விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பசு, எருமை இனங்களை கோமாரி நோயிலிருந்து பாதுகாக்கும் வகையில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 9-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம் 01.07.2026 முதல் 31.07.2026 வரை அனைத்து கிராமங்கள் /நகராட்சி / மாநகராட்சியில் செலுத்தப்பட உள்ளது.விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 1,40,435 பசுக்கள் 865 எருமைகள் என மொத்தம் 1,41,300 கால்நடைகளுக்கு வாய் மற்றும் கால் நோய் தடுப்பூசி (FMD) செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முகாம் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டம் மூலம் நடைபெற உள்ளது.இந்த நோய் தாக்கும் பட்சத்தில் கால்நடைகளுக்கு சரிவர உணவு உண்ண இயலாநிலை, அதீத காய்ச்சல் மற்றும் வாயில் உமிழ்நீர் வடிதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். இதனால் கால்நடைகளில் பால் உற்பத்தி பாதிக்கப்படும். மேலும் இந்நோய் மிக விரைவாக பரவும் தன்மை கொண்டது.இதனை தடுப்பதற்கு விருதுநகர் மாவட்டத்தில் 82 கால்நடை மருந்தகங்கள் மற்றும் 6 கால்நடை மருத்துவமனைகளில் பணிபுரிவோரைக் கொண்டு ஒரு கால்நடை உதவி மருத்துவர், கால்நடை ஆய்வாளர் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி குழுவினரால் இலவசமாக FMD தடுப்பூசி இலவசமாக போடப்பட உள்ளது.மேலும், தடுப்பூசி பணி முடிவடைந்த உடன் கால்நடை வளர்ப்போர் தங்களது ஆதார் எண் மற்றும் பதிவு செய்த அலைபேசி எண்ணிற்கு வரும் OTP - யை தடுப்பூசி குழுவினருக்கு தெரிவித்து பாரத் பசுதான் இணையதளத்தில் பதிவேற்றம் செய்துகொள்ள வேண்டும். இதன் மூலம் அரசின் கால்நடை பராமரிப்புத்துறை நலத்திட்டங்களை பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், அழகாபுரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், இன்று (25.06.2026) மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் இரத்த சோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுள்ள கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் திட்டத்தினை துவக்கி வைத்தார்.தமிழக அரசு, கர்ப்பிணி தாய்மார்களுக்கு மகப்பேறு காலத்தில், தேவையான ஊட்டச் சத்துக்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்கும், இரத்த சோகை பாதிப்பை குறைப்பதற்கும், தாய்மார்களின் உடல்நிலையை சீராக மேம்படுத்துவதற்கும் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. சுகாதாரத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகளின் அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் கர்ப்பிணித் தாய்மார்கள் கணக்கெடுக்கப்பட்டு அவர்களுக்கு முறையான கால இடைவெளியில் தடுப்பூசி செலுத்தவும். முறையான பராமரிப்பை மேற்கொள்ள மருந்து மாத்திரைகளை உட்கொள்ள உரிய ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஒவ்வொரு மாத இடைவெளியிலும் எடை வீதம் கணக்கெடுக்கப்பட்டு ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் இரத்த சோகை விகிதம் உள்ளிட்டவை கணக்கிடப்பட்டு வருகின்றன.கர்ப்பிணி தாய்மார்கள் அரசு மருத்துவமனைகளில் மட்டுமே சிகிச்சையினை மேற்கொள்ள வேண்டும். ஆரம்ப காலத்தில் ஏற்படும் இரத்த சோகை பாதிப்பு மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டினை கண்டறிந்து, தேவையான சிகிச்சையினை உரிய முறையில் மேற்கொண்டால் மட்டுமே ஆரோக்கியமான குழந்தை பிறப்பிற்கு வழிவகுக்கும். தமிழ்நாடு அரசின் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் மூலம் மகப்பேறு காலத்தில் வருவாய் இழப்பைத் தடுக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டைத் தடுத்து தினந்தோறும் ஆரோக்கியமான ஊட்டப்பொருட்களை உட்கொள்ளவும், ரூ.18 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், பொது சுகாதாரத்துறை சார்பில், ரூ. 2 ஆயிரம் மதிப்புள்ள • சத்து மாவு (Health Mix), இரும்புச்சத்து மாத்திரைகள் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய ஊட்டச்சத்து பெட்டகங்களும் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது.மேலும், கர்ப்பிணித் தாய்மார்களின் ரத்தசோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டினை நிவர்த்த செய்திட, இன்றைய தினம், கர்ப்பிணி தாய்மார்களுக்கு, பாதாம் பருப்பு, முந்திரி பருப்பு, அத்தி பழம், கருப்பு உலர் திராட்சை, நிலக்கடலை, நெய், பேரிச்சம்பழம், கேப்பை மாவு மற்றும் சிகப்பு அவுல் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்படுகிறது.எனவே, கர்ப்பிணித் தாய்மார்கள் சுய மருத்துவம் மேற்கொள்ளாமல், தங்களின் உடல்நலத்தை தொடர்ந்து கண்காணித்து, தேவையான மருத்துவ ஆலோசனைகள் மற்றும் ஊட்டச்சத்து வழிகாட்டுதல்கள் வழங்கி வரும், அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வழங்கப்படும் சேவைகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.தொடர்ந்து, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் சார்பில், ஊட்டச்சத்து குறைபாட்டைத் தடுக்கும் நோக்கில் அமைக்கப்பட்டிருந்த ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய விழிப்புணர்வு கண்காட்சி அரங்கினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்.இந்நிகழ்வின் போது, மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி திலகம், திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம்) திருமதி பங்கஜம், மாவட்ட தாய் சேய் நல அலுவலர் திருமதி விஜயலட்சுமி, வட்டார மருத்துவ அலுவலர் மரு.ரூபன் ராஜ், மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் திருமதி தாரணி கிராம சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் மாவட்ட சமூக நல அலுவலக பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டத்தில் தேசிய பல்ஸ் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் 28.06.2026 அன்று நடைபெறவுள்ளது. போலியோ எனப்படும் இளம்பிள்ளைவாத நோயை இந்தியாவிலிருந்து ஒழிக்கும் பொருட்டு கடந்த1995 ம் ஆண்டு முதல் 30 ஆண்டுகளாக தீவிர முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது 31 ம் ஆண்டாக தேசிய பல்ஸ் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் 28.06.2026 (ஞாயிற்றுக் கிழமை) அன்று நடைபெற இருக்கிறது. இம்முகாமில் பிறந்ததிலிருந்து 5 வயதிற்குட்பட்ட (0-5 வயது) அனைத்துக் குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் விருதுநகர் மாவட்டத்தில் 1,33,475 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து இலவசமாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் 1,137 மையங்களில் சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. இந்த மையங்கள் அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார மையங்கள், ஊட்டச்சத்து மையங்கள், பள்ளிகள், சாவடிகள், கோயில்கள் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.இம்மையங்களில் காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். மேலும் ரயில், பஸ்நிலையம், தியேட்டர், தங்கும் விடுதிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் 'நடமாடும் முகாம்' மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே முறையான தவணைகளில் சொட்டு மருந்து கொடுக்கப்பட்டிருந்தாலும் இம்முகாமிலும் சொட்டு மருந்து தவறாது கொடுக்கப்பட வேண்டும். லேசான ஜூரம், சளி, இருமல், வயிற்றுப்போக்கு இருந்தாலும் போலியோ சொட்டு மருந்து கொடுக்கலாம்.இம்முகாமில் 4580 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளார்கள். இதில் சுகாதாரப் பணியாளர்கள், சத்துணவு பணியாளர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் அடங்குவார்கள். இம்மாவட்டத்தில் 28 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டு இலங்கை அகதிகள் முகாம், நரிக்குறவர்கள் மற்றும் தற்காலிக குடியிருப்புகளில் வசிக்கும் பிறந்ததிலிருந்து 5 வயதிற்குட்பட்ட (0 - 5 வயது) குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் 46 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டு ரயில்வே ஸ்டேசன், பேருந்து நிலையங்கள், கோயில் திருவிழாக்கள் மற்றும் திருமண விழாக்களில் உள்ள குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஆகையால் பொதுமக்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளை 28.06.2026 (ஞாயிற்றுக் கிழமை) அன்று போலியோ சொட்டு மருந்து முகாமிற்கு அழைத்துச் சென்று, குழந்தைகளை போலியோ நோயிலிருந்து பாதுகாத்து ஊனம் இல்லாத சமுதாயத்தை உருவாக்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் வகுப்பைச் சார்ந்தவர்களுக்கு தனிநபர் கடன், குழுக்கடன் மற்றும் கல்விக்கடன் திட்டங்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் வாயிலாக, ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்குள்ளும், 18 வயது முதல் 60 வயது நிரம்பிய குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும் கடனுதவி வழங்கப்படும்.தனிநபர் தொழில் கடன் திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ரூ.1.25 லட்சம் வரை 7 சதவீதம் வட்டி விகிதத்திலும் மற்றும் ரூ.1.25 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை 8 சதவீதம் வட்டி விகிதத்திலும் 3 முதல் 6 ஆண்டுகள் வரையிலான காலத்திற்கு கடனுதவி வழங்கப்படுகிறது.குழுக்கள் சுய உதவித் திட்டத்தின் கீழ் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் சிறுதொழில் மற்றும் வணிகம் செய்ய ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ1.25 லட்சம் வரையும், குழு ஒன்றுக்கு அதிக பட்சமாக ரூ.25 லட்சம் வரையும் ஆண்டுக்கு 7 சதவீதம் வட்டி விகிதத்தில் 2 1/2 முதல் 3 ஆண்டுகள் வரையிலான காலத்திற்கு கடனுதவி வழங்கப்படுகிறது. சுய உதவிக்குழு தொடங்கி 6 மாதங்கள் முடிந்திருக்க வேண்டும். இருபாலருக்கான சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு இக்கடனுதவி வழங்கப்படுகிறது.பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ளவர்களுக்கு ஒரு கறவை மாட்டுக்கு ரூ.60,000 வீதம் 2 கறவை மாடுகள் வாங்க 7 சதவீத வட்டி விகிதத்தில் 3 ஆண்டுகள் வரையிலான காலத்திற்கு கடனுதவி வழங்கப்படுகிறது.கல்விக்கடன் பெற, விண்ணப்பத்தாரர் பிற்படுத்தப்பட்டோர் / மிகப் பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் வகுப்பினராக இருத்தல் வேண்டும் (சாதிச் சான்றிதழ்). குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 5.00 இலட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும் (கிராமம் / நகர்ப்புறம் பாகுபாடின்றி) (வருமானச் சான்றிதழ்). மாநில அரசின் வருமானச் சான்றிதழ் வழங்கும் தகுதி வாய்ந்த அதிகாரியால் வழங்கப்பட்டிருக்க வேண்டும் (அல்லது) வர்த்தமானி பதிவு பெற்ற அதிகாரியால்(Gazetted Officer) சான்றளிக்கப்பட்ட சுய சான்றளிக்கப்பட்ட ஆண்டு குடும்ப வருமானச் சான்றிதழ். விண்ணப்பதாரர் மருத்துவம், பல் மருத்துவம், பொறியியல் படிப்புகள், பிஎச்டி, முதுகலை பட்டப்படிப்புகள் போன்றவற்றில் முதுகலைப் படிப்புகளுக்கு பொருத்தமான அதிகாரியால் அங்கீகரிக்கப்பட்ட தரப்படுத்தப்பட்ட தேர்வு மதிப்பெண்கள் (SAT GMAT, GRE அல்லது பாடநெறியில் சேருவதற்குப் பொருத்தக்கூடிய பிற தொடர்புடைய மதிப்பெண்கள் போன்றவை) மூலம் சேர்க்கையை ஏற்றுக்கொள்ளும் கல்லூரிகளில் சேர்க்கை பெற்றிருக்க வேண்டும் (சம்மந்தப்பட்ட நிறுவனத்திலிருந்து சேர்க்கை / சலுகை கடிதத்தை பெற்றிருக்கவேண்டும்) (IELTS அல்லது TOEFL போன்ற முற்றிலும் மொழித் திறன் தேர்வை அடிப்படையாகக் கொண்டதல்ல). கடன் வரம்பு ரூ.25 இலட்சம் வரை. 21 முதல் 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆண்டு வட்டி விகிதம் 8% அதிகபட்ச மீட்கும் காலம் 10 ஆண்டுகள்.மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலஅலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் மற்றும் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி கிளைகளிலும் கடன் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். மேலும், இக்கழக இணையதள முகவரியில் (tabcedco.net) பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பத்துடன் ஜாதி, வருமானம் மற்றும் பிறப்பிடச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை மற்றும் வங்கி கோகும் ஆவண நகல்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா . I A S., தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2026-2027-ஆம் ஆண்டிற்கான நேரடி பயிற்சியாளர் சேர்க்கை 15.06.2026 முதல் நடைபெற்று வருகிறது. எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் பட்டாதாரிகளும் சேரலாம். வயது வரம்பு 14 முதல் 40 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும். பெண்களுக்கு வயது வரம்பு இல்லை.நேரடியாக விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர், திருச்சுழி ஆகிய அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு உரிய ஆவணங்களான அசல் மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், சாதிச்சான்று, ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ போன்றவற்றுடன் சென்று சேர்ந்து கொள்ளலாம்.பொருத்துநர் (FITTER), கடைசலர் (TURNER), இயந்திர வேலையாள் (MECHINIST), கம்மியர் மோட்டார் வாகனம் (MMV), குளிர்பதனம் மற்றும் தட்பவெப்பநிலை கட்டுபடுத்தும் தொழில் நுட்பவியலாளர் (REGRIDGERATION AND AIR CONDITIONING TECHNICIAN), கம்பியாள், பற்றவைப்பவர் (WELDER), உட்புற வடிவமைத்தல் மற்றும் அலங்கரித்தல் (INTERIOR DESIGN AND DECORATION), தீயணைப்பு தொழில்நுட்பம் மற்றும் தொழிற்சாலை பாதுகாப்பு மேலாண்மை (FIRE TECHNOLOGY AND INDUSTRIAL SAFETY), மேம்படுத்தப்பட்ட CNC இயந்திர தொழில் கம்மியர் மின்சார வாகனம் (CNC), தொழில்துறை எந்திரவியல் மற்றும் எண்ணியல் உற்பத்தி தொழில்நுட்பவியலாளர், கம்மியர் மின்தூக்கி மற்றும் நகரும் படிக்கட்டு, மின்சார பணியாளர் (ELECTRICIAN), மேனுபேக்சரிங் ப்ராசஸ் கண்ட்ரோல் அண்ட் ஆட்டோமேசன், நில அளவையர் (SURVEYOR), கணினி இயக்குபவர் மற்றும் திட்டமிடுதல் உதவியாளர் போன்ற தொழிற்பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களில் சேர்ந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா I A S., அவர்கள், தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், அப்பையநாயக்கன்பட்டி ஊராட்சி பி.எஸ்.ஆர். பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வரும் அரசு மாதிரிப் பள்ளியில், பதினோராம் வகுப்பிற்கான மாணவர் சேர்க்கை தொடர்பான ஆய்வு மற்றும் பெற்றோர் - தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் (22.06.2026) மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா . I A S., அவர்கள் தலைமையில் தலைமையில் நடைபெற்றது.பதினோராம் வகுப்பில் சேரும் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கும் வகையில் ஆசிரியர்கள் முழு அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் என்றும், மாணவர்களின் தனித்திறன்களை கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்க வேண்டும். இப்பள்ளியில் கல்வியுடன் சேர்த்து ஒழுக்கம், தலைமைத்துவ பண்புகள், தகவல் தொழில்நுட்ப திறன்கள் மற்றும் போட்டித் தேர்வு பயிற்சிகளிலும் மாணவர்கள் சிறந்து விளங்க தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் கல்வி முன்னேற்றத்தில் தொடர்ந்து கவனம் செலுத்தி, பள்ளி நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட வேண்டும். மாணவர்களின் வருகை, கல்வித் திறன் மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சியை உறுதி செய்ய பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் இடையேயான ஒருங்கிணைப்பு மிகவும் அவசியம்.மேலும், அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்கள் மற்றும் பெற்றோர்களிடையே விரிவான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக இலவச பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், சீருடைகள், காலணிகள், புத்தகப்பைகள், மதிய உணவுத் திட்டம், காலை சிற்றுண்டித் திட்டம், உயர்கல்விக்கான ஊக்கத்தொகைகள் உள்ளிட்ட அரசின் சிறப்புத் திட்டங்கள் குறித்து மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.அரசுப் பள்ளிகளில் தற்போது ஸ்மார்ட் வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகங்கள், கணினி வசதிகள், திறன் மேம்பாட்டு பயிற்சிகள், விளையாட்டு வசதிகள் மற்றும் மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கான பல்வேறு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், இவ்வசதிகளை பெற்றோர்களுக்கு தெளிவாக எடுத்துரைப்பதன் மூலம் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கலாம்.மேலும், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியானது, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சிறந்து விளங்கிய மாணாக்கர்களை தேர்வு செய்து அவர்களுக்கு ஆங்கிலம் மற்றும் தமிழ் வழிக் கல்வி வாய்ப்புகளும், போட்டித் தேர்வுகளுக்கான சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு உரிய திறன் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இதனை, மாணவர்கள் நல்ல முறையில் பயன்படுத்தி வளர வேண்டும்.தொடர்ந்து, பள்ளியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கல்வி மற்றும் அடிப்படை வசதிகள் குறித்தும், புதிய மாணவர் சேர்க்கை நிலவரம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு, மாணவர் சேர்க்கை இலக்குகளை முழுமையாக எட்டுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.இந்நிகழ்ச்சியில் கல்வித்துறை அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் (22.06.2026) மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலை வாய்ப்பு, விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நல உதவித்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது. மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்தகுடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்குச் சென்று, கோரிக்கை மனுக்களும் பெறப்பட்டது.தொடர்ந்து, பொதுமக்களிடமிருந்து 678 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் உரிய நடவடிக்கை எடுக்க ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் புதிரை வண்ணார் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள 16 உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு ரூ.6,80,000/- (ரூபாய் ஆறு இலட்சத்து எண்பதாயிரம் மட்டும்) மதிப்பீட்டில் இயற்கை மரண உதவித்தொகை, ஈமச்சடங்கு உதவித் தொகை, கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை மற்றும் முதியோர் ஓய்வூதியம் போன்ற பல்வேறு நலத்திட்டங்களுக்கான உதவித் தொகைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஆனந்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திருமதி பிர்தௌஸ் பாத்திமா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திரு ஜான்சன் தேவசகாயம், மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.அமர்நாத், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினம் வருகின்ற (26.06.2026) முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் ஸ்டார்ட் ரன் ஸ்டாப் டிரக்ஸ் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஓட்டத்தில் கலந்து கொள்ள மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார். தமிழக அரசு விளையாட்டை ஒரு சக்தி வாய்ந்த சமூக மாற்றக் கருவியாகக் கருதி செயலாற்றி வருகிறது. இளைஞர்களின் ஆற்றலை ஆக்கப்பூர்வமான வழியில் செலுத்தி, ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை ஊக்குவித்து, சமூகத்தில் நேர்மறையான மாற்றத்தை உருவாக்குவதே அரசின் தலையாய நோக்கமாகும். ‘போதைப் பொருள் இல்லாத தமிழகம்' என்ற உன்னத இலக்கை நோக்கிய பயணத்தில், தூய்மையான, நேர்மையான மற்றும் அறநெறி சார்ந்த விளையாட்டுக் கலாச்சாரத்தை வளர்த்தெடுப்பதில் தமிழக அரசு உறுதி பூண்டுள்ளது. ஜூன் 26ம் நாள் சர்வதேச போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்ட விரோத கடத்தல் எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்நாள் குறித்த விழிப்புணர்வை மாணவ மாணவியர்கள், இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள், பொதுமக்களிடையே ஏற்படுத்திட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் “ஸ்டார்ட் Run ஸ்டாப் Drugs” போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஓட்டம் நடத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 5 கி.மீட்டர் தூரம் நடைபெறும் விழிப்புணர்வு ஓட்டம் ஜூன் 26-ம் நாள் அன்று காலை 6.30 மணி அளவில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக நுழைவு வாயிலில் துவங்கி நடைபெறுகிறது. இந்த ஓட்டத்தில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் மாவட்ட விளையாட்டரங்கத்தில் 78240 09970 / 04562-225947 என்ற தொலைபேசியின் மூலமாகவோ பதிவு செய்துக் கொள்ளலாம். 14 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் இந்த ஓட்டத்தில் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர்-விருதுநகர் சாலையை இணைக்கும் எல்.சி எண்: 407 Rly KM: 541/200-300 என்ற எண்ணுள்ள இரயில்வே இருப்பு பாதையில் 23.06.2026 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 06.00 வரையில், பராமரிப்பு பணிகள் செய்யப்பட உள்ளது. எனவே, 23.06.2026 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 6.00 வரை பராமரிப்பு பணிகளுக்காக, மேற்குறிப்பிட்டுள்ள வழித்தடங்களை மூடுவதாக இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.எனவே, பொதுமக்கள் அனைவரும் மேற்கண்ட வழிகளை விடுத்து, மாற்று வழியை பயன்படுத்திக் கொள்ளுமாறு இரயில்வே நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் நகராட்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள் (20.06.2026) 329 தூய்மை காவலர்களுக்கு ரூ.6.22 இலட்சம் மதிப்பீட்டில் பாதுகாப்பு உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தலைமையில், வழங்கினார்.நான் உங்கள் வீட்டுப் பிள்ளை. இன்று உங்களால் தான் இந்த நிலையை அடைந்துள்ளேன். அந்த வகையில், மக்களுக்காக பணியாற்றுவது எனது கடமை.நமது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்திற்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் தனது அரசு தனிக்கவனம் செலுத்தும் என அறிவித்துள்ளார்கள்.அந்த வகையில், மக்களுக்கான அரசை நியாயமாகவும், நேர்மையாகவும் ஊழலற்ற அரசாங்கத்தினை உருவாக்குவதில் உறுதியோடு பல்வேறு நலத்திட்டங்களை ஏற்படுத்தி மக்களின் நம்பிக்கையினை காப்பாற்றும் வகையில் செயல்பட்டு வருகிறார்.அதனடிப்படையில், தூய்மை காவலர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் மேம்பாட்டிற்காக தூய்மை காவலர் நலவாரியம் மற்றும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகத்தின் மூலம், பல்வேறு விதமான நலத்திட்டங்கள், பொருளாதாரம் மற்றும் தொழில் மேம்பாட்டிற்கான கடனுதவிகள், பணியாளர்களின் குழந்தைகளின் கல்விக்கான கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை போன்றவையும், 10 இலட்சம் ரூபாய் வரையிலான விபத்துக் காப்பீட்டுத் திட்டம், 20 ஆயிரம் ரூபாய் இயற்கை மரண உதவித் தொகையும், ஈமச்சடங்கு உதவித்தொகை, கண் கண்ணாடி உதவித்தொகை, மகப்பேறு உதவித் தொகை, முதியோர் ஓய்வூதியம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.மேலும், தூய்மை காவலர்கள் சுய தொழில் புரிந்து தொழில் முனைவோர்களாக முன்னேறும் வகையில், 35 சதவீத மானியத்தில் ஆட்டோ, கார், பல் மருத்துவ கிளினிக், பல்பொருள் அங்காடி, உணவகம் போன்றவை ஏற்படுத்திடவும்,ஆடு, மாடு உள்ளிட்டவைகளை வளர்த்திட 6 இலட்சம் வரையிலான மானிய உதவித்தொகையும், நில உடைமைதாரர்களாக பயன்பெறும் வகையில், நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டத்தின் கீழ், 5 இலட்சம் (அல்லது) 50 சதவீத மானியத்தில் கடனுதவி வழங்கப்படுகிறது.இராஜபாளையம் நகராட்சியில் 80 நிரந்தர தூய்மை காவலர்களும், 265 ஒப்பந்த தூய்மை காவலர்களும் என மொத்தம் 345 தூய்மை காவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதுவரை, 419 தூய்மை காவலர்களுக்கு, தூய்மை காவலர் நலவாரியத்தில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.நமது சுகாதாரத்தினை பாதுகாத்திடும் தூய்மை காவலர்களின் நலனை கருத்தில் கொண்டு, அவர்கள் சிறப்பாக பணிபுரியும் வகையில் இன்று சீருடை, காலணி மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுகிறது. இதனை, பணியின் போது அவரவர் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, நகராட்சி மற்றும் உள்ளாட்சிப் பகுதிகளில் பணிபுரிகின்ற பணியாளர்களின் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக, இன்றைய தினம் இராஜபாளையம் நகராட்சி பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவுள்ளது.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் செயல்படுத்தப்படும் அனைத்து நலத்திட்டங்களும் பொதுமக்களை சென்றடையும் வகையில் மாவட்ட நிர்வாகம் செயல்படும் எனத் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், ஆணையாளர் திரு.சே.நாகராஜன், மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.அமர்நாத், நகர் நல அலுவலர் மரு.ராஜ்குமார் மற்றும் தூய்மை காவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.