துல்கர் சல்மான் நடிப்பில் அடுத்தடுத்து பல மொழிப் படங்கள் வெளியாக உள்ளன. அவற்றில் மலையாளத்தில் உருவாகியுள்ள அயம் கேம் திரைப்படம் முக்கியமானது. இதில் கயாடு லோஹர் நாயகியாக நடித்துள்ளார். நஹாஸ் ஹிதாயத் இயக்கியுள்ள இப்படம், சூதாட்டத்தை மையமாகக் கொண்ட பழிவாங்கும் கதையாக உருவாகியுள்ளது. வித்தியாசமான சூதாட்டக்காரராக துல்கர் சல்மான் நடித்துள்ளார். படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. படம் ஆகஸ்ட் 20-ஆம் தேதி ஐந்து மொழிகளில் வெளியாகிறது.
நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழில் கன்னிவெடி, சத்தியவான் சாவித்திரி ஆகிய படங்களிலும், தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார். நானி நடிப்பில் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் உருவாகி வரும் தெலுங்கு படம் தி பாரடைஸ். இந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு சிறப்பு நடனம் ஆட கீர்த்தி சுரேஷ் சம்மதித்துள்ளார். ஏற்கனவே நானி, ஸ்ரீகாந்த் ஒடேலா மற்றும் கீர்த்தி சுரேஷ் கூட்டணியில் தசரா திரைப்படம் வெற்றி பெற்றது. அந்த நட்பின் காரணமாகவே முதன்முறையாக ஒரு பாடலுக்கு நடனமாட அவர் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
நாகார்ஜூனா - அமலா தம்பதியின் மகனும் நடிகருமான அகில், விரைவில் இந்திய குடியுரிமை பெற உள்ளதாக தெரிவித்துள்ளார். தற்போது அமெரிக்க குடியுரிமை கொண்டிருந்தாலும், "நான் எப்போதும் இந்தியன்தான். இந்திய குடியுரிமை பெறுவதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன" என்று அவர் கூறியுள்ளார்.
இயக்குநர் ஷஷாங்க் யெலேட்டி இயக்கத்தில் பஹத் பாசில் நடித்துள்ள 'டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்' திரைப்படம் குழந்தைகளை கவரும் வகையிலான ஃபேண்டசி-காமெடி கதையாக உருவாகியுள்ளது.இதில் மேஜிக் கலைஞராக வரும் பஹத் பாசில், ஒரு சிறுமியை தனது மாயாஜாலத்தால் மகிழ்விக்கும் போது எதிர்பாராத சிக்கலில் சிக்கிக் கொள்கிறார். அதன்பிறகு நடைபெறும் சம்பவங்களே படத்தின் மையக்கரு. இயக்குநர் எஸ்.எஸ். ராஜமவுலி தயாரித்துள்ள இந்தப் படம் செப்டம்பர் 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
எழுத்தாளர் ஆனந்த் இயக்கத்தில், அண்ணாமலை தயாரித்துள்ள புதிய திரைப்படம் 'காகங்கள்'. இதில் யோகி பாபு, கிஷோர், விதார்த், லிஜோ மோல் ஜோஸ், குரு சோமசுந்தரம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மனித உணர்வுகள் மற்றும் ஆன்மிக தேடலை மையமாகக் கொண்ட இப்படத்தில், காகங்களின் தனித்துவமான குணாதிசயங்களை கதையின் முக்கிய அம்சமாக எடுத்துள்ளதாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.
தென்னிந்தியாவின் முன்னணி நடிகை ராஷ்மிகா, அழகு குறித்த கேள்விக்கு மனதை கவரும் பதில் அளித்துள்ளார். "வெளிப்புற அழகை விட மனதின் தூய்மையே முக்கியம். நல்ல மனதுடன் வாழ்ந்தால் அதுவே உண்மையான அழகை வெளிப்படுத்தும். நல்ல செயல்களை செய்து வாழ்வதே சிறந்த அலங்காரம்" என்று அவர் கூறியுள்ளார்.
ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா, பிரித்விராஜ் நடித்து வரும் 'வாரணாசி' படத்தின் தலைப்பு தொடர்பான பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது. இந்தத் தலைப்பை முன்பே பதிவு செய்திருந்த தயாரிப்பாளர் சுப்பா ரெட்டி, பேச்சுவார்த்தைக்கு பிறகு ராஜமவுலி தரப்புக்கு பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளார். பிரமாண்டமாக உருவாகும் இந்த படம் 2027 ஏப்ரல் 7-ஆம் தேதி வெளியாக உள்ளது.
ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடிப்பில் நிதேஷ் திவாரி இயக்கும் 'ராமாயணா' திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு தள்ளிப்போனது. தற்போது, ஜூலை 30-ஆம் தேதி வெளியாகும் 'ஸ்பைடர்மேன்'திரைப்படத்துடன் திரையரங்குகளில் டிரைலர் திரையிடப்படவுள்ளது. அதன்பின்னர் யூடியூப் உள்ளிட்ட டிஜிட்டல் தளங்களிலும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இளையராஜா இசையமைத்து, எழுதிய 'பள்ளியெழுச்சி பாவைப் பாடல்கள்' ஆல்பத்தை பாடகர் சஞ்சய் சுப்பிரமணியன் பாடியுள்ளார். இதன் வெளியீட்டு விழாவில் பேசிய இளையராஜா, "1980-களில் திருவண்ணாமலையில் அடிக்கடி கிரிவலம் செல்வேன். அப்போது என்னைப் பார்த்து பலரும் கிரிவலம் செல்லத் தொடங்கியதாக கூறுவார்கள். திருவண்ணாமலையில் காலடி வைத்தவுடன் செருப்பு அணிய மாட்டேன். இந்தப் பாடல்களை இறைவனே எனக்கு அருளினார். இசை என்பது தெய்வீகமான கலை. ஆன்மிகம் என்பது வாழ்க்கையிலிருந்து தனியானது அல்ல; வாழ்க்கையே ஆன்மிகம்" என்று உருக்கமாகப் பேசினார்.
நடிகை சுகன்யா, 12 ஆண்டுகளுக்குப் பிறகு மலையாள சினிமாவுக்கு திரும்புகிறார். ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் ஜோஜூ ஜார்ஜ் நடிக்கும் 'வரவு'படத்தில் கன்னியாஸ்திரி கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார்.