விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், ஆனையூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் (06.06.2025) சிவகாசி வட்டம், நெடுங்குளம் தனியார் பட்டாசு ஆலையில் 26.04.2025 அன்று ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் என 10 நபர்களுக்கு மொத்தம் ரூ.20 இலட்சம் மதிப்பில் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில், சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் மற்றும் சிவகாசி சார் ஆட்சியர் திருமதி ப்ரியா ரவிச்சந்திரன்,I A S, அவர்கள் ஆகியோர் முன்னிலையில், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் வழங்கினார்.அதன்படி, இந்த வெடி விபத்தில் உயிரிழந்த சிவகாசி வட்டம் சொக்கம்பட்டியைச் சேர்ந்த திருமதி மாரியம்மாள் என்பவரது வாரிசுதாரரான திரு.முனிச்செல்வம் என்பவருக்கும், வத்திராயிருப்பு வட்டம் கூமாப்பட்டியைச் சேர்ந்த திருமதி திருவாய்மொழி என்பவரது வாரிசுதாரரான திரு.ராமர் என்பவருக்கும், சிவகாசி வட்டம் மங்கலத்தைச் சேர்ந்த திருமதி கலைச்செல்வி என்பவரது வாரிசுதாரரான திரு.முத்துச்சாமி என்பவருக்கும், சிவகாசி வட்டம் எம்.புதுப்பட்டியைச் சேர்ந்த திருமதி பாக்கியலட்சுமி என்பவரது வாரிசுதாரரான திரு.துரைராஜ் என்பவருக்கும் தலா ரூ.4 இலட்சம் வீதமும்,வெடி விபத்தில் பலத்த காயமடைந்த கோபாலன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திருமதி ராமசுப்பு மற்றும் ரெங்கபாளையம் கிராமத்தைச் சேர்ந்த திருமதி லட்சுமி ஆகியோருக்கு தலா ரூ.1 இலட்சம் வீதமும்,லேசான காயமடைந்த கோபாலன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திருமதி முனியம்மாள், கூமாப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திருமதி கோமதி, திருமதி பாத்திமுத்து மற்றும் திருமதி ராபீயா பீவி ஆகியோருக்கு தலா ரூ.50,000/- வீதமும் என வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் என 10 நபர்களுக்கு மொத்தம் ரூ.20 இலட்சம் மதிப்பில் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கான காசோலைகளை நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் வழங்கினார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சி அறிவுசார் மையத்தில்(06.06.2025) மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியாக, சிவகாசி மாநகராட்சி சார்பில் ரூ.6 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கான காமிக்ஸ் நூலகத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில், சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் மற்றும் சிவகாசி சார் ஆட்சியர் திருமதி ப்ரியா ரவிச்சந்திரன்,I A Sஅவர்கள் ஆகியோர் முன்னிலையில், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து பார்வையிட்டார்.சித்திரக்கதைகள் நூலகம் என்பது குறுகிய வாசகர்களை கொண்டதாகவே இருக்கிறது. உலக அளவில் இது புகழ்மிக்க ஒரு துறை. உலக அளவில் குழந்தைகள் உடைய வாசிப்பை, உலகை திறந்து விடுவதற்கு காமிக்ஸ் தான் மிக சரியான வழி.இன்று பெற்றோர்களுக்கான மிகப்பெரிய கடினம் குழந்தைகளிடமிருந்து செல்போனை வாங்குவது, ஒளிரும் திரைகளிலிருந்து அவர்களுடைய கண்களை விளக்குவது என்பது பெற்றோர்களுக்கு மிகப்பெரிய சவால். அந்த சவாலுக்கு நிச்சயமாக காமிக்ஸ் உதவும்.இது போன்ற புத்தகங்கள், இது போன்ற வாசிப்பு அனுபவங்கள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த காமிக்ஸ் உலகம் தொடங்கப்பட்டிருக்கிறது. நிறைய பொழுதுபோக்கு அம்சங்கள் நமக்கு வந்துவிட்டன. உள்ளங்கையில் இருக்கக்கூடிய பொழுதுபோக்கு அம்சங்கள் தரக்கூடிய வாய்ப்புகளையே நாம் முழுமையாக நிறைவு செய்து விடவில்லை. கைபேசியில் வரும் அனைத்து தகவலும் தகவல்களையும் பார்ப்பதற்கு நமக்கு நேரம் போதவில்லை. அதனை தேர்ந்தெடுத்து பார்ப்பதற்கான உலகத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும். குறிப்பாக இது போன்று வாசிப்பு அனுபவங்கள் என்பது பல்வேறு சூழ்நிலைகளில் அவர்களை நிறுத்தி யோசிக்க வைப்பது.ஒரு கதை படிக்கும் போது வாழ்வில் நிறைய திருப்பங்கள் வரும். ஒரு திருப்பத்தை எதிர்கொள்வதற்கு மனதளவிலும் நாம் தயாராக இருக்க வேண்டும். அந்த வாசிப்பு உலகத்திற்கு நேரடியாக ஒரு புத்தகத்தை எடுத்து தருவதோ, அவர்கள் படிக்கக்கூடிய பாட புத்தகங்களை தாண்டி, அதை புத்தகங்களுக்கு உடனடியாக அறிமுகம் செய்வதோ நிச்சயமாக உடனடியாக நல்ல விளைவுகளை ஏற்படுத்தாது. அந்த உலகத்திற்கு குழந்தைகளை அழைத்துச் செல்வது என்பது, எப்படி ஒரு குழந்தைக்கு நீச்சல் கற்றுக் கொடுக்க வேண்டும் என்றால், முதலில் பாதுகாப்பு உபகரணங்களோடு அவர்கள் நம்பிக்கையோடு அந்த தண்ணீரில் இறங்குவதற்கு நிறைய ஏற்பாடுகளை செய்கின்றோமோ அதே போன்று வாசிப்பு எனும் கடலில் அவர்களை இறக்குவதற்கு பாதுகாப்பான ஒரு வழிமுறைதான் காமிக்ஸ் என்ற உலகம். அந்த உலகத்திற்கு நாம் குழந்தைகளை கொண்டு செல்வதற்கு இந்த நூலகம் முக்கியமானதாக அமையும்.அந்த வகையில் மாவட்டத்தில் முதல்முறையாக இராஜபாளையத்தில் குழந்தைகளுக்கான காமிக்ஸ் நூலகம் திறந்து வைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அதனைத்தொடர்ந்து சிவகாசியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம், பந்தல்குடியில் உள்ள ராம்கோ சுற்றுச்சூழல் சீரமைப்புப் பூங்காவில் (05.06.2025)உலக சுற்றுச்சூழல் தினம் 2025- யை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.அதனைத் தொடர்ந்து, நரிக்குடி ஊராட்சி ஒன்றியம் பனையூர் கிராமத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.மக்களுக்கு உயிரிப்பல்வகைமையின் முக்கியத்துவத்தையும் அவைகள் சந்தித்து வரும் பிரச்சினைகளையும், அதைக் குறைக்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளையும் குறித்த விழிப்புணர்வு மற்றும் அறிவினை உருவாக்குவதை கருத்தில் கொண்டு ஒவ்வொரு வருடமும் ஜூன் 5 ம் நாள் உலக சுற்றுச்சூழல் தினம் அனுசரிக்கப்படுகிறது. இவ்வருடத்தின் கருப்பொருள் "நெகிழி மாசுபாட்டை முடிவுக்கு கொண்டு வருதல்" என்பதாகும்.வளங்குன்றா வளர்ச்சி என்பது உயிரிபல்வகைமையை அடிப்படையாக கொண்டது. தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் வளர்ச்சி என்பது உயிரிபல்வகைமைக்கு பெரும் சவாலாக உள்ளது. கால நிலை மாற்றம், சுகாதாரப் பிரச்சினைகள், உணவு மற்றும் நீர் பாதுகாப்பு, மற்றும் நிலையான வாழ்வாதரங்கள் போன்றவற்றை இயற்கை அடிப்படையிலான தீர்வுகளிலிருந்து மீட்டெடுப்பதன் மூலமே உயிரிப்பல்வகைமையை நிலைத்திருக்கச் செய்யும்.விருதுநகர் மாவட்டத்தில் 16.8 சதவிதம் இருக்கும் பசுமை பரப்பினை 33 சதவிதம் ஆக அதிகரிக்க பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் 1 கோடி மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக மாவட்டத்தில் 05.06.2025 அன்று உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு, 11 வட்டாரங்களிலும் 360 இடங்களில் 1,12,350 மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் மாவட்டத்தில் உள்ள ஊரக வளர்ச்சித் துறை, விவசாயத்துறை, தோட்டக்கலைத்துறை, துறைகள் உள்ளிட்ட துறைகளில் உள்ள அரசு அலுவலக கட்டிடங்கள், பஞ்சாயத்து நிலங்கள் நகராட்சி பூங்காக்கள், அரசு மருத்துவமனைகள், விவசாய நிலங்கள், முதலிய பல்வேறு இடங்களில் அரசுத் துறை அலுவலர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இந்த மரக்கன்றுகள் நடும் சீரிய முயற்சியில் அனைவரும் தவறாது பங்கு கொண்டு ஒரு மக்கள் இயக்கமாக இணைந்து மரக்கன்றுகளை நடவு செய்து இந்த பூமியை அனைவருக்குமான ஒரு சிறந்த வாழ்விடமாக மாற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.முன்னதாக, பந்தல்குடி ராம்கோ சுற்றுச்சூழல் சீரமைப்பு பூங்காவில், உயிர் பன்முகத்தன்மை குறித்து பல்வேறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி மற்றும் பஞ்சாயத்துக்கள் வாரியாக உயிரிபல்வகைமை மேலாண்மை சட்டம் 2002-ன் படி உயிரிபல்வகைமை மேலாண்மை குழு அமைத்து கிராம மக்களின் பங்களிப்புடன் அரசு அதிகாரிகள் இணைந்து பல்லுயிர் வளங்களை பாதுக்காக்க தேவையான முன்னெடுப்புகளை மேற்கொள்வது பற்றி கலந்தாலோசிக்கப்பட்டது.மேலும், தேசிய உயிரி பல்வகைமை சட்டம், தேசிய உயிரி பல்வகைமை ஆணையம், உள்ளாட்சி நிறுவனங்களில் பல்லுயிர் மேலாண்மை குழு ஆகிய தேசிய, மாநில, உள்ளாட்சி என மூன்று அடுக்குகளில் அமைந்துள்ள இச்சட்டங்கள் மூலம் இந்தியாவில் பல்லுயிர் வளங்களை பாதுகாப்பது குறித்தும், சூழலியலை முன்னேற்றுவது குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
2025-26-ம் ஆண்டு சட்டமன்றக் கூட்டத்தொடரில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு எண்: 22-ல் மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமை உறுப்பினர்களுக்கு 50-இலட்சம் ரூபாய் மீன்வளர்ப்பு உள்ளீட்டு மானியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, மேலும் மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமை உறுப்;பினர்களுக்கு முகமையின் நிதி மூலம் இத்திட்டத்தினை செயல்படுத்திட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து, விருதுநகர் மாவட்டத்தில், இத்திட்டத்தினை செயல்படுத்திட 10-ஹெக்டேர் இலக்காக நிர்ணயம் செய்து ஆணை வழங்கப்பட்டுள்ளது.மேலும், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் விருதுநகர் மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் பதிவு செய்து, மீன்வளர்ப்புத் தொழில் செய்து வரும் மீனவ விவசாயிகளுக்கு உள்ளீட்டு மானியமாக 1-ஹெக்டேருக்கு அதிகபட்சமாக 10,000-எண்ணம் மீன்குஞ்சுகள் கொள்முதல் செய்வதற்கு ரூ.5000- மானியமாக வழங்கப்படவுள்ளது.இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் முகமையில் பதிவு செய்து, மீன்வளர்ப்புத் தொழில் செய்து வரும் மீன்வள விவசாயிகள் 114,B 27/1, வேல்சாமி நகர், என்ற முகவரியில் இயங்கிவரும் விருதுநகர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், தொலைபேசி எண். 04562 - 244 707 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட அளவிலான பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் (PM NATIONAL APPRENTICESHIP MELA (PMNAM)) 09.06.2025 திங்கள் கிழமை அன்று அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், விருதுநகரில் காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரையில் நடைபெறவுள்ளது. மேற்கண்ட தொழிற்பழகுநர் சேர்க்கை முகாமில் அரசு / பிரபல முன்னணி தனியார் தொழிற்நிறுவனங்கள் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். மேலும், ITI - இல் உள்ள தொழிற்பிரிவுகளான 1) Fitter 2) Machinist 3) MMV 4) R&AC 5) ELECTRICIAN 6) Turner 7) Welder 8) Wireman 9) Surveyor 10) COPA மற்றும இதர பிற தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெற்று இது நாள் வரை தொழிற்பழகுநர் பயிற்சி பெறாதவர்கள், மற்றும் 8 முதல் 12 ஆம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்றவர்களும் இத்தொழிற்பழகுநர் சேர்க்கை முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.தொழிற்பழகுநர் பயிற்சியில் சேரும் பயிற்சியாளர்களுக்கு தொழிற்பழகுநர் பயிற்சி காலத்தில் தொழிற் நிறுவனங்களின் நிலைக்கு ஏற்ப மாதந்திர உதவித்தொகையாக ரூ.7,700- முதல் ரூ.13,500-வரை வழங்கப்படும். மேலும், தொழிற்பழகுநர் பயிற்சிக்குப்பின் மத்திய அரசின் தொழிற்பழகுநர் சான்றிதழ், (National Apprenticeship Certificate- NAC) மற்றும் முன்னணி நிறுவனங்களின் மூலம் வேலைவாய்ப்பும் (Placement) வழங்கப்படும். எனவே இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்(04.06.2025) விருதுநகர் வட்டாரத்தில் உள்ள இரண்டு தனியார் ஸ்ரீ வித்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் எஸ். எப். எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில் 11- ஆம் வகுப்பு பயிலும் 30 பள்ளி மாணவர்களுடன் நடைபெற்ற ‘Coffee With Collector” என்ற 198 மற்றும் 199-வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடி, கல்லூரிகள் தேர்வு, உயர்கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் குறித்த உரிய வழிகாட்டுதல் வழங்கினர்.விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, இன்று 198 மற்றும் 199-வது முறையாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், மாணவர்களுடைய உயர்ந்த இலட்சியம், அவர்களுடைய உயர்கல்வி பயில்வதற்கு வழிகாட்டுதல், போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளுதல், தோல்வியை எவ்வாறு எதிர்கொள்வது, அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்களுடைய சந்தேகங்களை அகற்றி, அவர்கள் வாழ்க்கையில் எங்கு பிறந்தோம், நாம் அரசு பள்ளியில் பயின்றோம், நமக்கு வசதி இல்லை, நமக்கு பின்புலம் இல்லை என்பதெல்லாம், வாழ்க்கையில் ஒரு உயர்ந்த இடத்தை அடைவதற்கு ஒரு தடை இல்லை என்பதை புரிய வைத்து, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்புடன் தொடர்ந்து உழைத்தால் நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் சரியான வழிகாட்டுதல் வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவிகளிடம், அவர்களுடைய இலட்சியம், அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம், அவர்கள் உயர்கல்வி பயில விரும்பும் கல்லூரி மற்றும் இடம் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.பள்ளி கல்லூரி படிப்பு என்பது ஒருவரின் வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும். எனவே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின் மூலம் வாழ்க்கைக்கான பல அனுபவங்களை கற்றுக் கொள்ளலாம். அனுபவங்களில் இருந்து கிடைக்கும் கல்விதான் சிறந்த கல்வியாகும்.பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி படிப்பை முடித்தவுடன் கல்லூரி படிப்பில் சேருவதற்காக அனைத்து கல்லூரிகளிலும் தவறாமல் விண்ணப்பம் செய்ய வேண்டும். கடந்தாண்டு எந்த கல்லூரியில் எவ்வளவு கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது போன்ற தகவல்களை தெரிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தங்களது தனித் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்.பன்னிரெண்டாம் வகுப்பில் எடுக்க கூடிய மதிப்பெண்களை பயன்படுத்தி நமக்கான நல்ல வாயப்புகளை உருவாக்கி கொள்ள வேண்டும். உயர்கல்வி எங்கு பயின்றாலும், இந்தியாவில் சிறந்த கல்லூரியை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். வெற்றிக்கு தேவையான விஷயங்களை தொடர்ந்து ஆர்வத்துடன், கவனசிதறல் இல்லாமல், தொடர்ந்து விடா முயற்சியுடனும், கடினமாக உழைத்தால் எளிதாக வெற்றி பெறலாம்.மேலும், ஒவ்வொருவருக்கும் என்று தனித்திறமைகள் உள்ளன. அத்திறமைகளை அனைவரும் வளர்த்து கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
தமிழ்நாடு சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பில் பசுமைத் தமிழ்நாடு இயக்கத்தினை, 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.அதனடிப்படையில், விருதுநகர் காடு மற்றும் மரங்களின் பரப்பை 2030-31 ஆம் ஆண்டிற்குள் அதன் புவியியல் பரப்பில் 23.8 சதவிதம் லிருந்து 33 சதவிதம் ஆக உயர்த்தும் நோக்கத்துடன் பசுமைத் தமிழ்நாடு இயக்கம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பூர்வீக மரங்கள் நடப்பட வேண்டும். நகர்ப்புறங்கள், விவசாய நிலங்கள், கல்வி நிறுவனங்கள். பசுமைத் தமிழ்நாடு இயக்கத்தின் நோக்கங்களில் ஒன்று, பல பங்குதாரர்களை உள்ளடக்கி மக்கள் இயக்கமாக மாறுவதை உறுதி செய்வதாகும்.2030-2031 ஆம் ஆண்டிற்குள் காடு மற்றும் மரங்களின் பரப்பில் 50-60 மில்லியன் டன் கூடுதல் கார்பன் சிங்க்கை உருவாக்க மற்றும் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் இயற்கை அபாயங்களை விரைவாகக் கட்டுப்படுத்த அதிக மரங்களை நடுவது ஆகியன இத்திட்டத்தின் நன்மைகள் ஆகும்.மேலும், விருதுநகர் மாவட்டத்தில் பசுமை பரப்பளவை அதிகரிக்கும் நோக்கில் பசுமை தமிழ்நாடு இயக்கம் மூலமும், மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியாக பசுமை விருதுநகர் இயக்கம் மூலமும் பல்வேறு கட்டங்களாக மரக்கன்றுகள் நடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக, 05.06.2025 அன்று உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு, 11 வட்டாரங்களிலும் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட உள்ளது.விருதுநகர் மாவட்டத்தில் 16.8 சதவிதம் இருக்கும் பசுமை பரப்பினை 33 சதவிதம் ஆக அதிகரிக்க மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவின் படி பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் 1 கோடி மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது.மேலும், ஜீன்-5 உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு, ஜீன் மாதத்தில் 1 இலட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு மாவட்டத்தில் உள்ள ஊரக வளர்ச்சித் துறை, விவசாயத்துறை, தோட்டக்கலைத்துறை, துறைகள் உள்ளிட்ட துறைகளில் உள்ள அரசு அலுவலகங்க கட்டிடங்கள், பஞ்சாயத்து நிலங்கள் நகராட்சி பூங்காக்கள், அரசு மருத்துவமனைகள், விவசாய நிலங்கள், முதலிய பல்வேறு இடங்களில் அரசுத் துறை அலுவலர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்கலாம்.இது போன்று தொடர்ச்சியாக மாவட்டம் முழுவதும் மரக்கன்றுகள் நடும் நிகழ்வுகள் நடைபெற உள்ளன. மாவட்டத்தில் ஒரு கோடி மரக்கன்றுகள் நடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, இந்த சீரிய முயற்சியில் அனைவரும் தவறாது பங்கு கொண்டு ஒரு மக்கள் இயக்கமாக இணைந்து மரக்கன்றுகளை நடவு செய்து இந்த பூமியை அனைவருக்குமான ஒரு சிறந்த வாழ்விடமாக மாற்ற அனைவரும் ஒத்துழைக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
சுதந்திர தின விழாவின் போது, தமிழக முதல்வர் அவர்கள் தலைமையில், பெண்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட, சிறந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கு, சுதந்திர தின விருது 2025 வழங்கப்பட உள்ளது. சிறந்த சமூக சேவகருக்கு ரூ.50,000/- ரொக்கப்பரிசு (ம) சான்றிதழும், சிறந்த தொண்டு நிறுவனத்திற்கு ரூ.1,00,000/- ரொக்கப்பரிசு (ம) சான்றிதழும் வழங்கப்படுகிறது. அதனைத்தொடர்ந்து சிறந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.விதிமுறைகள் தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும் 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூகநலன் சார்ந்த நடவடிக்கைகள் பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து, மக்களுக்கு தொண்டாற்றும் வகையில், தொடர்ந்து பணியாற்றும் சிறந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தொண்டு நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனமாகவும் இருத்தல் வேண்டும். மேற்குறிப்பிட்ட தகுதியுடைய சிறந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனம் இருப்பின் (https://awards.tn.gov.in) என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக 12.06.2025-க்குள் விண்ணப்பித்து, அதன் விவரங்களை மாவட்ட சமூகநல அலுவலகத்தில் 18.06.2025-க்குள் சமர்ப்பிக்குமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. மேலும், தொடர்புக்கு மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம்,மாவட்ட ஆட்சியர் வளாகம், விருதுநகர் மாவட்டம். அலைபேசி எண்.04562-252701 என்ற முகவரியில் நேரடியாக தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசினால் தமிழ்நாடு ஆட்சி மொழிச் சட்டம் 1956 இன் கீழ் 2023 ம் ஆண்டு “எங்கும் தமிழ், எதிலும் தமிழ்” என்னும் திட்டத்தை செயல்படுத்த ஏதுவாக வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மற்றும் தொழிற்சாலைகளில் அவற்றின் பெயர் பலகை தமிழில் சட்டப்படி அமைக்கப்படுவதை 100 சதவிதம் உறுதி செய்ய மாவட்ட குழு அமைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஆய்வுகள் மேற்கோள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதனடிப்படையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியரை தலைவராக கொண்ட மாவட்டகுழுவானது அமைக்கப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் 09.04.2025 அன்று நடைபெற்ற குழுவின் முதல் கூட்டத்தில் 15.05.2025-க்குள் அனைத்து நிறுவனங்களிலும் 100 சதவிதம் தமிழில் பெயர் பலகைகள் அமைக்க மாவட்ட ஆட்சியரால் அறிவுறுத்தப்பட்டது.மாவட்டகுழுவின் இரண்டாவது கூட்டமானது 03.06.2025 அன்று பிற்பகல் 3.00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் வைத்து நடைபெற்றது. மேற்படி கூட்டத்தில் இரண்டு வாரத்திற்குள் அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மற்றும் தொழிற்சாலைகளில் அவற்றின் பெயர் பலகை தமிழில் சட்டப்படி அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரால் எடுத்துரைக்கப்பட்டது. மேலும் இரண்டு வாரத்திற்குள் தமிழில் பெயர் பலகைகள் அமைக்காத நிறுவனங்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட ஆட்சியரால் தெரிவிக்கப்பட்டது.மேலும் அனைத்து கடைகள் நிறுவனங்கள்,உணவு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலை உரிமையாளர்களும் “அய்யன் திருவள்ளுவரின் திருக்குறளை தினம் ஒரு குறள் என்ற அடிப்படையில் பொருள் விளக்கத்துடன் தொழிலாளர்கள் படித்து பயன்பெறும் வகையில் அனைத்து தொழிலாளர்களும் அறியும் வண்ணம் காட்சிப்படுத்திட வேண்டும்“ எனவும் மாவட்ட ஆட்சியரால் தெரிவிக்கப்பட்டது.தமிழில் பெயர் பலகைகள் வைத்தல் மற்றும் திருக்குறளை பொருள் விளக்கத்துடன் காட்சிப்படுத்தும் நிறுவனங்களுக்கு தமிழ் ஆர்வலர்கள் விருதினை சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின விழாக்களில் வழங்க ஏற்பாடு செய்யுமாறும் மாவட்ட ஆட்சியரால் தெரிவிக்கப்பட்டது. எனவே மேற்படி கூட்டத்தில் விருதுநகர் மாவட்ட ஆட்சியரால் தெரிவிக்கப்பட்வாறும் கீழ்க்கண்ட சட்டங்களை பின்பற்றியும் தமிழில் பெயர் பலகை அமைக்குமாறு அனைத்து கடைகள் நிறுவனங்கள்,உணவு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலை உரிமையாளர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து நிறுவனங்களிலும் 100 சதவிதம் தமிழில் பெயர் பலகைகள் அமைக்க அனைத்து கடைகள் உணவு நிறுவனங்கள் தொழிற்சாலைகள் மற்றும் அனைத்து நிறுவன உரிமையாளர்களும் ஒத்துழைப்பு நல்குமாறும், சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதை தவிர்க்க உதவுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. தமிழில் பெயர் பலகை அமைப்பது குறித்தான விதிகள் கீழ்க்கண்டவாறுதமிழில் பெயர் பலகை அமைப்பது குறித்து “தமிழ்நாடு கடைகள் நிறுவனங்கள் சட்ட விதிகள் விதி 15, தமிழ்நாடு உணவு நிறுவனங்கள் சட்ட விதி 42B மற்றும் தொழிற்சாலைகள் சட்ட விதிகள் 113 ஆகியவற்றில் அனைத்து கடைகள் நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் அவற்றின் பெயர் பலகைகள் “தமிழ் மொழியில் முதன்மையாகவும், பிரதானமாகவும் அமைக்க வேண்டும். பிற மொழிகளிலும் எழுத வேண்டும் எனில் தமிழ் மொழிக்கு கீழ் ஆங்கிலத்தில் இரண்டாவது இடத்திலும், இதர மொழிகளில் மூன்றாவது இடத்தில் அதற்கு கீழேயும் எழுதப்பட வேண்டும் என வரையறை “ செய்யப்பட்டுள்ளது.அரசாணை எண்.55 தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை நாள்.02.07.2024ன்படி தமிழில் பெயர் பலகை வைக்காத கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது விதிக்கப்பட்ட அபராதமானது ரூ.50-லிருந்து ரூ.2000- ஆக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, சட்டப்படியும் தமிழ் உணர்வுடனும் அனைவரும் தமது நிறுவனங்களில் மேற்கூறியவாறு தமிழில் பெயர் பலகை அமைக்க வேண்டும் என மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அவர்கள் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசால் விருதுநகர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் / மிகப்பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் நலத்துறையில் மாணவ / மாணவியர்களுக்கென கீழ்கண்டவாறு மொத்தம் 47 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.பள்ளி விடுதிகளில் 24 மாணவர்களுக்கானது மற்றும் 18 மாணவியர்களுக்கானது. கல்லூரி விடுதிகளில் 3 மாணவர்களுக்கானது மற்றும் 2 மாணவியர்களுக்கானது என மொத்தம் 47 இடம் உள்ளது.பள்ளி விடுதிகளில் 4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயில்கின்ற மாணவ / மாணவியர்களும் கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில் பயிலு மாணவ / மாணவியர்களும் சேரத் தகுதியுடையவர்கள் ஆவர். பிற்படுத்தப்பட்டோர் / மிகப்பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் நல விடுதிகளில் அனைத்து வகுப்பைச் சேர்ந்த மாணவ / மாணவியர்களும் குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். விடுதிகளில் எவ்வித செலவினமும் இல்லாமல் பின்வரும் சலுகைகள் வழங்கப்படுகின்றன.1. அனைத்து விடுதி மாணவ / மாணவியருக்கு மூன்று வேலை உணவு மற்றும் தங்கும் வசதியும் அளிக்கப்படும்.2. 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ / மாணவியருக்கு 4 இணை சீருடைகள் தைத்து வழங்கப்படும்.3. 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவியர்களின் கல்வித்திறனை மேம்படுத்தும் பொருட்டு NEET/JEE நுழைவுத் தேர்வுக்கான வினாவங்கி நூல்கள், சிறப்பு வழிகாட்டிகள் மற்றும் வினாவங்கி நூல்கள் வழங்கப்படும்.4. கல்லூரி விடுதிகளில் முதலாம் ஆண்டு தங்கிப பயிலும் மாணவ/மாணவியருக்கு ஜமக்காளமும், பள்ளி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ/மாணவியருக்கு ஆண்டுதோறும் பாய்களும் வழங்கப்படும்.5. பள்ளி/கல்லூா விடுதிகளில் தங்கிப்பயிலும் அனைத்து மாணவ/மாணவியர்களுக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை போர்வைகள் வழங்கப்படும். விடுதிகளில் சேருவதற்கான தகுதிகள்: பெற்றோர் / பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2,00,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.1. இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8கி.மீ.க்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவியருக்கு பொருந்தாது.தகுதியுடைய மாணவ / மாணவியர் விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர் / காப்பாளினிகளிடமிருந்தோ அல்லது மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்தோ இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளை பொறுத்தவரை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினியிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 18.06.2025-க்குள்ளும் கல்லூரி விடுதிகளை பொறுத்தவரை சம்மந்தப்பட்ட விடுதிகாப்பாளர் / காப்பாளினியிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் 15.07.2025-க்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும். மாணவ / மாணவியர்கள் விண்ணப்பிக்கும்பொழுது சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் ஏதும் அளிக்கத் தேவையில்லை. விடுதியில் சேரும்போது மட்டும் இச்சான்றிதழ்களை அளித்தால் போதுமானது.தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு விடுதியிலும் முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.எனவே மாணவ/மாணவியர்கள் அரசின் இச்சலுகைகளை பெற்று, பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S, அவர்கள் கேட்டுக்கொள்கிறார்.