25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Mar 12, 2026

கட்டுமானப் பணியிடத்தில் விபத்து ஏற்பட்டு மரணம் அடையும் பதிவு பெற்ற, பதிவு பெறாத கட்டுமானத் தொழிலாளிகளின் வாரிசுதாரர்களுக்கு காசோலையினை மாவட்ட ஆட்சியர்அவர்கள் வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்  (11.03.2026) கட்டுமானப் பணியிடத்தில் விபத்து ஏற்பட்டு மரணம் அடையும் பதிவு பெற்ற/ பதிவு பெறாத கட்டுமானத் தொழிலாளிகளின் வாரிசுதாரர்களுக்கு ரூ.28 இலட்சத்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S.,அவர்கள் வழங்கினார்.தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நலவாரியம் தமிழ்நாடு உடலுழைப்பு நலவாரியம் முதலான 20 நலவாரியங்கள் அமைப்புசாரா தொழிலாளர்களின் நலனுக்காக தொழிலாளர் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் மேற்படி 20 அமைப்புசாரா நலவாரியங்களில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு கல்வி, திருமணம், மகப்பேறு, இயற்கை மரணம், விபத்து மரணம், பணியிடத்து விபத்து மரணம், ஓய்வூதியம் நிதி உதவி விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (ச.பா.தி) அலுவலகம் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.கட்டுமானப் பணியிடத்தில் விபத்து ஏற்பட்டு மரணம் அடையும் பதிவு பெற்ற/ பதிவு பெறாத கட்டுமானத் தொழிலாளியின் வாரிசுதாரர்களுக்கு பணியிடத்து விபத்து மரண உதவித்தொகை 11.06.2025 அன்று ரூ.8,00,000/- ஆக உயர்த்தப்பட்டது. அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில் முதல் முறையாக பணியிடத்தில் விபத்து ஏற்பட்டு மரணமடைந்த ஒரு தொழிலாளியின் வாரிசுதாரருக்கு ரூ.8 இலட்சத்திற்கான காசோலையினையும், மேலும், கட்டுமானப் பணியிடங்களில் பணியின் போது ஏற்பட்ட விபத்தில் இறந்த 4 கட்டுமானத் தொழிலாளர்களின் பணியிடத்து விபத்து மரணத்திற்கு தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.20 இலட்சத்திற்கான காசோலையினையும் என ஆக மொத்தம் ரூ.28 இலட்சத்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.

Mar 11, 2026

காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தோணுகால் ஊராட்சியில் வைக்கப்பட்டுள்ள தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தோணுகால் ஊராட்சியில்  (10.03.2026) செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக வைக்கப்பட்டுள்ள தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டனர். 

Mar 11, 2026

ரூ.30 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள இராஜபாளையம் இணைப்புச்சாலையினை அமைச்சர் அவர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் புதிய பேருந்து நிலையத்தில் (10.03.2026) நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை சார்பில் ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் 2024-2025 கீழ் இராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் முதல் இராஜபாளையம் அரசு மருத்துவமனை வரை ரூ.30 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள இணைப்புச்சாலையினை மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி அவர்கள் தலைமையில், இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.தங்கபாண்டியன் அவர்கள் முன்னிலையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் அவர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.இந்த இணைப்பு சாலை இன்றைக்கு நேற்று போட்ட திட்டமல்ல. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த 2008 ஆம் ஆண்டு துணை முதலமைச்சராக இராஜபாளையம் புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்த போது, இந்த பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் வந்து செல்ல புதிய பேருந்து நிலையத்திற்கும் - தென்காசி சாலைக்கும் ஒரு இணைப்பு இருந்தால்தான் ஏதுவாக இருக்கும் என கணித்தார்.அந்த வகையில், அன்று அவர் கணித்த இந்த இணைப்பு சாலை இன்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசினாலே தொடங்கி முடிக்கப்பட்டுள்ளது.இந்த இணைப்பு சாலை பணிக்கு ரூ.30.00 கோடியும், நில எடுப்பிற்காக  ரூ.8.34 கோடியும் நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டு மொத்தம் ரூ.38.34 கோடி மதிப்பில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.  இராஜபாளையம் நகரமானது வளர்ந்து வரும் ஒரு முக்கிய நகரமாகும். இந்நகரத்தில் பின்னலாடைகள் மற்றும் பிற தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அதனால், இராஜபாளையம் நகருக்குள் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மேலும் இராஜபாளையத்தின் புதிய பேருந்து நிலையம் இராஜபாளையம் - சங்கரன்கோவில் சாலையில் அமைந்துள்ளதால்,மதுரையில் இருந்து வரும் வாகனங்கள் மற்றும் தென்காசி பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் நகருக்குள் முக்கிய வீதிகளில் சென்று வருகிறது. அவ்வாறு வருவதால், பொதுமக்களுக்கு போக்குவரத்து இடையூறு ஏற்படுவதோடு, பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையும் பாதித்த வண்ணம் உள்ளது. இவற்றை கருந்தில் கொண்டு இந்த புதிய சாலையை அமைப்பதற்கு திட்டங்கள் வகுக்கப்பட்டு சாலைப்பணிகள் அமைக்க அரசு ஒப்புதல் வழங்கி இப்பணிகள் முடிக்கப்பட்டு இன்று பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் திருநெல்வேலி, சங்கரன்கோவில், இராஜபாளையம், மதுரை, தென்காசி, கொல்லம் போன்ற வழித்தடங்களில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் ஊருக்குள் சென்று நெரிசல் ஏற்படுத்தா வண்ணம் மக்களுக்கு இடையூறு இன்றி புதிய சாலை வழியாக இராஜபாளையம் புதிய பேருந்து நிலையத்திற்கு சென்று அதே வழியில் திரும்பி செல்லும்படி அமைக்கப்பட்டுள்ளது.மேலும், இச்சாலையானது இராஜபாளையம், புதுப்பாளையம், கடம்பன்குளம், செட்டிகுளம், நடுவக்குறிச்சி, இந்திரா நகர், ஸ்ரீரங்கபாளையம் உள்ளிட்ட சுற்று வட்டாரப்பகுதி மக்களின் போக்குவரத்திற்கு பயனுள்ள வகையில் இருக்கும்.  இதனால் இராஜபாளையத்திற்கு போக்குவரத்து நெரிசல் குறையும்.இது மட்டுமல்லாமல், இராஜபாளையம் நகருக்கு மேம்பாலமும், தாமிரபரணித் திட்டமும் என கடந்த ஐந்தாண்டு காலம் ஆட்சியில் இராஜபாளையம் நகரத்தில் என்னென்ன திட்டங்கள் செய்ய முடியுமோ அதை எல்லாம் செய்து கொடுத்திருக்கின்றோம்.மேலும், கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. அதை 2000 ரூபாவாக உயர்த்தி வழங்கப்படும் என  முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்.அதுபோல அரசு பள்ளியில் படித்திருக்கும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய், முதலமைச்சரின் காலை உணவு திட்டம் என ஒவ்வொன்றாக சிந்தித்து திட்டங்களை உருவாக்கி செயல்படுத்துகிறார்கள். மேலும், நியாய விலைக்கடைகளுக்குச் சென்று பொருட்கள் வாங்கி வருவது என்பது வயதானவர்களுக்கு மிகப்பெரிய காரியமாக இருந்தது. அதனை மாற்றி தாயுமானவர் திட்டத்தின் மூலம் ரேஷன் கடை ஊழியர்கள் வயதானவர்களுக்கு வீடு தேடி பொருள்களை வழங்கி வருகிறார்கள்.இது போன்ற எண்ணற்ற மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்தி வரும் இந்த அரசுக்கு பொதுமக்கள் என்றும் ஆதரவாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

Mar 11, 2026

பிளவுக்கல் பெரியாறு அணைப் பகுதியில் பூங்கா புணரமைக்கும் பணி, அதன் உள்கட்டமைப்புகளை புதுப்பித்தல் மற்றும் அணைக்கு செல்லும் அணுகுசாலையினை மேம்படுத்தும் பணிகளை அமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

 விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டம், கான்சாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள பிளவுக்கல் பெரியாறு அணைப் பகுதியில் நீர்வளத்துறை மேல் வைப்பாறு இராஜபாளையம் வடிநிலக் கோட்டம் சார்பில், ரூ.10 கோடி மதிப்பில் அணையின் பூங்கா புணரமைக்கும் பணி, அதன் உள்கட்டமைப்புகளை புதுப்பித்தல் மற்றும் அணைக்கு செல்லும் அணுகுசாலையினை மேம்படுத்தும் பணிகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி அவர்கள் தலைமையில்,  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் அவர்கள் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டம், கான்சாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள பிளவுக்கல் பெரியாறு அணை பூங்காவில் தற்போது உள்ள பார்வைக் கோபுரம், குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் கழிப்பறைகள் போன்ற வசதிகள் பலவும் சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றன. மேலும் பிளவுக்கல் பெரியாறு அணைக்கு செல்லும் அணுகுசாலை மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது.கடந்த 25 ஆண்டுகளாக இப்பூங்கா புதுப்பிப்பு செய்யப்படாத காரணத்தால், உள்ளூர் பொதுமக்களிடமிருந்து பூங்காவை  மேம்படுத்துவதற்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்தன.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விருதுநகர் வருகையின் போது, "வத்திராயிருப்பு வட்டம், கான்சாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள பிளவுக்கல பெரியாறு அணை பூங்காவை நவீனமயமாக்குதல், அதன் உட்கட்டமைப்புகளைப் புதுப்பித்தல் மற்றும் அணுகுசாலையை மேம்படுத்துதல் ஆகிய பணிகளை ரூ.10 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும்" என்று அறிவித்தார். முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின் படி, நிர்வாக அனுமதி பெற்று, பூங்காவை பாதுகாப்பு மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு ஏற்ற வகையில் மேம்படுத்துவதற்காக  அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.அதன்படி, பிளவக்கல் பெரியாறு பூங்கா எல்லைப் பகுதிகளைச் சுற்றி பாதுகாப்பு சுவர் மற்றும் கம்பிவேலி அமைத்தல், நுழைவு வாயில் வளைவு (Entrance Arch) அமைத்தல், மரத் தோட்டம் (Tree Garden), மீன்காட்சி பூங்கா(Aquarium Park), நதி காட்சி நடைபாதை (River View Walkway) அமைத்தல், தியானத் தோட்டம் (Zen Garden), உடற்பயிற்சி மற்றும் குழந்தைகள விளையாட்டு பகுதி அமைத்தல், யோகா வளாகம் (Yoga Plaza), பாதுகாப்பு அறை(Security Gabin), கழிப்பறை கட்டிடம் (Toilet), பெரியாறு அணை வரையிலான கிழவன்கோயில் முதல் அணுகுசாலையினை மேம்படுத்துதல், நீரூற்றுகளைப் புதுப்பித்தல், பாதசாரிகள் நடைபாலம், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல் மற்றும் பிற அடிப்படை வசதிகள் ஏற்படுத்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் பொறி.சு.மதனசுதாகரன், செயற்பொறியாளர் பொறி.மு.மகேஸ்வரி, திருவில்லிபுத்தூர் நகர்மன்றத்தலைவர் திரு.ரவிக்கண்ணன், உதவி செயற்பொறியாளர் பொறி.சி.ஜான்சி அனிதா, உதவி பொறியாளர்கள்  பொறி.உமாபதி, பொறி.அருண்குமார், முன்னாள் ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர்கள் திரு.மல்லி கு.ஆறுமுகம்(திருவில்லிபுத்தூர்), திரு.சிந்துமுருகன்(வத்திராயிருப்பு), உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Mar 10, 2026

விருதுநகர் மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும்  நாள் கூட்டம் (09.03.2026)நடைபெற்றது.இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலை வாய்ப்பு, விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நல உதவித்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்தகுடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்குச் சென்று, கோரிக்கை மனுக்களும் பெறப்பட்டது.இம்மனுக்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் உரிய நடவடிக்கை எடுக்க ஒப்படைக்கப்பட்டது.இக்கூட்டத்தில், தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்பு திட்டம்) திரு.கு.மோகனா, அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Mar 07, 2026

அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் தடுப்பூசி   28.02.2026 முதல் 90 நாட்களுக்கு வழங்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகவல்.

தமிழ்நாட்டில் ஆறு நோய்களை தடுப்பதற்கான விரிவு படுத்தப்பட்ட தடுப்பூசி திட்டம் 1978 - இல் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தை மேலும் வலுப்படுத்துவதற்காக நாடு தழுவிய தடுப்பூசி திட்டம் 1985 - ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.நாடு தழுவிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் தற்போது 11 வகையான தடுப்பூசிகள் கர்ப்பிணித்தாய்மார்கள் மற்றும்  குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு  12 வகையான தடுப்பூசிகளால் தடுக்கப்படக் கூடிய காசநோய், தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், மஞ்சள் காமாலை, இன்புளுயன்ஸா - நிமோனியா மற்றும் மெனிஞ்ஜிடிஸ், இரணஜன்னி, போலியோ, தட்டம்மை, ரூபெல்லா ரோட்டாவைரஸ் வயிற்றுப்போக்கு நோய், நியுமோகோக்கல் நியுமோனியா மற்றும் ஜப்பானிய மூளைக்காச்சல் ஆகிய நோய்களிலிருந்து பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.  இதன் தொடர்ச்சியாக தற்போது பெண்களை தாக்கும் கருப்பைவாய் புற்று நோயை தடுப்பதற்காக  இந்தியா முழுவதும் 14 வயதுடைய பெண் குழந்தைகளுக்கு கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி (கார்டாசில்) ஒரு தவணை வரும் 28.02.2026 முதல் வழங்கப்பட்டு வருகிறது.நமது விருதுநகர் மாவட்டத்தில் இத்தடுப்பூசி அனைத்து அரசு ஆரம்ப சுகாதாரநிலையங்கள், அரசு மருத்துவமனைகள், மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் வைத்து   28.02.2026 முதல் 90 நாட்களுக்கு வழங்கப்பட உள்ளது.நமது மாவட்டத்தில் இத்திட்டத்திற்கு தேவையான தடுப்பூசிகள் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், மற்றும் அரசு மருத்துவ கல்லூரிக்கு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து 27.02.2026 அன்று நடைபெற்றது.தடுப்பூசி செலுத்திய குழந்தைகளின் பதிவுகள் U-WIN செயலியில் பதிவிடப்பட்டு அவர்களுக்கு மின்னணு சான்றிதழ் (Digital Vaccination Certificate) வழங்கப்படும். இதற்காக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வரும் 14 வயதுடைய பெண் குழந்தைகள் தங்கள் தாய் அல்லது தந்தையுடன் வரவேண்டும் மேலும் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் பயனாளிகள்   (14 வயதுடைய பெண் குழந்தைகள்) ஆதார் எண்ணுடன் வரவேண்டும்.நமது சுகாதார மாவட்டத்தில் இத்தடுப்பூசி மூலம் 14 வயதுடைய பெண் குழந்தைகள் 20788 பேர் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் 14 வயதுடைய பெண் குழந்தைகளுடைய பெற்றோர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலித்தி கருப்பைவாய் புற்றுநோயில் இருந்து பாதுகாத்திட வேண்டுமாறு மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா.I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Mar 07, 2026

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், விருதுநகர் மண்டலத்தில் நடப்பு  2025-2026 சம்பா பருவத்தில்நெல் கொள்முதல் செய்யப்பட்டு விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகவல்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், விருதுநகர் மண்டலத்தில் நடப்பு கே.எம்.எஸ் 2025-2026 சம்பா பருவத்தில் விவசாயிகளின் நலன் கருதி, இதுவரை 34 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2545/- மற்றும் பொதுரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2500/-க்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. 04.03.2026 வரை 29,796 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டு 3560 விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.71,01,20,229/-ஐ (ரூபாய் எழுபத்தொரு கோடியே ஒரு வட்சத்து இருபதாயிரத்து இருநூற்று இருபத்தொன்பது மட்டும்) வரவு வைக்கப்பட்டுள்ளன.      விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் தாலுகா, கம்மாப்பட்டி மற்றும் வத்திராயிருப்பு தாலுகா சுந்தரபாண்டியம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கழக விதிகளின்படி சராசரியாக விவசாயிகளிடமிருந்து நாள் ஒன்றுக்கு 1000 நெல் மூட்டைகள் முன்னுரிமை அடிப்படையில் கொள்முதல் செய்யப்பட்டு இயக்கம் செய்யப்பட்டு வருகிறது.     விவசாயிகள் அறுவடை செய்த நெல்லியை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து பயனடைந்து வருகின்றனர். பயனடைந்த விவசாயிகள் அரசுக்கும் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றிகளை தெரிவித்து வருகின்றனர்.

Mar 06, 2026

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்திடும் வகையிலான சட்டங்கள் மற்றும் திட்டங்கள் குறித்த கருத்தரங்கு நிகழ்ச்சி.

விருதுநகர் மாவட்டம், விருதுநகர் ஜே.சி.ரெசிடென்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்திடும் வகையிலான சட்டங்கள் மற்றும் திட்டங்கள் குறித்த கருத்தரங்கு(04.03.2026 முதல் 06.03.2026 வரை) நிகழ்ச்சியின் 2 ஆவது நாள் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் உரையாற்றினார்.மத்திய, மாநில அரசுகளால் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்திடும் வகையிலான சட்டங்கள் மற்றும் திட்டங்களை செயல்படுத்துகின்ற முக்கிய பணிகளை அரசு அலுவலர்கள், பணியாளர்கள், களப்பணியாளர்கள் செய்து வருகின்றனர்.இந்த சட்டங்கள் மற்றும் திட்டங்கள் குறித்து அறிந்து கொண்டால்தான், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிட முடியும் என்ற நோக்கத்தில்தான் இந்த கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகிறது.தமிழ்நாடு அரசின் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க மகளிர் உதவி எண்.181 ஒருங்கிணைந்த சேவை மையங்கள் (OSC) மற்றும் காவலன் (SOS) செயலியின் மூலம் அவசர உதவியை வழங்குகிறது.மேலும், குடும்ப வன்முறை தடுப்புச்சட்டம் 2005, போஸ்கோ சட்டம் சட்ட ரீதியான பாதுகாப்பு மற்றும் மற்றும் பெண்குழந்தை பாதுகாப்புச்சட்டம் போன்றவைகள் பெண்கள் மற்றும் நிதி உதவி அளித்து சமூக பாதுகாப்பை உறுதி செய்கிறது.இந்த அரசு திட்டங்கள் மற்றும் சட்டங்கள் குறித்து நன்கு அறிந்து கொண்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிட வேண்டும்.எனவே, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுத்திடும் வகையில் அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு திட்டமான உயிர் திட்டத்தின் கீழ் சட்டத்திற்கு முரண்பட்ட சிறார்கள் (இளைஞர் நீதிக்குழுமம்) 7 நபர்களுக்கு சுயதொழில் புரிந்திட தேவையான உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் முதன்மை மாவட்ட நீதிபதி திரு.கே.ஜெயக்குமார், விருதுநகர் இளைஞர் நீதிக்குழுமம் முதன்மை நடுவர் திருமதி பி.எஸ்.ஏ.நிஷாந்தினி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மரு.க.பிரதௌஸ் பாத்திமா, மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி திலகம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருமதி இல.மீனாட்சி, நன்னடத்தை அலுவலர் திரு,பால் இக்னேசியஸ் சேவியர்ராஜ், இளைஞர் நீதிக்குழும உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Mar 06, 2026

மல்லாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகள் நடைபெறுவதை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் சென்று ஆய்வு.

விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளியில் (05.03.2026) பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகள் நடைபெறுவதை மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா. I A S., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Mar 06, 2026

மாவட்ட வங்கி ஒருங்கிணைப்பாளர் பணியிடத்திற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விருதுநகர் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், மாவட்ட அளவில் அரசு திட்டங்களை திறம்பட செயல்படுத்துவதற்காகவும், அனைத்து துறைகளுக்கிடையே ஒருங்கிணைப்பை வலுப்படுத்திடவும், மாவட்ட வாழ்வாதார மற்றும் கடன் மேலாண்மை நிறுவனத்திற்கு (DLCA) வெளிப்பணி மூலம், மாவட்ட வங்கி ஒருங்கிணைப்பாளர் பணியிடம் நிரப்பப்பட வேண்டியுள்ளது. எனவே, மேற்கண்ட மாவட்ட வங்கி ஒருங்கிணைப்பாளர் பணியிடத்திற்கு தகுதி வாய்ந்த, ஓய்வு பெற்ற வங்கி அலுவலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தகுதியுள்ள நபர்கள் வரும் 09.03.2026 அன்று மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பங்களை நகர்ப்புற வாழ்வாதார மையம், கடை எண்: 7, முதல் தளம், பூமாலை வணிக வளாகம், பழையபேருந்து நிலையம் அருகில், விருதுநகர், மின்னஞ்சல் முகவரி clcvnr2021@gmail.com என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலகமாகவோ விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

1 2 ... 35 36 37 38 39 40 41 ... 140 141

AD's



More News