தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் - 2026-னை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, பல்வேறு வாக்காளர் விழிப்புணர்வு (SVEEP) நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதன் ஒரு பகுதியாக, (07.04.2026) 203-திருவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதி (தனி) செண்பகத் தோப்பு மலைவாழ் பகுதியில் வசிக்கும் வாக்காளர்களிடையே தேர்தல் விழிப்புணர்வு குறித்த சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.கையெழுத்து இயக்கம்:"எனது வாக்கு விற்பனைக்கு அல்ல" மற்றும் "ஜனநாயகக் கடமையை தவறாமல் ஆற்றுவேன்" என்ற உயரிய நோக்கை வலியுறுத்தி, சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.இதில் அரசு அலுவலர்கள் மற்றும் செண்பகதோப்பு மலைவாழ் மக்கள் திரளாகக் கலந்துகொண்டு கையெழுத்திட்டனர். அதனைத் தொடர்ந்து, நேர்மையாகவும், தவறாமலும் வாக்களிப்போம் என அனைவரும் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.தொடர்ந்து, ”100 சதவீதம் முழுமையாக வாக்களிப்போம்” என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.இந்நிகழ்வில் மாவட்ட கனிம வளம் துணை ஆட்சியர் அவர்கள் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் தனி வட்டாட்சியர் (ஆதிந) அவர்கள் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், ஜஸ்டிஸ் பகவத் காலனி செண்பகதோப்பு மலைவாழ் மக்கள் உட்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் - 2026-னை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையிலும், "என் வாக்கு விற்பனைக்கு அல்ல" என்பதை வலியுறுத்தி நேர்மையான தேர்தலை எதிர்கொள்ளவும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, பல்வேறு வாக்காளர் விழிப்புணர்வு (SVEEP) நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இளம் வாக்காளர்களின் எழுச்சிமிகு விழிப்புணர்வு இதன் ஒரு பகுதியாக, (07.04.2026) 205-சிவகாசி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட AAA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், தோட்டக்கலை - மலைப்பயிர்கள் துறை சார்பாக கல்லூரி மாணவ-மாணவியர்களிடையே தேர்தல் விழிப்புணர்வு குறித்த சிறப்பான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன. நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்கள்: உறுதிமொழி ஏற்பு: "எனது வாக்கு விற்பனைக்கு அல்ல" மற்றும் "ஜனநாயகக் கடமையை தவறாமல் ஆற்றுவேன்" என்ற உயரிய நோக்கை வலியுறுத்தி, மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் அனைவரும் இணைந்து நேர்மையாகவும், தவறாமலும் வாக்களிப்போம் என விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். வண்ணமயமான ரங்கோலி விழிப்புணர்வு: 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில், கல்லூரி வளாகத்தில் மாணவ-மாணவியர் அனைவரும் ஒருங்கிணைந்து பல்வேறு வண்ண மலர்களை பயன்படுத்தி ரங்கோலி மூலம் '100% VOTE' என்ற வடிவத்தை உருவாக்கி பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தனர். தோட்டக்கலைத்துறையின் பங்களிப்பு: மாவட்ட தேர்தல் அலுவலரின் நேரடி மேற்பார்வையில், இக்கல்லூரி மாணவ-மாணவியர்களிடையே தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்த தோட்டக்கலை - மலைப்பயிர்கள் துறை இச்சிறப்பு நிகழ்வினை ஒருங்கிணைத்தது. முக்கியப் பங்கேற்பாளர்கள் இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி அவர்கள் தலைமை தாங்கி சிறப்பித்தார். மேலும், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் திருமதி சுபவாசுகி அவர்கள், அரசு அலுவலர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான மாணவ-மாணவியர்கள் இந்தப் பெரும் ஜனநாயகத் திருவிழாவிற்கான விழிப்புணர்வுப் பணியில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் வருகிற ஏப்ரல் 23-ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்துத் தொழிலாளர்களும் தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்றும் வகையில், அன்றைய தினம் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து விருதுநகர் மற்றும் சிவகாசி, தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் திரு. இரா. இரவிச்சந்திரன் அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: வாக்களிக்க ஏதுவாக விடுமுறை: விருதுநகர் மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்துத் தொழிற்சாலைகள், கட்டுமானப் பணியிடங்கள் மற்றும் நிறுவனங்களில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள், தேர்தல் நாளன்று தங்குதடையின்றி வாக்களிக்க ஏதுவாக, 23.04.2026 அன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்பது கட்டாயமாகும். நிர்வாகத்தினருக்கு அறிவுறுத்தல்: அனைத்துத் தொழிற்சாலை உரிமையாளர்களும், தங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் அனைவரும் தேர்தல் நாளன்று தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, அவர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி, விடுமுறை அளிக்கத் தவறும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.புகார் தெரிவிக்கக் கட்டுப்பாட்டு அறை: தேர்தல் நாளன்று விடுமுறை அளிக்காத தொழிற்சாலைகள் அல்லது நிறுவனங்கள் குறித்துப் புகார் தெரிவிக்க விரும்புவோர், மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள கீழ்க்கண்ட கட்டுப்பாட்டு அறை எண்களைத் தொடர்பு கொள்ளலாம்: தொலைபேசி எண்கள்: 04562-294067, 04562-294068, 04562-294069 கட்டணமில்லாத் தொலைபேசி எண் (Toll Free): 1800 425 2166 ஜனநாயகக் கடமையை நிறைவேற்றத் தொழிலாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவது ஒவ்வொரு நிறுவனத்தின் கடமையாகும் என இணை இயக்குநர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி, கேரளா மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றப் பொதுத்தேர்தல் வருகிற ஏப்ரல் 9-ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்தில் பணியாற்றி வரும் மேற்கண்ட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்ற ஏதுவாக, அன்றைய தினம் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து விருதுநகர் மற்றும் சிவகாசி, தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் திரு. இரா. இரவிச்சந்திரன் அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: விடுமுறை:விருதுநகர் மாவட்டத்தில் இயங்கி வரும் பல்வேறு தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமானப் பணியிடங்களில் புதுச்சேரி, கேரளா மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.தங்களது சொந்த மாநிலங்களில் வாக்குரிமை பெற்றுள்ள இத்தொழிலாளர்கள், தேர்தல் நடைபெறும் நாளான 09.04.2026 அன்று தடையின்றி வாக்களிக்க ஏதுவாக, அவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும்.சம்பந்தப்பட்ட மாநிலத் தொழிலாளர்கள் அனைவரும் தேர்தல் நாளன்று தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதை அந்தந்தத் தொழிற்சாலை உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.இந்தியத் தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி, விடுமுறை அளிக்கத் தவறும் அல்லது மறுக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். புகார் தெரிவிக்கத் தொடர்பு எண்கள்: தேர்தல் நாளன்று வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத தொழிற்சாலைகள் அல்லது நிறுவனங்கள் குறித்துப் புகார் தெரிவிக்க விரும்புவோர், மாவட்ட அளவில் நியமிக்கப்பட்டுள்ள கீழ்க்கண்ட அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளலாம்: திரு. இரா. இரவிச்சந்திரன் – 94435 52902 திரு. பி. இராஜ்குமார் – 93447 45064 ஜனநாயகக் கடமையை நிறைவேற்றத் தொழிலாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவது அந்தந்த நிறுவனங்களின் சட்டப்பூர்வக் கடமையாகும் என இணை இயக்குநர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் - 2026-ஐ முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தேர்தல் பணிகள் மற்றும் வேட்புமனு தாக்கல் நடைமுறைகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. என்.ஓ. சுகபுத்ரா, I A S,. அவர்கள் (04.04.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.ஆய்வு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள்: இராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள வேட்புமனு தாக்கல் மையத்தைப் பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், அங்கு வேட்பாளர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்களின் (CCTV) செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆய்வு செய்தார். வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்களுடன் அனுமதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை மற்றும் 100 மீட்டர் எல்லைக்குள் வாகனக் கட்டுப்பாடு குறித்த இந்தியத் தேர்தல் ஆணையத்தின் விதிகளைத் துல்லியமாகப் பின்பற்ற வேண்டுமென அங்கிருந்த அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.வேட்புமனு தாக்கல் குறித்த முக்கியத் தகவல்கள்:மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளிலும் கடந்த 30.03.2026 (திங்கட்கிழமை) அன்று வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:வேட்புமனு தாக்கல்:வரும் 06.04.2026 (திங்கட்கிழமை) மாலை 3 மணி வரை வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யலாம்.நேரம்: வேலை நாட்களில் காலை 11:00 மணி முதல் மாலை 03:00 மணி வரை மட்டுமே மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.விடுமுறை நாட்கள்:பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ள 31.03.2026 (செவ்வாய்), 01.04.2026 (புதன்), 03.04.2026 (வெள்ளி) மற்றும் 05.04.2026 (ஞாயிறு) ஆகிய நாட்களில் வேட்புமனுக்கள் பெறப்படமாட்டாது.இறுதி நாள்:வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் 06.04.2026 ஆகும்.அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்:தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களை எவ்விதத் தொய்வுமின்றிப் பின்பற்ற வேண்டும் என்றும், வேட்புமனு தாக்கலின் போது தேவையற்ற கூட்டத்தைத் தவிர்க்கவும், போதிய காவல்துறை பாதுகாப்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டார்.இந்நிகழ்வின் போது, இராஜபாளையம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், வட்டாட்சியர் மற்றும் தேர்தல் பிரிவு அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
206-விருதுநகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட விருதுநகர் நகராட்சிப் பகுதியில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகைகளைத் தேர்தல் அலுவலர்கள் அதிரடியாக அகற்றினர்.விருதுநகர் தெப்பக்குளம் அருகே அமைந்துள்ள அருள்மிகு பராசக்தி மாரியம்மன் கோவில் பங்குனிப் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, தேர்தல் விதிமுறைகளை மீறி மூன்று விளம்பரப் பலகைகள் (Flex Banners) வைக்கப்பட்டிருப்பதாக 206-விருதுநகர் சட்டமன்றத் தொகுதித் தேர்தல் மேற்பார்வையாளர் திரு. நவ்நீத்குமார், I A S., அவர்களுக்குப் புகார் வரப்பெற்றது. அப்புகாரின் அடிப்படையில், தேர்தல் மேற்பார்வையாளரின் நேரடி அறிவுறுத்தலின்படி, குறிப்பிட்ட அந்த மூன்று விளம்பரப் பலகைகளும் உடனடியாக அகற்றப்பட்டன.தேர்தல் மேற்பார்வையாளர் எச்சரிக்கை: இது குறித்துத் தேர்தல் மேற்பார்வையாளர் திரு. நவ்நீத்குமார், I A S, அவர்கள் தெரிவிக்கையில்: "அரசியல் தொடர்பான விளம்பரப் பலகைகள் அல்லது பதாதைகளை உரிய அனுமதி பெறாமல் வைப்பது தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி குற்றமாகும். விதிமுறைகளை மீறிச் செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்," என தெரிவித்தார்.
2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களும் தங்களது ஜனநாயகக் கடமையை 100% நிறைவேற்றுவதை உறுதி செய்யும் வகையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் SVEEP (Systematic Voters' Education and Electoral Participation) திட்டத்தின் கீழ் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதன் ஒரு பகுதியாக, விருதுநகர் மாவட்டத்திலுள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தலா ஒன்று வீதம், அதிநவீன LED திரைகளுடன் கூடிய 7 மின்னணு விழிப்புணர்வு வாகனங்களின் சேவையை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான மரு. என்.ஓ. சுகபுத்ரா, I A S.,அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.இந்த வாகனங்கள் விருதுநகர், சிவகாசி, அருப்புக்கோட்டை, சாத்தூர், திருச்சுழி, ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) மற்றும் ராஜபாளையம் ஆகிய 7 சட்டமன்றத் தொகுதிகளிலும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும். மின்னணு திரை மூலம் தகவல்கள்: வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள LED திரைகள் மூலம் வாக்களிப்பதன் அவசியம், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்/நீக்கம், சரியான முறையில் வாக்களிக்கும் முறை மற்றும் தேர்தல் ஆணையத்தின் செயலிகளான cVIGIL, 1950 உதவி எண் குறித்த குறும்படங்கள் மற்றும் விழிப்புணர்வு பாடல்கள் ஒளிபரப்பப்படும்.சின்னம் 'விரு': விழிப்புணர்வு விளம்பரங்களில் 'விரு' (Viru) என்ற அணில் உருவம் கொண்ட சின்னம் வாக்காளர்களைக் கவரும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது மாவட்டத்தின் தனித்துவமான அடையாளமாக முன்னிறுத்தப்பட்டுள்ளது.*வாக்குப்பதிவு நாள் - ஏப்ரல் 23: வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில், "எங்கள் வாக்கு - எங்கள் குரல்" (Our Vote - Our Voice) என்ற முழக்கத்தோடு அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதே இந்த வாகனப் பிரச்சாரத்தின் முக்கிய நோக்கமாகும். இந்நிகழ்வின் போது பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், "ஜனநாயகத் திருவிழாவில் ஒவ்வொரு வாக்காளரின் பங்கேற்பும் மிக முக்கியமானது. எவ்வித ஆசை வார்த்தைகளுக்கும் இடமளிக்காமல், நேர்மையான முறையில் வாக்களித்து 100% வாக்குப்பதிவு என்ற இலக்கை எட்ட விருதுநகர் மாவட்ட மக்கள் ஒத்துழைக்க வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர், தேர்தல் பிரிவு அதிகாரிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில்(02.04.2026) தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்- 2026 முன்னிட்டு, வேட்புமனு தாக்கல் மற்றும் தேர்தல் பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர்,மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்- 2026 முன்னிட்டு, மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் 30.03.2026 (திங்கட்கிழமை) முதல் 06.04.2026 (திங்கட்கிழமை) வரை காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்புமனு தாக்கல் நடைபெறுகிறது.அந்த வகையில், திருவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் மற்றும் தேர்தல் பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மாவட்டத்தில் 30.03.2026 (திங்கட்கிழமை) முதல் 06.04.2026 (திங்கட்கிழமை) வரை காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். 1881ஆம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின்கீழ், பொது விடுமுறையாக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள 31.03.2026 (செவ்வாய்க்கிழமை), 01.04.2026 (புதன்கிழமை), 03.04.2026 (வெள்ளிக்கிழமை) மற்றும் 05.04.2026 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் வேட்புமனு தாக்கல் செய்ய இயலாது. வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய கடைசி நாள் 06.04.2026 (திங்கட்கிழமை) என மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்வில் திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்/உதவி ஆணையர்(கலால்) திரு.டி.வி.ரமேஷ், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தேர்தல் பிரிவு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் - 2026-னை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, பல்வேறு வாக்காளர் விழிப்புணர்வு (SVEEP) நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதன் ஒரு பகுதியாக, (02.04.2026) 203-திருவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பிள்ளையார்குளம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், கல்லூரி மாணவ-மாணவியர்களிடையே தேர்தல் விழிப்புணர்வு குறித்த சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் நடைபெற்றன.வாக்களிப்பதன் அவசியத்தை இளைய தலைமுறையினரிடையே கொண்டு செல்லும் நோக்கில், மாணவர்களுக்கு இடையே பேச்சுப்போட்டி, விழிப்புணர்வு நடனம் மற்றும் தேர்தல் விழிப்புணர்வு நாடகப் போட்டிகள் நடத்தப்பட்டன. மாணவர்கள் தங்கள் கலைத்திறன் மூலம் ஜனநாயகத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தினர்.இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) செயல்பாடு குறித்து மாணவர்களுக்கு நேரடி விளக்கம் அளிக்கப்பட்டது. மாதிரி வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் வாக்களிக்கும் முறையை மாணவர்கள் ஆர்வமுடன் கையாண்டு பழகினர். இதன் மூலம் முதல்முறை வாக்களிக்க உள்ள மாணவர்களின் ஐயங்கள் நிவர்த்தி செய்யப்பட்டன."எனது வாக்கு விற்பனைக்கு அல்ல" மற்றும் "ஜனநாயகக் கடமையை தவறாமல் ஆற்றுவேன்" என்ற உயரிய நோக்கை வலியுறுத்தி, பிரம்மாண்ட கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் திரளாகக் கலந்துகொண்டு கையெழுத்திட்டனர். அதனைத் தொடர்ந்து, நேர்மையாகவும், தவறாமலும் வாக்களிப்போம் என அனைவரும் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக, 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில், கல்லூரி மைதானத்தில் மாணவ-மாணவியர் அனைவரும் ஒருங்கிணைந்து '100% VOTE' என்ற தேர்தல் முழக்க வடிவில் அணிவகுத்து நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த கண்கவர் அணிவகுப்பு பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்தது.இந்நிகழ்வில் மகளிர் திட்ட இயக்குநர் திரு.இலக்குவன், வட்டார வளர்ச்சி அலுவலர், தனி வட்டாட்சியர் (ஆதிதிராவிடர் நலம்), வருவாய் ஆய்வாளர்கள், கிராம உதவியாளர்கள், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவியர்கள் உட்பட பலர் திரளாகக் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறவுள்ள பங்குனிப் பொங்கல் திருவிழா மற்றும் சித்திரைத் திருவிழாக்களின் போது அன்னதானம் வழங்குபவர்கள், உணவுப் பாதுகாப்புத் துறையின் முன் அனுமதியையும் உரிமத்தையும் பெற வேண்டியது அவசியமாகும். உணவுப் பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் நெறிமுறைகளைத் தவறாது பின்பற்ற வேண்டும் எனவும், தவறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள விரிவான அறிவுறுத்தல்கள் வருமாறு: அன்னதானம் வழங்குபவர்கள் மற்றும் தற்காலிக உணவுக் கடைகள் உள்ளிட்ட அனைத்து உணவு வணிகர்களும், உணவுப் பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன் கீழ் https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் தங்களது வணிகத்தைப் பதிவு செய்துகொள்ள வேண்டும்.அன்னதானம் சமைப்பவர்கள் அல்லது கேட்டரிங் ஏஜென்சிகள் மேற்கூறிய இணையதளத்தில் விண்ணப்பித்து முறையான பதிவுச் சான்றிதழ்/உரிமம் பெற்றிருக்க வேண்டும். அத்தகைய உரிமம் பெற்றவர்களுக்கு மட்டுமே அன்னதானம் ஏற்பாடு செய்பவர்கள் பணி ஆணை வழங்க வேண்டும்.இணையதளப் பதிவு தவிர, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முதல் தளத்தில் உள்ள அறை எண் 116 மற்றும் 118-ல் இயங்கும் நியமன அலுவலர் அலுவலகத்தில், அன்னதானம் தொடங்குவதற்கு முன்னரே பின்வரும் விவரங்களுடன் அனுமதி கோரி விண்ணப்பிக்க வேண்டும்:ஒருங்கிணைப்பாளரின் முகவரி மற்றும் அலைபேசி எண்.அன்னதானம் நடைபெறும் இடத்தின் முழு முகவரி.சமையல் குழு அல்லது கேட்டரிங் குழுவின் விவரங்கள்.பயன்படுத்தப்படும் குடிநீரின் ஆதாரம் (பாட்டில் குடிநீர் எனில் அதன் உற்பத்தியாளர் விவரம்).கிணறு அல்லது ஆழ்துளைக் கிணற்று நீரைப் பயன்படுத்துவதாக இருந்தால், உள்ளாட்சி அமைப்பின் அனுமதி மற்றும் நீர் பகுப்பாய்வு அறிக்கை. (அரசு குடிநீர் விநியோகம் எனில் உறுதிமொழி மட்டும் போதுமானது). சமையல் குழுவினருக்குத் தொற்றுநோய் பாதிப்பு இல்லை என்பதற்கான மருத்துவச் சான்று. தரமான மற்றும் லேபிள் விவரங்கள் கொண்ட மூலப் பொருட்களை, உரிமம் பெற்ற வணிகர்களிடம் மட்டுமே கொள்முதல் செய்வதற்கான சுய உறுதிமொழிச் சான்று. உணவு தயாரித்த 2 ½ மணி நேரத்திற்குள் பரிமாறிவிட வேண்டும். மீதமான உணவை எக்காரணம் கொண்டும் மீண்டும் பரிமாறக்கூடாது. தயாரித்த ஒவ்வொரு உணவிலிருந்தும் தலா 250 கிராம் எடுத்து, சுத்தமான பாட்டிலில் அடைத்து 48 மணி நேரம் குளிர்சாதனப் பெட்டியில் (Reference Sample) பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். சமையலுக்கும் குடிப்பதற்கும் பயன்படுத்தும் தண்ணீரை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் அல்லது பொதுச் சுகாதாரத் துறை ஆய்வகங்களில் பரிசோதனை செய்து அறிக்கை வைத்திருக்க வேண்டும். முன் அனுமதியின்றி தனியார் ஆழ்துளைக் கிணற்று நீரைப் பயன்படுத்தக்கூடாது. ஈக்கள் மற்றும் தூசு மொய்க்காத, சுகாதாரமான சூழலில் உணவுகளைத் தயாரித்து விற்பனை செய்ய வேண்டும். உணவில் அனுமதிக்கப்படாத செயற்கை நிறமிகளைச் சேர்க்கக்கூடாது. சமையல் எண்ணெயை ஒருமுறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் சூடுபடுத்திப் பயன்படுத்தக் கூடாது. பொட்டலமிடப்பட்ட உணவுப் பொருட்களில் தயாரிப்புத் தேதி, காலாவதி தேதி மற்றும் உணவுப் பாதுகாப்பு உரிமம் எண் ஆகியவை கட்டாயம் இடம்பெற்றிருக்க வேண்டும். பணியாளர்கள் அனைவரும் டைபாய்டு மற்றும் மஞ்சள் காமாலைக்கு எதிரான தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். மேலும், கையுறை மற்றும் தலைக்கவசம் அணிந்து பணியாற்றுவது அவசியம். காலாவதியான பிஸ்கட்கள், குளிர்பானங்கள் அல்லது கெட்டுப்போன உணவுகளை விற்பனை செய்யக்கூடாது. வளாகத்தைச் சுத்தம் செய்யும் நபர்களை உணவு பரிமாற அனுமதிக்கக்கூடாது. செய்தித்தாள்கள் (Newsprint) மற்றும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் உறைகளில் உணவுப் பொருட்களைப் பொட்டலமிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.இந்த நெறிமுறைகளைத் தீவிரமாகப் பின்பற்றி, பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்க ஒத்துழைக்குமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.