட்டு, வருகை தந்து தனது பணிகளைத் தொடங்கியுள்ளார்.இதன் மூலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏழு சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட பார்வையாளர்கள் அனைவரும் வருகை தந்துள்ளதோடு, தேர்தல் பணிகள் அனைத்தும் முழுமையான கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.பார்வையாளர்கள் மற்றும் தொடர்பு விவரங்கள்: விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை: இத்தொகுதிகளுக்குப் பொதுப் பார்வையாளராக திரு. நவநீத் குமார், I A S., (9489985879) அவர்களும், செலவினப் பார்வையாளராக திரு. நாயன்ஜோதி நாத், இ.வ.ப. (9489985876) அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் விருதுநகர் பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில் தங்கியுள்ளனர்.சாத்தூர் மற்றும் சிவகாசி: இப்பகுதிகளுக்குப் பொதுப் பார்வையாளராக திரு. அரவிந்த் மீனா, I A S . (9489985871) அவர்களும், செலவினப் பார்வையாளராக திரு. அனில்குமார், இ.வ.ப. (9489985875) அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சாத்தூர் பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில் தங்கியுள்ளனர்.இராஜபாளையம் மற்றும் திருவில்லிபுத்தூர்: இப்பகுதிகளுக்குப் பொதுப் பார்வையாளராக திரு. உதயன் மிஷ்ரா, I A S . (9489985870) அவர்களும், செலவினப் பார்வையாளராக திரு. சுக்செயின் சிங், இ.வ.ப. (9489985874) அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் திருவில்லிபுத்தூர் பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில் தங்கியுள்ளனர். திருச்சுழி: இத்தொகுதிக்குப் பொதுப் பார்வையாளராக திரு. சஞ்சீவ் ஸ்ரீவாஸ்தவா, I A S . (9489985873) அவர்களும், செலவினப் பார்வையாளராக திரு. வாக்மரே ஜெய், இ.வ.ப. (9489985877) அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அருப்புக்கோட்டை பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில் தங்கியுள்ளனர். மாவட்ட ஒருங்கிணைந்த காவல் பார்வையாளர்:மாவட்டம் முழுமைக்குமான காவல் துறை கண்காணிப்புப் பணிகளுக்காக திரு. அகிலேஷ் குமார் சௌராசியா, இ.கா.ப. (94899 85878) அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சிவகாசி பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில் தங்கியுள்ளார். பொதுமக்கள் கவனத்திற்கு:தேர்தல் தொடர்பான புகார்களை பொதுமக்கள் மற்றும் வேட்பாளர்கள் மேலே குறிப்பிட்டுள்ள அந்தந்தத் தொகுதிக்குரிய பார்வையாளர்களின் தொலைபேசி எண்கள் வாயிலாகத் தெரிவிக்கலாம்.மேலும், தினமும் காலை 09.30 மணி முதல் 10.30 மணி வரை அந்தந்த முகாம் அலுவலகங்களுக்கு நேரில் சென்றும் பார்வையாளர்களைச் சந்தித்து முறையிடலாம். தேர்தல் முறைகேடுகள் குறித்து புகார் அளிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் மரு. என்.ஓ. சுகபுத்ரா, I A S. அவர்கள் தெரிவித்துள்ளார்.அனைத்துப் பார்வையாளர்களும் வருகை தந்துள்ளதால், தேர்தல் பணிகள் எவ்விதக் குறைபாடுகளுமின்றி நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026 - ஐ, முன்னிட்டு, அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் மேற்கொள்ளும் விளம்பரங்களை முறைப்படுத்தவும், கண்காணிக்கவும் விருதுநகர் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டிடத்தின் தரைத்தளத்தில் (Ground Floor) "ஊடகச் சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு" (MCMC) அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.இது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ள வழிகாட்டுதல்கள் பின்வருமாறு: 1. மின்னணு மற்றும் சமூக ஊடகங்களுக்கான விதிகள் (Electronic & Social Media): தொலைக்காட்சி, உள்ளூர் கேபிள் டிவி, வானொலி (FM), சமூக வலைத்தளங்கள் (Facebook, X, Instagram, YouTube), இணையதளங்கள், திரையரங்குகள், பொது இடங்களிலுள்ள டிஜிட்டல் திரைகள் மற்றும் மொபைல் போன் வழி குறுஞ்செய்திகள் (Bulk SMS), குரல் வழி அழைப்புகள் (Voice Calls) ஆகியவற்றில் விளம்பரம் வெளியிடும் முன்பாக கட்டாயம் MCMC அனுமதிச் சான்றிதழ் பெற வேண்டும்.விண்ணப்பிக்கும் காலக்கெடு:அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள்: விளம்பரம் வெளியிட உத்தேசித்துள்ள நாளுக்குக் குறைந்தது 3 நாட்களுக்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும்.சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் இதர அமைப்புகள்: குறைந்தது 7 நாட்களுக்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும். 2. அச்சு ஊடகங்களுக்கான விதிகள் (Print Media - நாளிதழ்கள்): சாதாரண நாட்களில் நாளிதழ்களில் வெளியாகும் விளம்பரங்களுக்கு முன்அனுமதி தேவையில்லை (அதன் செலவு வேட்பாளர் கணக்கில் சேர்க்கப்படும்). ஆனால், வாக்குப்பதிவு நாள் (Poll Day) மற்றும் அதற்கு முந்தைய நாள் (Poll Day-1) ஆகிய இரண்டு தினங்களில் நாளிதழ்களில் வெளியாகும் அனைத்து அரசியல் விளம்பரங்களுக்கும் கட்டாயம் MCMC அனுமதி பெற்றிருக்க வேண்டும். 3. விண்ணப்பிக்கும் முறை மற்றும் ஆவணங்கள்: விண்ணப்பதாரர்கள் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தரைத்தளத்தில் இயங்கும் MCMC அலுவலகத்தில் கீழ்க்கண்டவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும்:உரிய படிவத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம்.விளம்பரத்தின் மாதிரி நகல் (வீடியோ/ஆடியோ எனில் CD/Pendrive-ல் 2 பிரதிகள்; அச்சு விளம்பரம் எனில் மாதிரி தாள்).விளம்பரத்தின் உரை (Script) மற்றும் உத்தேச செலவு மதிப்பீடு.விளம்பரம் யாரையும் புண்படுத்தும் விதமாக இல்லை என்பதற்கான உறுதிமொழி மற்றும் பதிப்புரிமைச் சான்று. 4. சட்ட நடவடிக்கை மற்றும் கண்காணிப்பு:அனுமதியின்றி விளம்பரங்களை வெளியிடுவது மற்றும் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவது தேர்தல் விதிமீறலாகும். அனுமதிக்கப்படாத விளம்பரங்கள் கண்டறியப்பட்டால், அதன் செலவினம் வேட்பாளரின் தேர்தல் செலவுக் கணக்கில் சேர்க்கப்படுவதுடன், சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.எனவே, வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தேர்தல் ஆணையத்தின் இந்த நெறிமுறைகளை முழுமையாகப் பின்பற்றி, மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026 நடைபெறவுள்ளதை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள, 7 சட்டமன்றத் தொகுதிக்கான வேட்பு மனுத் தாக்கல் (30.03.2026) தொடங்குகிறது.இதனை முன்னிட்டு, சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் (தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம்) மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று முதல் தொடங்குகிறது. சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள், தங்களது மனுக்களைத் தாக்கல் செய்வதற்குத் தேவையான அனைத்து வசதிகளும் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தயார் நிலையில் உள்ளன.ஆய்வின் சிறப்பம்சங்கள்: பாதுகாப்பு ஏற்பாடுகள்: வேட்பு மனுத் தாக்கல் நடைபெறும் அறையைச் சுற்றி 100 மீட்டர் தொலைவிற்குள் வேட்பாளருடன் வரும் வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் நபர்களின் கட்டுப்பாடு குறித்து காவல் துறையினருக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டன.பதிவு முறைகள்: வேட்பு மனுத் தாக்கல் செய்யும் நிகழ்வு முழுமையாக வீடியோ பதிவு (Videography) செய்யப்படுவதையும், சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதையும் ஆட்சியர் உறுதி செய்தார். உதவி மையங்கள்: வேட்பாளர்களுக்குத் தேவையான படிவங்கள், உறுதிமொழிப் பத்திரங்கள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த விவரங்களை வழங்க பிரத்யேக உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளதை ஆய்வு செய்தார். அடிப்படை வசதிகள்: அலுவலகத்திற்கு வரும் வேட்பாளர்கள் மற்றும் பொதுமக்களுக்குத் தேவையான குடிநீர் மற்றும் நிழற்குடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முறையாகப் பராமரிக்க உத்தரவிடப்பட்டது.தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் முறையாகப் பின்பற்ற வேண்டும் என்றும், எவ்விதப் புகார்களுக்கும் இடமின்றி நேர்மையான முறையில் வேட்பு மனுத் தாக்கல் நடைபெற அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின் போது, சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் (தேர்தல் நடத்தும் அலுவலர்), வட்டாட்சியர்கள் மற்றும் தேர்தல் பிரிவு அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்திலுள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நாளை 30.03.2026 முதல் 06.04.2026 வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S,, அவர்கள் தெரிவித்துள்ளார்.வேட்புமனு தாக்கல் கால அட்டவணை மற்றும் இடங்கள்: இந்திய தேர்தல் ஆணையத்தால் தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, விருதுநகர் மாவட்டத்திலுள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நாளை 30.03.2026 (திங்கட்கிழமை) முதல் வேட்புமனுக்கள் பெறப்படும். வேட்பாளர்கள் காலை 11.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்களில் தங்கள் மனுக்களைத் தாக்கல் செய்யலாம்.வேட்புமனு தாக்கல் நடைபெறும் இடங்கள்:இராஜபாளையம்: இராஜபாளையம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம். ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி): ஸ்ரீவில்லிபுத்தூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம்.சாத்தூர்: சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் சாத்தூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம்.சிவகாசி: சிவகாசி சார் ஆட்சியர் அலுவலகம் மற்றும் சிவகாசி வருவாய் வட்டாட்சியர் அலுவலகம்.விருதுநகர்: விருதுநகர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம். அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் அருப்புக்கோட்டை வருவாய் வட்டாட்சியர் அலுவலகம்.திருச்சுழி: திருச்சுழி வருவாய் வட்டாட்சியர் அலுவலகம்.விடுமுறை நாட்கள் மற்றும் கடைசி நாள்: 1881 ஆம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின் கீழ், அரசால் பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ள 31.03.2026 (செவ்வாய்க்கிழமை), 01.04.2026 (புதன்கிழமை), 03.04.2026 (வெள்ளிக்கிழமை) மற்றும் 05.04.2026 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் வேட்புமனுக்கள் பெறப்படமாட்டாது.வேட்புமனுக்களைத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் 06.04.2026 (திங்கட்கிழமை) ஆகும்.பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்:நபர்களின் எண்ணிக்கை: வேட்புமனு தாக்கல் செய்ய வரும்போது, வேட்பாளருடன் சேர்த்து மொத்தம் 5 நபர்கள் மட்டுமே தேர்தல் நடத்தும் அலுவலரின் அறைக்குள் செல்ல அனுமதி உண்டு.வாகனக் கட்டுப்பாடு: தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தின் 100 மீட்டர் சுற்றளவிற்குள் 3 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். பாதுகாப்பு ஏற்பாடுகள்: வேட்புமனு தாக்கல் நடைபெறும் அனைத்து அலுவலகங்களிலும் சிசிடிவி (CCTV) கேமராக்கள் பொருத்தப்பட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.எனவே, வேட்புமனு தாக்கல் செய்ய வருகிறவர்கள் தேர்தல் நடத்தை விதிகளை (Model Code of Conduct) கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
கோடை காலம் தொடங்கியுள்ளதால், வெப்ப அலை தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் தேவையின்றி மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்லவும், கடின உழைப்பு மேற்கொள்ளவும் தவிர்க்க வேண்டும் உலக வெப்பமயமாதல் காரணமாக வெப்பநிலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள கீழ்க்கண்ட வழிமுறைகளை கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இலகுவான, வெளிர் நிறம் கொண்ட பருத்தி உடைகள் அணியவும், வெளியில் செல்லும் போது குடை, தொப்பி, கண்ணாடி, காலணிகள் பயன்படுத்த வேண்டும். அதிக வெப்ப நேரங்களில் (12 மணி – 3 மணி) வெளிப்புற வேலைகளை தவிர்க்கவும். பயணிக்கும் போது போதுமான குடிநீர் எடுத்துச் செல்லவும், தாகம் இல்லாவிட்டாலும் அடிக்கடி தண்ணீர் குடிக்கவும், உடலில் நீரிழப்பு ஏற்படுத்தும் ஆல்கஹால், தேநீர், காபி, கார்பனேற்றப்பட்ட பானங்கள் தவிர்க்கவும். லஸ்ஸி, நீர்மோர், எலுமிச்சைச்சாறு போன்ற நீர்ச்சத்து பானங்களை அதிகமாக எடுத்துக்கொள்ளவும். வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்க திரைச்சீலைகள் மற்றும் சன்ஷேட்கள் பயன்படுத்தவும், குழந்தைகள் மற்றும் செல்லப்பிராணிகளை நிறுத்தப்பட்ட வாகனங்களின் அருகில் விட வேண்டாம். வேலை நேரத்தில் யாராவது மயக்கம் அடைந்தால், உடனடியாக குளிர்ச்சியான இடத்திற்கு மாற்றி தண்ணீர் அல்லது உப்பு சர்க்கரை கரைசல் கொடுக்க வேண்டும். அவசர தேவைகளுக்கு 108 ஆம்புலன்ஸ் சேவையை தொடர்பு கொள்ளவும். வெப்ப அலை பாதிப்பு ஏற்பட்டால் அருகிலுள்ள அரசு மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார நிலையத்தில் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும். மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வெப்ப அலை பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான படுக்கை வசதிகள் மற்றும் உப்பு சர்க்கரை கரைசல் (ORS) போதுமான அளவில் தயாராக கையிருப்பு உள்ளன. பொதுமக்கள் மேற்கண்ட அறிவுரைகளை கடைப்பிடித்து வெப்ப அலை தாக்கத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்.மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் முழுமையாக அமலில் உள்ளன. இதன்படி, உரிய ஆவணங்களின்றி ரூ.50,000/- (ரூபாய் ஐம்பதாயிரம்)-க்கு மேல் ரொக்கப் பணமோ அல்லது ரூ.10,000/- (ரூபாய் பத்தாயிரம்)-க்கு மேல் மதிப்புள்ள பொருட்களையோ கொண்டு செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு கொண்டு செல்லப்படும் பட்சத்தில், தேர்தல் பறக்கும் படையினர் (Flying Squads) மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினரால் (Static Surveillance Teams) அவை கைப்பற்றப்படுகின்றன.இவ்வாறு சோதனைகளின் போது கைப்பற்றப்படும் தொகை மற்றும் இதர பொருட்களை உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்துத் திரும்பப் பெறுவதற்காக, "மாவட்ட குறைதீர்க்கும் குழு / கைப்பற்றுகை விடுவிக்கும் குழு" (District Grievance Committee) அமைக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் தகுந்த ஆதாரங்களைச் சமர்ப்பித்து, இக்குழுவின் தலைவரான திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, விருதுநகர் அவர்களிடம் தங்களது பணம் அல்லது பொருட்களைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாகத் தொடர்புகொள்ள வேண்டிய அலுவலர்களின் விவரம் பின்வருமாறு:திரு.வீ.கேசவதாசன், திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, விருதுநகர்.கைபேசி எண்: 7373704226திரு.A.வெங்கடேஷ்வரன்,மாவட்ட கருவூல அலுவலர், விருதுநகர்.கைபேசி எண்: 9095315660திருமதி.S. விசாலாட்சி, கணக்கு அலுவலர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, விருதுநகர்.கைபேசி எண்: 9677527120எனவே, பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் பணத்தையோ அல்லது பொருட்களையோ கொண்டு சென்று தேவையற்ற சிரமங்களைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்-2026-ஐ முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில், மாவட்டத் தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S ., அவர்கள் தலைமையில் (26.03.2026) இளைய தலைமுறை வாக்காளர்களுக்கான பிரம்மாண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.விருதுநகர் செந்திகுமார நாடார் கல்லூரியில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சுமார் 1000-க்கும் மேற்பட்ட இளம் வாக்காளர்கள் ஒன்றிணைந்து, "OUR VOTE OUR VOICE" (நமது வாக்கு நமது குரல்) என்ற தேர்தல் முழக்க வடிவில் மைதானத்தில் அணிவகுத்து நின்று, ஜனநாயகக் கடமையின் முக்கியத்துவத்தை உலகிற்குப் பறைசாற்றினர்.இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் திரண்டிருந்த மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பின்வரும் தேர்தல் உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர். "இந்திய குடிமக்களாகிய நாங்கள், ஜனநாயகத்தின் மீது நிலையான நம்பிக்கை கொண்டு, நாட்டின் ஜனநாயக மரபுகளையும், சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் கண்ணியத்தையும் நிலைநிறுத்துவோம் என உறுதி கூறுகிறோம்.மேலும், ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றியும், மதம், இனம், சாதி, வகுப்பு, மொழி அல்லது எந்தவொரு தூண்டுதலுக்கும் ஆட்படாமல் எங்களது வாக்கினைப் பதிவு செய்வோம்." வாக்களிப்பதன் அவசியத்தை பொதுமக்களிடையே கொண்டு செல்லும் வகையில், 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற மிதிவண்டி பேரணியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்."வாக்களிப்பது நமது உரிமை", * "கையூட்டு பெறாமல் வாக்களிப்போம்", "ஜனநாயக கடமையை ஆற்றுவோம்" போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கியப் பலகைகளை ஏந்தி, நகரின் முக்கிய சாலைகள் வழியாகச் சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.மாவட்ட நிர்வாகத்தின் மூலம் 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள், மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் மற்றும் திருநங்கைகள் என அனைத்துத் தரப்பினரிடையேயும் விழிப்புணர்வை ஏற்படுத்த பேரணிகள், கையெழுத்து இயக்கம் மற்றும் ரங்கோலி போட்டிகள் மாவட்டம் முழுவதும் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.இந்நிகழ்வில் அரசுத் துறை உயர் அலுவலர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள் மற்றும் திரளான மாணவர்கள் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் FL-1/ FL_2/ FL_3/FL_3A/ FL-3AA, FL_4A/மற்றும் FL-11 ஆகிய மதுபான உரிம ஸ்தலங்களை 2003-ம் ஆண்டைய தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் விதி 12 துணை விதி (1) Tamil Nadu Liquor (Licence and Permit) Rules, 1981-ன்படி, எதிர்வரும் மகாவீரர் ஜெயந்தி தினமான 31.03.2026 (செவ்வாய் கிழமை) அன்று (ஒரு நாள் மட்டும்) தற்காலிகமாக மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர் அவர்களால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளார் மேற்படி உத்தரவினை மீறி செயல்படும் டாஸ்மாக் நிறுவனப் பணியாளர்கள் FL-1/ FL_2/ FL_3/FL_3A/ FL-3AA, FL_4A/மற்றும் FL-11 ஆகிய மதுபான ஸ்தலங்களின் உரிமதாரர்களின் மீது Tamil Nadu Liquor (Licence and Permit) Rules, 1981 நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் திரு.மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S,. அவர்கள் தெரிவித்துள்ளார்.