25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Feb 28, 2026

விருதுநகர் - பாலவநத்தம் - அருப்புக்கோட்டை சாலையினை இரு வழிச்சாலையிலிருந்து நான்கு வழிச்சாலையாக மேம்படுத்தும் பணிகளுக்குஅமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை காந்தி நகரின் (27.02.2026) நெடுஞ்சாலைத்துறை(கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) சார்பில்,   விருதுநகர் - பாலவநத்தம் - அருப்புக்கோட்டை சாலையினை இரு வழிச்சாலையிலிருந்து நான்கு வழிச்சாலையாக மொத்தம் ரூ.115 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில்,  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் அவர்கள் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சாலை வசதிகளை மேம்படுத்துவதற்காவும், விரிவுபடுத்துவதற்காவும், சாலை பாதுகாப்பினை உறுதிபடுத்துவதற்கும் பல்வேறு திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகிறார்கள்.அந்த வகையில் விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டை இராமலிங்கம் மில் வரை செல்லும் வாகனங்களின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கும், விபத்துக்களை தவிர்ப்பதற்கும் நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.அதன்படி, முதலமைச்சரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் திருவில்லிபுத்தூர் - பார்த்திபனூர் சாலையில் விருதுநகர் அல்லம்பட்டி முக்குரோடு முதல் பாலவநத்தம் வரை 5.60 கி.மீ. நீள சாலையை ரூ.43.00 கோடி மதிப்பீட்டிலும்,பாலவநத்தம் முதல் புளியம்பட்டி புதிய புறவழிச்சாலை ரவுண்டானா வரை மற்றும் அருப்புக்கோட்டை காந்தி நகர் முதல் இராமலிங்கா மில் சந்திப்பு வரை 12 கி.மீ நீள சாலையை ரூ.72.00 கோடி மதிப்பீட்டிலும் என ஆக மொத்தம் ரூ.115 கோடி மதிப்பில் 17.60 கி.மீ இருவழிச் சாலையை நான்குவழிச் சாலையாக மாற்ற அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இச்சாலைகள் நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பட்சத்தில் போக்குவரத்து நெரிசலும் பயண நேரமும் குறைவதோடு, விபத்துகள் தவிர்க்கப்படுவதுடன், சரக்கு போக்குவரத்து தடையின்றி நடைபெற வழிவகுக்கும் என தெரிவித்தார்.மேலும், ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பது அந்த நாட்டு மக்களின் பயண வேகத்தில் அடங்கியிருக்கிறது. அந்த வேகத்திற்கு உயிர் கொடுக்கும் வகையில், இன்று அருப்புக்கோட்டை காந்தி நகர் மண்ணில், நம் மாவட்டத்தின் போக்குவரத்து நரம்பு மண்டலங்களாக விளங்கும் சாலைகளை நான்கு வழிச்சாலைகளாக மாற்றும் மாபெரும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டத்தின் தொழில் வளர்ச்சிக்கும், விவசாயப் பெருமக்களின் வணிகத்திற்கும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பான பயணத்திற்கும், பொதுமக்களின் பொருளாதாரத்தையும், வாழ்வாதாரத்தையும் உயர்த்துவதற்கும்  ஒரு வலுவான அடித்தளத்தை ஏற்படுத்தியிருக்கிறோம்.இந்தச் சாலை விரிவாக்கம் செய்யப்படுவதன் மூலம், தென்காசி, இராஜபாளையம் மற்றும் திருவில்லிபுத்தூர் ஆகிய பகுதிகளிலிருந்து இராமேஸ்வரம் செல்லும் பயணிகள், இனி மதுரை மாநகருக்குள் செல்ல வேண்டிய அவசியமில்லை. இந்த மாற்றுப் பாதையைப் பயன்படுத்துவதன் மூலம் போக்குவரத்து நெரிசலின்றி, மிக எளிதாகவும் விரைவாகவும் இராமேஸ்வரம் சென்றடைய முடியும். இது பயண நேரத்தைக் குறைப்பதுடன், விபத்துகளைத் தவிர்க்கவும், சரக்கு போக்குவரத்து தடையின்றி நடைபெறவும் பெரும் உறுதுணையாக அமையும்," எனத் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் (விருதுநகர்) திருமதி பாக்கியலெட்சுமி, நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Feb 27, 2026

இருக்கன்குடி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள திருக்கோயிலுக்கு வரும் வழியில் அர்ச்சுனா ஆற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலம் திறப்பு.

  தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் (26.02.2026) காணொலி காட்சி வாயிலாக, விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டம், இருக்கன்குடி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மொத்தம் ரூ.17.68 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள திருக்கோயிலுக்கு வரும் வழியில் அர்ச்சுனா ஆற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.அதனைத்தொடர்ந்து, மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி அவர்கள் தலைமையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் அவர்கள் புதிய பாலம் மற்றும் உட்கட்டமைப்பு கட்டடங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்து பார்வையிட்டார்.இந்து சமய அறநிலையத்துறையானது தனது கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு, குடமுழுக்குகள் நடத்துதல், பழமையான திருக்கோயில்களை அதன் தொன்மை மாறாமல் புனரமைத்து பாதுகாத்தல், திருத்தேர் மற்றும் திருக்குளங்களை சீரமைத்தல், பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல், திருக்கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுத்து பாதுகாத்தல் போன்ற பல்வேறு பணிகளை சீரிய முறையில் மேற்கொண்டு வருகிறது.மேலும், சட்டமன்ற மானியக் கோரிக்கையின் போது வெளியிடப்பட்ட அறிவிப்புகளையும் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது.அந்த வகையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டதன்படி, இருக்கன்குடி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில், ரூ.10.50 கோடி மதிப்பில் திருக்கோயிலுக்கு வரும் வழியில் அர்ச்சுனா ஆற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலம், ரூ.2.04 கோடி மதிப்பில் நான்கு சுகாதார வளாகங்கள் மற்றும் குளியலறைகள், ரூ.1.40 கோடி மதிப்பில் உட்பிரகார மண்டபத்தில் கான்கிரீட் தூண்களில் அலங்கார சுதை வேலைப்பாடுகள், ரூ.1.58 கோடி மதிப்பில் கோவிலுக்கு வரும் வழியில் 3 இடங்களில் நுழைவுத் தோரண வாயில்கள் மற்றும் கலையரங்கம், ரூ.2.16 கோடி மதிப்பில் வெளிப்பிரகார மண்டபத்தில் கான்கிரீட் தூண்களில் அலங்கார சுதை வேலைப்பாடுகள் மற்றும் சாலைப் பணிகள் ஆகிய மொத்தம் 6 முக்கிய உட்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள் ரூ.17.68 கோடி மதிப்பில் கட்டப்பட்டு இன்று பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

Feb 27, 2026

விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள புதிய மருத்துவ வசதி பிரிவுகளை அமைச்சர் அவர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தனர்.

விருதுநகர் மாவட்டம், விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் (26.02.2026) மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் பொதுமக்களுக்கு உயர்தர மருத்துவச் சேவைகளை விரிவுபடுத்தும் நோக்கில், சுமார் ரூ.1 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய மருத்துவ வசதி பிரிவுகளை மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள் முன்னிலையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் அவர்கள் மற்றும்  நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் ஆகியோர் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தனர்.அதன்படி, மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் குழந்தைகளின் நலன் கருதி சிறப்புக் குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் உணர்வுத் திறனை மேம்படுத்தும் வகையில் உணர்வு திறன் சார்புப் பூங்கா (Sensory Integration Park)  அமைக்கப்பட்டுள்ளது.  ஃபுளூரோஸ்கோபி (Fluoroscopy) 800 எம்.ஏ (800 mA) திறன் கொண்ட அதிநவீன டிஜிட்டல் எக்ஸ்ரே வசதி அமைக்கப்பட்டுள்ளது. இது துல்லியமான நோய் கண்டறிதலுக்கு உதவும்.மேலும், மருத்துவமனைக்கு வரும் பொதுமக்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்களை வழங்க உங்களுக்கு உதவலாமா?" (May I Help You?) உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.பொதுமக்களுக்கு உயர்தர மருத்துவச் சேவைகளை விரிவுபடுத்தும் நோக்கில், சுமார் ரூ.1 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த 3 புதிய மருத்துவ வசதி பிரிவுகளை  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் அவர்கள் மற்றும் மாண்புமிகு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் ஆகியோர் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தனர்.இந்நிகழ்வில், விருதுநகர் மாவட்ட மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு.ஜெய்சிங், விருதுநகர் நகர்மன்றத்தலைவர் திரு.ஆர்.மாதவன், மருத்துவத்துறை அலுவலர்கள், மருத்துவர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Feb 27, 2026

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்விருதுநகர் மினி டைடல் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார்.

  தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் (26.02.2026) காணொலி காட்சி வாயிலாக, விருதுநகர் மாவட்டம் விருதுநகரில் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை மற்றும் டைடல் நிறுவனம் சார்பில் ரூ.38.73 கோடி மதிப்பீட்டில் விருதுநகர் மினி டைடல் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள், சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.அசோகன் அவர்கள் மற்றும்  சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள்ஆகியோர்முன்னிலையில்,வருவாய்மற்றும்பேரிடர்மேலாண்மைத்துறைஅமைச்சர்திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் அவர்கள் மற்றும்  நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் ஆகியோர் காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டனர்.தமிழகத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியைப் பரவலாக்கும் அரசின் கொள்கை முடிவின்படி, விருதுநகர் மாவட்டத்தில் புதிய TIDEL NEO ஐடி பூங்கா அமைப்பதற்கான பணிகளை  தமிழக முதலமைச்சர் அவர்கள் இன்று தொடங்கி வைத்தார்.விருதுநகர் வட்டம், கூரைக்குண்டு கிராமத்தில் உள்ள மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் (Master Plan Complex) சுமார் 4 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த ஐடி பூங்கா அமையவுள்ளது. சுமார் ரூ.38.73 கோடி மதிப்பீட்டில், நவீன உள்கட்டமைப்புடன் கூடிய 61,000 சதுர அடி பரப்பளவிலான கட்டிடம் (தரைத்தளம் + 3 மாடிகள்) கட்டப்பட உள்ளது.இந்தத் தகவல் தொழில்நுட்பப் பூங்கா சர்வதேச தரத்திலான தடையற்ற மின்சாரம்(100% ஜெனரேட்டர் (DG) பேக்-அப் வசதி), கட்டிடம் முழுவதும் மத்திய குளிரூட்டப்பட்ட (Centralised AC) வசதி, 24/7 சிசிடிவி கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைந்த கட்டிட மேலாண்மை அமைப்பு (IBMS), சிற்றுண்டிச்சாலை (Cafeteria), விசாலமான வாகன நிறுத்துமிடம் மற்றும் தீயணைப்பு பாதுகாப்பு வசதிகளுடன் அமையவுள்ளது.இந்த TIDEL NEO பூங்கா செயல்பாட்டிற்கு வருவதன் மூலம் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஐடி பட்டதாரிகளுக்கு தங்கள் சொந்த ஊரிலேயே வேலைவாய்ப்பு கிடைக்கும். மென்பொருள் நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் இப்பகுதியில் தழைத்தோங்க வழிவகுக்கும். இந்த பூங்காவால் இப்பகுதியைச் சுற்றி போக்குவரத்து, உணவகங்கள், தங்கும் விடுதிகள் மற்றும் சிறு வணிகங்கள் பெருகி, உள்ளூர் மக்களின் வருமானம் அதிகரிக்கும். விருதுநகரில் அமையவுள்ள மெகா ஜவுளிப் பூங்கா மற்றும் இந்த மினி டைடல் பார்க் ஆகிய இரண்டும் இணைந்து மாவட்டத்தை ஒரு மிகப்பெரிய தொழில் மையமாக (Industrial Hub) மாற்றும். விருதுநகர் மாவட்டத்தின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு மேம்படும்.இந்நிகழ்ச்சியில், கண்காணிப்பு பொறியாளர்(டைடல் நியோ பார்க்) திரு.இரா.பாலாஜி, விருதுநகர் நகர்மன்றத்தலைவர் திரு.ஆர்.மாதவன், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.         

Feb 27, 2026

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்விருதுநகரில் அமைக்கப்பட்டுள்ள விருதுநகர் அரசு அருங்காட்சியகம் புதிய கட்டடத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

 தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் (26.02.2026) காணொலி காட்சி வாயிலாக, விருதுநகர் மாவட்டம் விருதுநகரில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை மற்றும் அருங்காட்சியகங்கள் துறை சார்பில் ரூ.12.43 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள விருதுநகர் அரசு அருங்காட்சியகம் புதிய கட்டடத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.அதனைத்தொடர்ந்து, மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள்,  சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.அசோகன் அவர்கள் மற்றும்  சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் ஆகியோர் முன்னிலையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் அவர்கள் மற்றும்  நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் ஆகியோர் புதிய கட்டடத்தில் குத்துவிளக்கேற்றி, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்து பார்வையிட்டார்.தமிழகத்தின் அனைத்து மாவட்ட மக்களும் அருங்காட்சியகத்தின் பயனைப் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில், இதுவரை 23 மாவட்டங்களில் அருங்காட்சியகங்கள் செயல்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், கடந்த 2001-ஆம் ஆண்டு முதல் விருதுநகர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கக் கட்டடத்தில் வாடகையில் இயங்கி வந்த விருதுநகர் அருங்காட்சியகத்திற்கு, தற்போது ரூ.12.43 கோடி மதிப்பில் சொந்தக் கட்டடம் உருவாக்கப்பட்டுள்ளது.இந்த புதிய அருங்காட்சியகம் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில், 13,159.30 சதுர அடி நிலப்பரப்பில் அமைந்துள்ளது.தரை தளத்தில் அறிமுகக் காட்சி கூடம், மாவட்ட முக்கிய தலைவர்கள் விவரங்கள், இயற்கை வரலாறு, தொல்லியல், வரலாறு மற்றும் சமூக பண்பாட்டு வரலாற்றுக் காட்சிக்கூடங்கள் உள்ளன.முதல் தளத்தில் அலுவலக அறைகள், காப்பாட்சியர் அறை, சிறப்பு கண்காட்சி அறை மற்றும் நவீன AV கூட்டரங்கமும், இரண்டாம் தளத்தில் அரிய பொருட்கள் பாதுகாப்பாக வைப்பதற்கான வைப்பு அறையுடன், வளாகத்தில் தனித்தனியான கழிவறை வசதிகள் மற்றும் சிற்றுண்டி உணவகமும் அமைக்கப்பட்டுள்ளன.இந்த அருங்காட்சியகம் மாவட்டத்தின் நிலவியல் முதல் மானுடவியல் வரை பல்வேறு பிரிவுகளில் அரிய பொருட்களைக் கொண்டுள்ளது.தொல்லியல் சான்றுகளான பூர்ணச்சந்திராபுரம் மற்றும் ஆலமரத்துப்பட்டியில் கண்டெடுக்கப்பட்ட நுண்கற்காலக் கருவிகள், முத்தார்பட்டி மற்றும் ஏழாயிரம்பண்ணை உள்ளிட்ட ஊர்களில் கிடைத்த முழுமையான முதுமக்கள் தாழிகள், குறியீடுகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.வரலாற்றுச் சிறப்புமிக்க கல்வெட்டுகளான சாத்தூர் நென்மேனி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட, கி.பி. 823-ஆம் ஆண்டைச் சேர்ந்த முற்காலப் பாண்டிய மன்னன் ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபன் காலத்துக் கல்வெட்டு இங்குள்ள முக்கிய ஈர்ப்பாகும். இது பண்டைய நீர்ப்பாசன முறையின் முக்கியத்துவத்தை விளக்குகிறது.மேலும், 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணத் தீர்த்தங்கரர் சிற்பங்கள், நடுகற்கள் மற்றும் சதிக்கல் சிற்பங்கள் கற்சிலைப் பூங்காவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.பாறை வகைகள், படிமங்கள், பதப்படுத்தப்பட்ட பறவைகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள், ஓலைச்சுவடிகள், நாணயங்கள் மற்றும் பழியர் பழங்குடியினரின் புழங்கு பொருட்கள் எனப் பலதரப்பட்ட இயற்கை மற்றும் பண்பாடு சேகரிப்புகள் உள்ளன.பொதுமக்களும், மாணவர்களும் மாவட்டத்தின் வரலாற்றையும், இயற்கையையும் ஒரே இடத்தில் அறிந்துகொள்ளும் வகையில் சிறந்த கல்வி மையமாக இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில், அருங்காட்சியக காப்பாட்சியர் திரு.பால்துரை, விருதுநகர் நகர்மன்றத்தலைவர் திரு.ஆர்.மாதவன், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.        

Feb 27, 2026

சிவகாசி - விருதுநகர் சாலையினையும், அழகாபுரி - விருதுநகர் சாலையினையும் இரு வழிச்சாலையிலிருந்து நான்கு வழிச்சாலையாக மேம்படுத்தும் பணிகளுக்கு அமைச்சர் பெருமக்கள் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தனர்.

விருதுநகர் மாவட்டம், விருதுநகரில் (26.02.2026) நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில்,  ரூ.96 கோடி மதிப்பில் சிவகாசி - விருதுநகர் சாலையினையும், ரூ.85 கோடி மதிப்பில் அழகாபுரி - விருதுநகர் சாலையினையும் இரு வழிச்சாலையிலிருந்து நான்கு வழிச்சாலையாக மொத்தம் ரூ.181 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணிகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள்,  சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.அசோகன் அவர்கள் மற்றும்  சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் ஆகியோர் முன்னிலையில்,  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் அவர்கள் மற்றும்  நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் ஆகியோர் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தனர். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சாலை வசதிகளை மேம்படுத்துவதற்காவும், விரிவுபடுத்துவதற்காவும், சாலை பாதுகாப்பினை உறுதிபடுத்துவதற்கும் பல்வேறு திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகிறார்கள்.விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாநில நெடுஞ்சாலையான திருவில்லிபுத்தூர் -சிவகாசி - விருதுநகர் - அருப்புக்கோட்டை- திருச்சுழி-நரிக்குடி- பாத்திப்பனூர் சாலை மிக முக்கியமான மற்றும் நீளமான சாலையாகும். இச்சாலையானது சுமார் 103 கிமீ விருதுநகர் மாவட்டத்திலும், 6 கி.மீ இராமநாதபுரம் மாவட்டத்திலும் உள்ளது.இந்த சாலையானது தென்காசி, இராஜபாளையம், திருவில்லிபுத்தூர், சிவகாசி ஆகிய நகரங்களிலிருந்து மக்கள் ராமேஸ்வரம் செல்வதற்கு மிகவும் முக்கியமான சாலையாகும்.          விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இந்த மாநில நெடுஞ்சாலையான திருவில்லிபுத்தூர் - சிவகாசி - விருதுநகர் - அருப்புக்கோட்டை- திருச்சுழி - நரிக்குடி -பாத்திப்பனூர் சாலையில் 103 கி.மீ நீளத்தில் முதன் முதலாக ஆணைக்குட்டத்திலிருந்து ஆமத்தூர் வரை 5 கிமீ நீளத்திற்கு ரூ.30 கோடி மதிப்பிலும், ஆமத்தூரிலிருந்து விருதுநகர் வரை ரூ.66 கோடி மதிப்பில் 9 கிமீ நீளத்திற்கு நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்துவதற்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இரண்டவதாக, வத்றாப்பிலிருந்து அழகாபுரி வழியாக விருதுநகர் வரை உள்ள மாநில நெடுஞ்சாலையான வத்றாப் - மகாராஜபுரம்- அழகாபுரி - விருதுநகர் சாலையில் அழகாபுரியில் உள்ள நான்கு வழிச்சாலையையும், விருதுநகரில் உள்ள நான்கு வழிச்சாலையையும் இணைக்கும் பொருட்டு, அழகாபுரி - விருதுநகர் இடையே உள்ள 20 கிமீ நீளமுள்ள சாலையை தற்போது விருதுநகரிலிருந்து எரிச்சநத்தம் அருகில் உள்ள சமத்துவபுரம் வரை 12.60 கி.மீ நீளத்திற்கு நான்கு வழிச்சாலையாக அமைப்பதற்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.   இச்சாலைகள் நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பட்சத்தில் போக்குவரத்து நெரிசல் குறைவதோடு பயண நேரம் குறையும் என தெரிவித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுடைய மகத்தான ஆட்சியில் மிகச் சிறப்பான திட்டங்களில் ஒன்றாக விருதுநகர் மாவட்டத்தின் உடைய தலைநகராக இருக்கக்கூடிய விருதுநகரையும் மாவட்டத்தினுடைய முக்கிய தொழில் கேந்திரமாக இருக்கக்கூடிய சிவகாசியையும் மாநில நெடுஞ்சாலையாக இருக்கக்கூடிய இந்த சாலையை நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்தக்கூடிய சிறப்பான பணிக்கும்,     அதுபோல மதுரையில் இருந்து கொச்சி வரை செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்து விருதுநகரை இணைக்க கூடிய வகையில் அழகாபுரியிலிருந்து எரிச்சநத்தம், செங்குன்றாபுரம் வழியாக விருதுநகரை இணைக்கக்கூடிய சாலையையும் நான்கு வழி சாலையாக அகலப்படுத்தக்கூடிய சிறப்பான பணிக்கும் இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.இந்தப் பணிகள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது, அனைவரும் அறிந்ததே. விருதுநகரையும் சிவகாசியையும் இணைக்கக்கூடிய சாலையை முதற்கட்டமாக சிவகாசியில் இருந்து ஆமத்தூர் வரை ஒரு பகுதியாகவும், ஆமத்தூரில் இருந்து விருதுநகரை இணைக்கக் கூடிய சாலையை மறு பகுதியாகவும் என இந்த இரண்டு பணிகளும் ஏறத்தாழ ரூ.96 கோடி மதிப்பீட்டில் மிகச் சிறப்பான வகையிலே இந்த இருவழிச் சாலையானது நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தப்பட இருக்கின்றது.அதுபோல அழகாபுரியிலிருந்து விருதுநகரை இணைக்கக் கூடிய சாலை ஏறத்தாழ ரூ.85 கோடி மதிப்பீட்டில் மணிகள் பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.சிவகாசி மாநகரத்தில் சுற்றுவட்ட சாலைப்பணிகளில் ஒரு பகுதி முடிவுற்று மற்றொரு பகுதி பணிகள் தொடங்கியிருக்கிறது. அதுபோல சிவகாசி சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலம் முடிவு பெற்று மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சியில் நீண்ட காலமாக மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கக் கூடிய கோரிக்கையான திருத்தங்கள் மேம்பாலம் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டு, அந்த பணிகளும் துவக்கப்பட்டுள்ளது.எனவே நம்முடைய  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அரசு உட்கட்டமைப்பு வசதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. திட்டங்களை அறிவிப்பதோடு மட்டுமல்லாமல், அறிவிக்கப்பட்டிருக்கக் கூடிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடுகள் முறையாக செய்யப்பட்டு அந்தப் பணிகளும் துவக்கி வைக்கப்பட்டு இருக்கக்கூடிய காட்சியை நாம் காண்கின்றோம்.எனவே  முதலமைச்சர் அவர்களுடைய தலைமையிலான இந்த அரசுக்கு மாவட்ட மக்கள் என்றும் உறுதுணையாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் (விருதுநகர்) திருமதி பாக்கியலெட்சுமி, நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Feb 25, 2026

விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களுக்கான சிறுதானியங்கள் மதிப்பு கூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்த பணிமனை கருத்தரங்கு நிகழ்ச்சி.

விருதுநகர் மாவட்டம், விருதுநகர் ஜெய் ரெசிடென்சியில்  (24.02.2026) சென்னை அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி,  விருதுநகர் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, சேலம் தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரிய பயிற்சி மையம் சார்பில் நடைபெற்ற சிறுதானிய இயக்கம் - விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களுக்கான சிறுதானியங்கள் மதிப்பு கூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்த பணிமனை கருத்தரங்கு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் குத்துவிளக்குயேற்றி தொடங்கி வைத்தார்.சிறுதானியங்கள், காலநிலை மாற்றத்திற்கேற்ற பயிராக உலகளவில் அங்கீகரிப்பட்டுள்ளது. இச்சிறுதானியங்கள் இரசாயன உரங்கள் இன்றி, இயற்கை முறையில் விளைவிக்கப்படுவதால் ஏற்றுமதிக்கு உகந்த பயராகவும் உள்ளது.இந்தியாவிலிருந்து சிறுதானியங்கள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதிக ஊட்டச்சத்து  காரணமாக, சந்தைகளில் இவற்றின் தேவை பெரிதும் அதிகரித்து வருகின்றது. சிறுதானிய உற்பத்தி மற்றும் மதிப்புக் கூட்டுதலில் முன்னோடி மாவட்டமாக  விருதுநகர் மாவட்டம் திகழ்கிறது.விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களுக்கான சிறுதானியங்கள் மதிப்பு கூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்த கருத்தரங்கு இன்று நடைபெறுகிறது. சிறுதானிய பயிரிடும் பரப்பளவை அதிகரித்தல், மதிப்புக் கூட்டு மற்றும் தொழில் முனைவோர் உருவாக்கம், விற்பனை மற்றும் சந்தை இணைப்பு ஆகியவை இந்த கருத்தரங்கின் நோக்கமாகும்.மேலும், விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்கள் மூலம் மதிப்பு கூட்டப்பட்ட சிறுதானிய பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு, செயல்விளக்கம் விவசாயிகளுக்கு அளிக்கப்படுகிறது. மேலும், அரசின் திட்டங்கள் மற்றும் மானியங்கள் குறித்தும், தொழில்நுட்பங்கள், இயற்கை முறை உற்பத்தி சான்றிதழ், ஏற்றுமதி வாய்ப்புகள் குறித்தும் எடுத்துரைக்கப்படவுள்ளன.எனவே, விவசாயிகள், வணிகர்கள்  வணிகம் செய்வது, மதிப்பிக்கூட்டல், வங்கி கடனுதவிகள், ஏற்றுமதி வாய்ப்புகள் உள்ளிட்டவைகளை நன்கு அறிந்து கொண்டு பயன் பெற  வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் கோவிலாங்குளம் வேளாண் அறிவியல் நிலைய பண்ணை மேலாளர் திரு.ஜீவா அவர்கள் காலநிலை மாற்றங்களுக்கு ஏற்ப சிறு தானியங்கள் ரகங்கள் தேர்வு, உற்பத்தி தொழில்நுட்பங்கள், பயிர் மேலாண்மை, அறுவடை மற்றும் அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்பங்கள் குறித்து எடுத்துரைத்தார்.மேலும், கோவிலாங்குளம் வேளாண்மை அறிவியல் நிலைய உணவு அறிவியல் துறை இணை பேராசிரியர் டாக்டர்.நல்லகுறும்பன் அவர்கள் சிறுதானியங்களின் ஊட்டச்சத்து மதிப்பு மற்றும் ஆரோக்கிய நன்மைகள் குறித்தும்,மதுரை சமுதாய அறிவியல் கல்லூரி உணவு அறிவியல் துறை பேராசிரியர் டாக்டர் கலைச்செல்வன் அவர்கள் சிறுதானியங்களுக்கான பதப்படுத்துதல் தொழில்நுட்பம் மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு குறித்தும்,விருதுநகர் மாவட்ட திட்ட மேலாளர் (தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம்) திரு.பிலிப் மில்டன் அவர்கள் சிறுதானியங்களுக்கான வணிகம் மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகள், பேக்கிங், லேபிளின் தொழில்நுட்பங்கள், FSSAI உரிமம் பெறுதல் மற்றும் ஆன்லைன் யுக்திகள் குறித்தும் எடுத்துரைத்தனர்.இந்நிகழ்வில் துணை ஆட்சியர்(அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி, மதுரை) திரு.எம்.ரெங்கசாமி, வேளாண்மை இணை இயக்குநர் திரு.பா.மோகனதாஸ் சௌமியன், துணை இயக்குநர்(வேளாண் வணிகம்) திருமதி செல்வி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) திருமதி அ.அம்சவேணி, தொழில் முனைவோர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Feb 25, 2026

தேர்தல் மண்டல அலுவலர்கள் மற்றும் காவலர்களுக்கான தேர்தல் பணிகள் குறித்து பயிற்சி வகுப்பு .

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (24.02.2026) சட்டமன்றத்தேர்தல்-2026 முன்னிட்டு, மாவட்டத்தில் மண்டல அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலர்கள் மற்றும் மண்டல காவலர்களுக்கு தேர்தல் பணிகள் குறித்து பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இந்த பயிற்சி வகுப்பில் மண்டல அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய உடனடி பணிகள், வாக்குச்சாவடி பணிகள், தேர்தல் தொடர்பாக  வாக்காளர் விழிப்புணர்வு பணிகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்காளர் சரிபார்ப்பு காகித தணிக்கை இயந்திரங்கள் கையாளுதல், வாக்குச்சாவடி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள், வாக்குப்பதிவு முடிவுற்றதும் செய்ய வேண்டிய பணிகள், தேர்தல் பணிகளில் உள்ள முக்கியமான படிவங்கள் மற்றும் சான்றிதழ்களை கையாளுதல் உள்ளிட்டவை குறித்து பயிற்சியளிக்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திருமதி பிர்தௌஸ் பாத்திமா, சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான்,I A S ., அனைத்து மண்டல அலுவலர்கள் மற்றும் காவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Feb 25, 2026

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ்,மாவட்டத்தின் இலக்கான 36 முகாம்கள் சிறப்பாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளன மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.

  விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், கல்லமநாயக்கன்பட்டி எஸ்.எம்.எஸ். கல்லூரியில் (24.02.2026) நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், 36 ஆவது பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S ., அவர்கள் பார்வையிட்டார்.பின்னர், மாவட்டத்தின் இலக்கான 36 முகாம்களை பூர்த்தி செய்து சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களை பாராட்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேடயங்களை வழங்கினார்.தமிழ்நாடு அரசு சாமானிய மக்களும் தரமான மருத்துவ சேவைகளை பெற வேண்டும் என்பதற்காக மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48, வருமுன் காப்போம், இதயம் காப்போம், நடப்போம் நலம் பெறுவோம் போன்ற பல்வேறு  திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.இந்த வரிசையில் தமிழ்நாடு அரசு மற்றொரு மருத்துவ சேவை சார்ந்த திட்டமான நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தினை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. மாநிலம் முழுவதும் 1,256 நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம்களை நடத்தி, அனைத்து வயதினருக்கும், குறிப்பாக ஏழை எளிய மக்களுக்கும் அதிநவீன பரிசோதனை சாதனங்கள் மூலம் நோய்களை கண்டறிந்து, நோய் கண்டறியப்பட்டவர்களுக்கு உடனடியாக இலவச சிகிச்சை அளித்து அவர்களின் ஆரோக்கியத்தையும், உயிரையும் காப்பாற்றுவதே நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.பொதுவாக தனியார் மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனைகள் செய்ய ரூ.15,000 வரை செலவாகிறது. ஆனால், நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாமில் மக்களை தேடிச் சென்று அனைத்து பரிசோதனைகளும் இலவசமாக செய்யப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், நோய் கண்டறியப்பட்டால், அதற்கான சிகிச்சைகளும், மருந்துகளும் கூட இலவசமாகவே வழங்கப்படுகின்றன.இதனால், கட்டணம் செலுத்தி மருத்துவம் பார்க்க வசதி இல்லாத ஏழை, எளிய மக்கள் பெரியளவில் பயனடைந்து வருகின்றனர். போக்குவரத்து வசதி அதிகம் இல்லாத இடங்களிலும் முகாம்கள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு முகாமின் போது பொதுமக்கள் எளிதாக புரிந்துக் கொள்ளும் வகையில் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. இம்முகாமில் உயர் இரத்த அழுத்தம், எக்கோ, எக்ஸ்ரே, நீரழிவுநோய் கண்டறிதல்,மார்பக புற்றுநோய், வாய் புற்றுநோய் பரிசோதனை, மின் இதய வரைபடம், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்,கருப்பை வாய் பரிசோதனை, காச நோய் மற்றும் தொழு நோய், சிறுநீரக நோய் பரிசோதனை, உள்ளிட்ட 24 வகையான இரத்த பரிசோதனைகளும் மற்றும் பொது மருத்துவம், மகளிர் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், கண் மருத்துவம், இயன்முறை மருத்துவம், நீரழிவு நோய் மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, குழந்தை மருத்துவம், தோல் மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம், கதிரியக்கவியல் மருத்துவம், சித்தா மருத்துவம், எலும்பு மருத்துவம், இருதய மருத்துவம், பல் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், ஆயுர்வேத  மருத்துவம் போன்ற இலவச சிறப்பு மருத்துவ சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருகிறது.மேலும், இம்முகாமில்  குறிப்பிட்டுள்ள பரிசோதனைகள் மட்டும் இன்றி முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் பதிவு செய்தல், மாற்று திறனாளிகளுக்கான அரசு அடையாள அட்டை வழங்குதல், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான தொழிலாளர் நல வாரியத்தின் உறுப்பினர் அடையாள அட்டை வழங்குதல் மற்றும் வருவாய்துறையினர் மூலமாக வருமானச் சான்றிதழ் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.அந்த வகையில் விருதுநகர்மாவட்டத்தில்மட்டும்36பல்நோக்குசிறப்புமருத்துவமுகாம்கள்இலக்குநிர்ணயிக்கப்பட்டது.மாவட்டத்தில் இதுவரை 35 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. தற்போது 36 ஆவது முறையாக வெம்பக்கோட்டை வட்டம், கல்லமநாயக்கன்பட்டி எஸ்.எம்.எஸ். கல்லூரியில் நடைபெற்ற பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்.மேலும் இந்த சிறப்பு மருத்துவ முகாமில், தூய்மைப் பணியாளர்களுக்கு நல வாரியத்தின் உறுப்பினர் அடையாள அட்டைகளையும் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்த நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் மூலம் இருப்பிடத்திற்கு அருகிலேயே நடத்தப்பட்ட முகாம் மூலம் பரிசோதனை செய்து முடிவுகளை பெற்று, உடனடியாக தீர்வுகளையும், மாற்றுத்திறனாளி, தொழிலாளர் நல வாரிய அடையாள அட்டை, முதலமைச்சரின் காப்பீடு அட்டைகளையும் வழங்கிய மாவட்ட நிர்வாகத்திற்கும், தமிழ்நாடு அரசுக்கும் இம்முகாம் மூலம் பயன்பெற்றவர்கள் நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.இந்நிகழ்வில், விருதுநகர் மாவட்ட மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு.ஜெய்சிங், விருதுநகர் மாவட்ட சுகாதார அலுவலர் மரு.யசோதாமணி, சிவகாசி மாவட்ட சுகாதார அலுவலர் மரு.ஜெகவீரபாண்டியன், மருத்துவத்துறை அலுவலர்கள், வட்டாட்சியர், மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Feb 25, 2026

பொதுமக்கள் தங்களது வாக்குச்சாவடி மையங்களை அறிந்து கொள்ளும் பொருட்டு அந்தந்த சட்டமன்றத் தொகுதிகளில் “Know Your Booth” விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகவல்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 1,200 வாக்காளர்களுக்கு மேல் உள்ள  வாக்குச்சாவடிகளை பிரித்து புதிய வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளன.அதன்படி, 1901 ஆக இருந்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை, தற்போது 98 வாக்குச்சாவடிகள் அதிகரித்து மொத்தம் 1999 வாக்குச்சாவடிகளாக உயர்ந்துள்ளது. அதில் 88 வாக்குச்சாவடி மையங்கள் ஏற்கனவே உள்ள அமைவிடத்திலும், 10 வாக்குச்சாவடிகள் புதிய அமைவிடங்களிலும் உள்ளன.எனவே, இந்த கூடுதல் வாக்குச்சாவடி மையங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளவும், தங்களுக்கான வாக்குச்சாவடி மையத்தை தெரிந்து கொள்ளவும் அந்தந்த சட்டமன்றத் தொகுதிகளில் “Know Your Booth” என்ற தலைப்பில் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் / மாவட்ட தேர்தல் அலுவலர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

1 2 ... 38 39 40 41 42 43 44 ... 140 141

AD's



More News