25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Sep 23, 2025

சமூக நல அலுவலகத்தின் கீழ் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் / தட்டச்சர் பணியிடத்திற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.

  விருதுநகர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் காலியாக உள்ள குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம்-2005 ன் கீழ்; இளநிலை உதவியாளர் / தட்டச்சர் (JUNIOR ASSISTANT CUM TYPIST) பணியிடத்தினை நிரப்புவதற்கு விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த கீழ்க்காணும் தகுதியுடைய மகளிரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடம் நேர்முகத்தேர்வு மூலம் நிரப்பப்படும் என்ற விபரம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.           விண்ணப்பிக்க தேவயான கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலம் (முதுநிலை) தட்டச்சு தேர்ச்சி (Both Higher Typing) பெற்றிருக்கி வேண்டும், மேலும், கணினி பயன்பாட்டியல் (Computer on Office Automation) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.எனவே,விண்ணப்பிக்க தகுதியுடைய (பெண்கள் மட்டும்) 30.09.2025 அன்று மாலை 05.00 மணிக்குள் விருதுநகர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் மேற்கண்ட தகுதிச்சான்றுகளுடன் நோில் விண்ணப்பிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Sep 23, 2025

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும்  நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தலைமையில்  (22.09.2025) நடைபெற்றது.இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலை வாய்ப்பு, விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்தகுடி மக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்குச் சென்று, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள். முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடர்புடைய அலுவலர்களை அறிவுறுத்தினார்கள்.  இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) திரு.காளிமுத்து, அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Sep 22, 2025

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், நடைபெற்ற பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமினை  நிதி, சுற்றுச்சூழல்  மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி ஊராட்சி ஒன்றியம், முத்துராமலிங்கபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில்  (20.09.2025) “நலம் காக்கும் ஸ்டாலின்”  திட்டத்தின் கீழ்,  பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமினை  மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S,. அவர்கள் தலைமையில், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் துவக்கி வைத்தார்.முதலமைச்சர் அவர்களால்,   நலம் காக்கும் ஸ்டாலின் திட்டமானது 02.08.2025 அன்று துவக்கி வைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.தமிழகம்  முழுவதும் ”நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தின்கீழ் 1256 பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள், 17 சிறப்பு மருத்துவர்களைக் கொண்டு பிரதி வாரம் சனிக்கிழமை தோறும் நடைபெற உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 36 பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது.இத்திட்டத்தின்கீழ் நடைபெறும் பல்நோக்கு மருத்துவமுகாமில், உயர் இரத்த அழுத்தம், எக்கோ, எக்ஸ்ரே, நீரழிவுநோய் கண்டறிதல்,மார்பக புற்றுநோய், வாய் புற்றுநோய் பரிசோதனை, மின் இதய வரைபடம், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்,கருப்பை வாய் பரிசோதனை, காச நோய் மற்றும் தொழு நோய், சிறுநீரக நோய் பரிசோதனை, உள்ளிட்ட 24 வகையான இரத்த பரிசோதனைகளும் மற்றும் பொது மருத்துவம், மகளிர் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், கண் மருத்துவம், இயன்முறை மருத்துவம்,   நீரழிவுநோய் மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, குழந்தை மருத்துவம், தோல் மருத்துவம், காது, மூக்கு தொண்டை மருத்துவம், கதிரியக்கவியல் மருத்துவம், சித்தா மருத்துவம், எலும்பு மருத்துவம், இருதய மருத்துவம், பல் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், ஆயுர்வேத  மருத்துவம் போன்ற இலவச சிறப்பு மருத்துவ சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருகிறது.                அதனடிப்படையில்,  விருதுநகர் மாவட்டத்தில்,  விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் சத்திரெட்டிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முதலாவது பல்நோக்கு மருத்துவ முகாமில் 444 ஆண்கள்,  703 பெண்கள் என மொத்தம் 1204 பயனாளிகளும், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், குல்லூர் சந்தை ஸ்ரீ வீரப்ப வித்யாலயா உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இரண்டாவது முகாமில் 335 ஆண்கள்,  686  பெண்கள் என மொத்தம் 1088 பயனாளிகளும், திருத்தங்கல்,  கலைமகள் உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மூன்றாவது முகாமில் 549 ஆண்கள்,  764  பெண்கள் என மொத்தம் 1436 பயனாளிகளும், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம் மகாராஜபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நான்காவது முகாமில் 429 ஆண்கள்,  566  பெண்கள் என மொத்தம் 1097 பயனாளிகளும், காரியாபட்டி அமலா மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற ஐந்தாவது முகாமில் 456 ஆண்கள், 898  பெண்கள் என மொத்தம் 1518 பயனாளிகளும், நரிக்குடி அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற ஐந்தாவது முகாமில் 608 ஆண்கள்,  843  பெண்கள் என மொத்தம் 1640 பயனாளிகளும் என இதுவரை நடைபெற்ற 6 முகாம்கள்  மூலம் மொத்தம் 7, 983  பயனாளிகளுக்கு இத்திட்டத்தின் கீழ் பல்வேறு மருத்துவ சேவைகள் அளிக்கப்பட்டதோடு, பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.            அதனைத்தொடர்ந்து, 7-ம் கட்டமாக விருதுநகர் மாவட்டத்தில்,  திருச்சுழி ஊராட்சி ஒன்றியம், முத்துராமலிங்கபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் (20.09.2025) நடைபெற்ற  பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமில், மக்களைத் தேடி மருத்துவத்தின் கீழ்  பொதுமக்களுக்கு மருத்துவ முதலுதவி உபகரணங்கள் அடங்கிய பெட்டகங்களும்,  மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களையும்  அமைச்சர் அவர்கள் வழங்கினார்.மேலும், இம்முகாமில் மேற்கொள்ளப்படும் எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்,கருப்பை வாய் பரிசோதனை முறைகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்னர் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான தொழிலாளர் நல வாரியத்தின் உறுப்பினர் அடையாள அட்டைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திறனாளி அடையாள அட்டைகளை நிதி, சுற்றுச்சூழல்  மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் வழங்கினார்.இம்முகாம்கள் மூலம்,  அனைத்து ஏழை, எளிய மக்களுக்கும் உரிய நேரத்தில் தகுந்த மருத்துவ சிகிச்சைகளும், பல்வேறு வகையான நலத்திட்டங்களும்   மக்களைத் தேடி எளிதில் சென்று சேர்வதால் அதனை பயன்படுத்தி தங்களின் நோய்களுக்கு உரிய தீர்வுகளை காண முடிகிறது எனவும்,  எங்கள் இருப்பிடம் தேடி வந்து எங்களுக்கு மருத்துவ உதவிகளை இத்திட்டத்தின் மூலம் ஏற்படுத்தி தந்த தமிழக அரசுக்கு  நன்றி தெரிவிக்கும் விதமாக தங்களது கருத்துக்களை பொதுமக்கள் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில், விருதுநகர் மாவட்ட சுகாதார அலுவலர் மரு.யசோதாமணி, அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் திரு.மாரிமுத்து, மருத்துவத்துறை அலுவலர்கள், வட்டாட்சியர், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Sep 22, 2025

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், விருதுநகர் மாவட்ட  விளையாட்டு அரங்க மைதானத்தில் குளிரூட்டப்பட்ட ஜிம்னாஸ்டிக் உடற்பயிற்சி மையத்தினை, உரிய சந்தா கட்டணம் செலுத்தி பொதுமக்கள் பயன்படுத்தி பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.

 தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் 2024 - 2025 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் உரையின்போது,  மாவட்ட விளையாட்டு வளாகங்களில் தற்போதுள்ள உடற்பயிற்சி கூடங்கள் ரூ.10 கோடி செலவில் குளிர்சாதன வசதிகளுடன் நவீனமயமாக்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதனடிப்படையில்  தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், விருதுநகர் மாவட்ட விளையாட்டரங்கத்தில் இருந்த உடற்பயிற்சி கூடமானது தற்போது நவீனமயமாக்கப்பட்டு குளிரூட்டப்பட்ட ஜிம்னாஸ்டிக் உடற்பயிற்சி மையமாக மாற்றி அமைக்கப்பட்டு விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் 30.08.2025 அன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.  அனைத்து வயதினரின் ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் மேம்படுத்திடும் நோக்கத்துடன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் மேம்படுத்தப்பட்ட உடற்பயிற்சி உபகரணங்களுடன் கூடிய நவீன குளிரூட்டப்பட்ட உடற்பயிற்சி கூடத்தினை பொதுமக்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் பயன்படுத்துவதற்கு எதுவாக உறுப்பினர் சந்தா கட்டணம் ஒரு மாதத்திற்கு ரூ.944/மும், மூன்று மாதங்களுக்கு ரூ.2549/மும், ஆறு மாதங்களுக்கு ரூ.4248/- மும், ஒரு வருடத்திற்கு ரூ.6797/- மும்  நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே அனைவரும் இந்த நவீன குளிரூட்டப்பட்ட உடற்பயிற்சி கூடத்தினை பயன்படுத்தி பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. என்.ஓ. சுகபுத்ரா,I A S,. அவர்கள் தெரிவித்துள்ளார்.

Sep 22, 2025

பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ், கல்வி உதவித்தொகை பெற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் PM -YASASVI - Top Class Education in Schools for OBC, EBC,  & DNT Students  கல்வி உதவித்தொகை பெற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (National Scholarship Portal)  விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S ,. அவர்கள் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:இதர பிற்படுத்தப்பட்டோர் (BC/MBC/DNC) பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் PM -YASASVI - Top Class Education in Schools for OBC, EBC, & DNT students மத்திய அரசால் செயல்படுத்தப்படவுள்ளது.  2025-26 ஆம் ஆண்டிற்கு தேசிய கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க  பட்டியலிடப்பட்ட ( Top Class Schools)  பள்ளிகளில் பயிலும் தமிழகத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.                இத்திட்டத்திற்கான பெற்றோரது ஆண்டு வருமான வரம்பு ரூ. 2.50 இலட்சம்                இத்திட்டத்தின் கீழ் மாணவர்கள் விண்ணப்பிக்க கடைசி நாள்:30.09.2025                கல்வி நிறுவனங்கள் விண்ணப்பத்தினை சரிபார்க்க கடைசி நாள்:15.10.2025புதுப்பித்தல்:                இத்திட்டத்தின் கீழ் கடந்த  நிதியாண்டில் பயனடைந்த மாணவ, மாணவியர்களின் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (htts://scholarships.gov.in) (National   Scholarship Portal) Renewal Application  என்ற இணைப்பில் (Link)   சென்று OTR  Number (One Time Registration) பதிவு செய்து 2025--26 ஆம் ஆண்டிற்கான விண்ணப்பத்தினை புதுப்பித்தல்  ( Renewal)  மேற்கொள்ளுமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறது. புதியது:                இத்திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் பட்டியிலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ/மாணவியர்கள், தேசிய கல்வி உதவித்தொகைத் தளத்தில் தங்களது கைப்பேசி எண் (Mobile Number) மற்றும் ஆதார் விவரங்களை உள்ளீடு செய்தால் OTR  Number & Password  பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணிற்கு வரப்பெறும்.                மேற்படி OTR Number பயன்படுத்தி 2025-26 ஆம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகைக்கு உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்து புதியது (Fresh Application)  விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.                மேலும் பட்டியிலிடப்பட்ட பள்ளிகளின் விவரங்களை அறிந்திட தொடர்புடைய  முதன்மை கல்வி அலுவலர்களை தொடர்பு கொள்ளுமாறும், இத்திட்டம் தொடர்பான கூடுதல்  விபரங்கள் அறிந்திட  National Scholarship Portal (htts://scholarships.gov.in) இணையதளத்தினை அணுகி  கல்வி உதவித்தொகை பயன்களைப்  பெறுமாறு  மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள்தெரிவித்துள்ளார்.

Sep 20, 2025

தூய்மை தமிழ்நாடு நிறுவனம் சார்பில் கழிவு சேகரிப்பு இயக்கம் 2.0 மூலம் அரசு அலுவலகங்கள் மற்றும் அதன் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பதற்கான தூய்மை உறுதிமொழி

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் (19.09.2025) தூய்மை தமிழ்நாடு நிறுவனம் சார்பில் கழிவு சேகரிப்பு இயக்கம் 2.0 மூலம் அரசு அலுவலகங்கள் மற்றும் அதன் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பதற்கான தூய்மை உறுதிமொழியினை விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S,.  அவர்கள் தலைமையில் அனைத்து அரசு அலுவலர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.அதன்படி,சுத்தமே சுகாதாரம் என்பதை என் வாழ்வியல் வழிமுறையாய் கடைபிடிப்பேன்.தூய்மை மற்றும் சுகாதாரத்துடன் கூடிய வளர்ச்சியே எனது இலட்சியம்.எனது அலுவலகத்தையும் அதன் சுற்றுப்புறத்தையும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக்கொள்வேன்.அலுவலகத்தில் காகிதங்களின் பயன்பாட்டினை குறைப்பதற்கான தொடர் முயற்சிகளை மேற்கொள்வேன்.உணவருந்தும் இடம், கழிப்பறை ஆகியவற்றை முறையாக பயன்படுத்துவதோடு சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க ஒத்துழைப்பு நல்குவேன்.மீதமான உணவுப்பொருட்களை தனியாக சேகரித்து உரிய முறையில் அப்புறப்படுத்துவேன்.தூய்மையை பேணிக் காப்பது என் அலுவலகக் கடமைகளில் ஒன்றாகும் என்பதை நான் நன்கறிவேன்.மேலும், தூய்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி தூய்மையை பேணிக் காக்க அரசு மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளிலும் என்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வேன் எனவும் உறுதி கூறுகிறேன் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.அதனை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களை சுத்தம் செய்யும் நோக்கில், தேவையற்ற பொருட்கள் மற்றும் குப்பைகளைத் தரம் பிரித்துச் சேகரிக்கும் முன்னெடுப்பு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், திட்ட அலுவலர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திரு.கேசவதாசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திருமதி பிரதௌஸ் பாத்திமா உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Sep 20, 2025

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்தவர்களுக்கு,  பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு பயிற்சித் திட்டம் அளிக்கப்படவுள்ளது .

தாட்கோவின் முன்னெடுப்பாக சென்னையில் உள்ள முன்னணி தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு,  ட்ரோன்தயாரிப்பு, கூட்டமைப்பு, சோதனை மற்றும் பறக்கும் தொழில்நுட்பபயிற்சி (Drone Manufacturing Assembly Test& Flying), எம்பெடெட் சென்சார் சோதனை பயிற்சி(Embedded Sensor Testing Program),  பிரிண்டெட் சர்க்யூட் போர்டு வடிவமைப்பு பயிற்சி திட்டம்(PCB Designing Program), பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி திட்டம்(Core Tech Placement program ) போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது. இதற்கான தகுதிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்தவராக இருக்கவேண்டும். ட்ரோன் தயாரிப்பு கூட்டமைப்பு, சோதனை மற்றும் பறக்கும் தொழில்நுட்ப பயிற்சி (Drone Manufacturing Assembly Test& Flying) சம்பந்தப்பட்ட பயிற்சிக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவராகவும், 18 முதல் 35 வயது நிரம்பியவராகவும் இருத்தல் வேண்டும். எம்பெடெட் சென்சார் சோதனை பயிற்சி(Embedded Sensor Testing Program),  பிரிண்டெட் சர்க்யூட் போர்டு வடிவமைப்பு பயிற்சி திட்டம் (PCB Designing Program) மற்றும் பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி திட்டம் (Core Tech Placement program) போன்றபயிற்சிகளுக்கு 18 முதல் 35 வயது நிரம்பியவராகவும், ஏதேனும் ஒரு இளநிலை பொறியியல் பட்டப்படிப்பு அல்லது ஏதேனும் ஒரு பொறியியல் பட்டயப்படிப்பில் (Diploma) தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும். மேற்கூறிய பயிற்சிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதார்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும். தகுதியுள்ள இளைஞர்கள் இப்பயிற்சியில் சேருவதற்கு தாட்கோ இணையதளத்தின் மூலம் www.tahdco.com பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். மேலும் தங்கும் விடுதி மற்றும் உணவு உட்பட செலவினம் தாட்கோ மூலமாக வழங்கப்படும். தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் பதிவுசெய்து இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள்தெரிவித்துள்ளார்.

Sep 19, 2025

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், பந்தல்குடி ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு முகாம் .

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், பந்தல்குடி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், நடைபெற்ற சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் தலைமையில்,  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் (18.09.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மக்களைத் தேடி அரசு அதிகாரிகள் சென்று அவர்களுடைய குறைகளை கேட்டு குறிப்பிட்ட நாட்களுக்குள் மக்களுக்கு உரிய தீர்வை வழங்கவேண்டும் என்ற அடிப்படையில் 15.07.2025 அன்று உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தினை தொடங்கி வைத்தார்.அதனடிப்படையில் விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 349 சிறப்பு முகாம்கள் நடத்த இலக்கு நிர்ணயக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.இம்முகாம்கள் கிராமப்பகுதியான 11 ஊராட்சி ஒன்றிய பகுதியில் 229 முகாம்களும், நகரப் பகுதிகளான சிவகாசி மாநகராட்சி, 5 நகராட்சிகள் மற்றும் 9 பேரூராட்சி பகுதிகளில் 120 முகாம்கள் என மொத்தம் 349 முகாம்கள் நடைபெற உள்ளது.  இம்முகாம்களில் நகரப்பகுதிகளில் 13 துறைகள் மூலம் 43 சேவைகளும் ஊரகப்பகுதிகளில் 15 துறைகள் மூலம் 46 சேவைகள் அளிக்கப்பட்டு வருகிறது.இந்த சிறப்பு முகாம்கள் மூலம் விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 45,766 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. அதில் 23,039 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மேலும், 3644 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 19,083 மனுக்கள் நிலுவையில் உள்ளது. மேலும், இம்முகாம்களை  அமைச்சர் பெருமக்கள், மாவட்ட ஆட்சித்தலைவர், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசுத்துறை உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் தொடர்ச்சியாக ஆய்வு மேற்கொண்டு, அரசு அலுவலர்களுக்கு உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கி வருகிறார்கள்.அந்த வகையில் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், பந்தல்குடி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், நடைபெற்ற சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில்,  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து, மனுக்கள் பதிவேற்றம் செய்வது, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் பெறுவதற்கான சிறப்பு பிரிவுகள் உள்ளிட்டவைகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, அலுவலர்களுக்கு உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற தகுதியுள்ள விடுபட்ட மகளிர்கள் இம்முகாமிற்கு சென்று விண்ணப்பங்கள் அளித்தால் அவர்களுடைய தகுதியின் அடிப்படையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இம்முகாம்களில் வழங்கப்படும் மனுக்கள் உடனடியாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு அதற்கான ஒப்புகைச்சீட்டு வழங்கப்படும். பின்னர், இம்முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு 45-நாட்களுக்குள் உரிய தீர்வு காணப்படும்.எனவே, இம்முகாமினை அனைத்து பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டுமெனவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் தெரிவித்தார்.

Sep 19, 2025

சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் மற்றும் வாக்குச் சாவடிகளை மறுசீரமைத்தல் பணிகள் மேற்கொள்வது தொடர்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின்  மாவட்ட அளவிலான  பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் .

 விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் மற்றும் வாக்குச் சாவடிகளை மறுசீரமைத்தல் பணிகள் மேற்கொள்வது தொடர்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின்  மாவட்ட அளவிலான  பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.01.01.2026 தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல்களை திருத்தம் செய்வதற்கான சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளைத் தொடங்க இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.                        இதன் ஒரு கட்டமாக வாக்குச் சாவடிகளை மறுசீரமைத்தல் செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். இதுவரை ஒரு வாக்குச் சாவடியில் 1500 வாக்காளர்கள் வரை இருக்கலாம் என்ற வரம்பினை தற்போது குறைத்து, எந்தவொரு வாக்குச் சாவடியிலும் 1200 வாக்காளர்களுக்கு மேற்படாமல் இருக்க வேண்டும் என ஆணையம் மாற்றி அமைத்துள்ளது. ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கான வாக்காளர் பதிவு அலுவலரும் அச்சட்டமன்றத் தொகுதிக்கான வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு தொடர்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி அதற்கான பரிந்துரைகளை மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ளனர்.                        இதன் அடிப்படையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின்  மாவட்ட அளவிலான  பிரதிநிதிகளுடன் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இக்கூட்டத்தில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.மேலும், அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்கள், வட்டாட்சியர்கள், மாநகராட்சிஃநகராட்சி ஆணையர்கள் கலந்து கொண்டனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளில் இதுவரை 1901 வாக்குச் சாவடிகள் உள்ள நிலையில் தற்போது மறுசீரமைப்பு செய்ய உத்தேசித்துள்ள அடிப்படையில்; கூடுதலாக 98 வாக்குச்சாவடிகள் உருவாக்கம் செய்ய பரிந்துரைகள் வரப்பெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.                        போதிய அவகாசம் அளித்து வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அரசியல் கட்சியினர் தெரிவித்தனர். இதற்கு மாவட்ட ஆட்சியர், எந்தவொரு தகுதியான வாக்காளரும் விடுபடாமலும், தகுதியற்ற ஒருவரது பெயர், வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத வகையிலும் இப்பணிகள் நடைபெறும் என்று தெரிவித்ததுடன், வாக்குச்சாவடி முகவர்களை நியமனம் செய்து, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை துரிதமாகவும், சரியான முறையிலும் மேற்கொள்வதற்கு தகுந்த ஒத்துழைப்பு வழங்குமாறும் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளைக் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டுக் கொண்டார்.

Sep 19, 2025

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில்,105 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.6.05 கோடி மதிப்பிலான வங்கி கடனுதவிகள்.

விருதுநகர் மாவட்டம், சாத்தூரில்  ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மற்றும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில்,  (18.09.2025) நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் தலைமையில்,வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள்,  சாத்தூர்   வட்டாரத்தில் ஊரக மற்றும் நகர்ப்புர பகுதிகளில் உள்ள 105  மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 871 உறுப்பினர்களுக்கு ரூ.6.05 கோடி மதிப்பிலான வங்கி கடனுதவிகளை வழங்கினார். அதன்படி, தமிழ்நாடு மாநில ஊரக/நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில்,சுய உதவிக்குழு வங்கிகடன் சார்ந்த, 51 குழுக்களுக்கு ரூ.511 இலட்சம் மதிப்பிலும்,  அமுதசுரபி நிதி சார்ந்த, 15 குழுக்களுக்கு ரூ.10 இலட்சம் மதிப்பிலும், வட்டார வணிக வள மைய கடன் சார்ந்த, 25 குழுக்களுக்கு ரூ.12.50 இலட்சம் மதிப்பிலும், வாழ்வாதார நிதி கடன் சார்ந்த, 3  குழுக்களுக்கு ரூ.3.00 இலட்சம் மதிப்பிலும், சுய உதவிக்குழு வங்கிக் கடன் சார்ந்த, 10 குழுக்களுக்கு ரூ.66.10  இலட்சம் மதிப்பிலும், பகுதி அளவிலான கூட்டமைப்பு சார்ந்த, 1 குழுவிற்கு ரூ.2.40 இலட்சம் மதிப்பிலும் என மொத்தம் 105  மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 871 மகளிர்களுக்கு ரூ.6.05 கோடி மதிப்பிலான வங்கி கடன் உதவிகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் வழங்கினார்.ஒரு காலகட்டத்தில் பெண்கள் வெளியில் வரமுடியாத ஒரு சூழ்நிலை இருந்தது. இன்றைய காலகட்டத்தில் திராவிட மாடல் ஆட்சியில் தான், ஆண்களுக்கு சமமாக சுய உதவிக் குழு உதவியுடன் வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. நாகரீகம் ஏற்பட மாற்றங்களும் ஏற்படும். பெண்கள் வெளியில் வந்து தங்களின் மரியாதை பிறப்பதற்கு காரணமாக இருந்தது திராவிட மாடல் தான். பெண்கள் வெளியில் வந்து முன்னேற வேண்டும். ஆணுக்கு பெண் சலித்தவள் அல்ல என்றும், ஆணும், பெண்ணும் சமம் என்றும், பெரியாரைத் தொடர்ந்து, அண்ணாவைத் தொடர்ந்து, மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரைத் தொடர்ந்து கூறியவர் தான் நம்முடைய முதலமைச்சர் அவர்கள்.முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், இந்தியாவிலேயே முதன்முறையாக மகளிர் சுய உதவிக் குழு இயக்கத்தினை தொடங்கி வைத்தார். பெண்கள் பொருளாதாரத்தில் யாரையும் எதிர்பார்க்காமல் தன்னுடைய சொந்த காலில் நிற்க வேண்டும் என்பதற்காக இந்த மகளிர் சுய உதவி குழு செயல்படுத்தப்படுகிறது. சுய உதவிக் குழுக்கள் மூலமாகவோ, தனிப்பட்ட முறையிலோ கடன் உதவி பெறும் போது அதனை திருப்பி செலுத்துவதில் பெண்கள் நியாயமாக உள்ளார்கள்.எவ்வித அடமானம் இல்லாமல் ரூ.50 இலட்சம் வரை கடன் மகளிர் சுயஉதவிக் குழு மூலம் பெண்களுக்கு வழங்கப்படுகிறது. அந்த அளவிற்கு அரசு பெண்கள் மீது நம்பிக்கை கொண்டுள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் கடனுக்கான பணத்தை கட்டும் போது, அடுத்த தடவை அதிகப்படியான கடன் உதவி தரப்படுகிறது. இதன்மூலம்  பெண்கள் தொழில் செய்யலாம். சமுதாயத்தில் தலைநிமிர்ந்து நிற்கலாம். அதனை உருவாக்கித்தந்தவர் டாக்டர் கலைஞர் அவர்கள். அதனை மென்மேலும் மேம்படுத்தி வருபவர் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள். மகளிர் சுயஉதவிக்குழு மூலம் ஈட்டிய வருமானத்தில் வேறு யாரையும் எதிர்பாராமல் மகளிர் அனைவரும் சுயமாக தொழில் புரிய வேண்டும். உங்களால் முடியும் என்று நினைத்து அதனை நிச்சயமாக முடித்து காட்ட வேண்டும். பெண்களுக்கு இல்லாத சக்தி யாருக்கும் இல்லை. சாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் பெண்கள்.நல்ல முதலமைச்சர் நமக்கு கிடைத்திருக்கிறார். அவருக்கு உறுதுணையாக இருப்போம் என  அமைச்சர்அவர்கள் தெரிவித்துள்ளார்.  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, விருதுநகர் மாவட்டத்தில் 14,083 உதவிக்குழுக்கள் செயல்பட்டு வருகிறது. இக்குழுவில் 1 இலட்சத்து 67 ஆயிரம் மகளிர் உள்ளனர். இதில்,2024-2025ல் 982 குழுவினர் புதிய குழு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், 2025-2026 ல் 662 புதிய குழு உருவாக்கப்பட்டுள்ளது. இவ்விரண்டு குழுக்களைச் சேர்ந்த 10,700 உறுப்பினர்களுக்கு 2024-2025 ஆண்டில் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.2025-2026 ல் 4,107 குழுவினருக்கு 432 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.அடுத்தகட்டமாக கடந்த வாரம் மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களால் சுய உதவிக்குழு கடனுதவி  சேலத்தில் தொடங்கி வைக்கப்பட்ட நிலையில் இன்று அருப்புக்கோட்டை வட்டாரத்தில் சுமார் ரூ.9 கோடி கடன் உதவித்தொகை வழங்கப்பட்டது. தற்போது, சாத்தூரில் 105 மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 871 உறுப்பினர்களுக்கு ரூ.6.05 கோடி கடனுதவி வழங்கப்படவுள்ளது.இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர்(தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்கம்) திரு.ஜார்ஜ் ஆண்டனி மைக்கேல், சாத்தூர் நகர்மன்றத்தலைவர் திரு.குருசாமி, முன்னாள் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் திருமதி நிர்மலா கடற்கரை ராஜ்,  உதவி திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) திருமதி வசுமதி, மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

1 2 ... 73 74 75 76 77 78 79 ... 140 141

AD's



More News