மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கல்வித் தகுதியினை பதிவு செய்து வேலைவாய்ப்பிற்காக காத்துக் கொண்டிருக்கும் பதிவுதாரர்களுக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். இத்திட்டத்தின்படி தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு 45 வயது மிகாமலும் , இதர வகுப்பினர் 40 வயது மிகாமலும் இருத்தல் வேண்டும். தங்களது பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கினை துவக்கியிருத்தல் வேண்டும். கல்வித் தகுதியினை பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவடைந்திருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/- மிகாமல் இருத்தல் வேண்டும். பத்தாம் வகுப்பு தோல்வியுற்றோர் : ரூ.200/- பத்தாம் வகுப்பு தேர்ச்சி : ரூ.300/- மாதம் ஒன்றுக்கு பன்னிரெண்டாம் வகுப்புஃபட்டயப்படிப்பு : ரூ.400/- பட்டப்படிப்பு : ரூ.600/-உதவித் தொகை விண்ணப்பத்தினை நேரில் இவ்வலுவலகத்தில் பெற்றோ அல்லது www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, வருவாய் ஆய்வாளரிடம் கையொப்பம் பெற்று வேலைவாய்ப்பு அடையாள அட்டை, அனைத்து அசல் சான்றுகள், ஆதார் அட்டை, குடும்ப அட்டை மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்குப்புத்தகம் ஆகியவற்றுடன் அலுவலக வேலைநாளில் விண்ணப்பத்தினை விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அளிக்க வேண்டும்.மேற்கண்ட உதவித் தொகை காலாண்டு தோறும் கணக்கீடு செய்து நேரடியாக பயனாளிகளது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் தோறும் உதவித்தொகை: கல்வித் தகுதியினை பதிவு செய்து ஓராண்டு நிறைவடைந்திருந்தால் போதுமானது. மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருத்தல் வேண்டும். SSLC மற்றும் அதற்கு கீழ் பதிவு செய்தவர்களுக்கு மாதந்தோறும் ரூ.600/- HSC தேர்ச்சி பெற்று பதிவு செய்தவர்களுக்கு மாதந்தோறும் ரூ.750/- பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்று பதிவு செய்தவர்களுக்கு மாதந்தோறும்ரூ.1000/- வருமான உச்ச வரம்பு கிடையாது. வயது உச்சவரம்பின்றி 10 ஆண்டுகள் வரை மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை பெறலாம்.வேலைவாய்ப்பு அடையாள அட்டை, அனைத்து அசல் சான்றுகள், மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, ஆதார் அட்டை, ஸ்மார்ட் கார்டு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்குப்புத்தகம் ஆகியவற்றுடன் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை விண்ணப்பத்தினை அலுவலக வேலைநாளில் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அளிக்க வேண்டும்மேற்கண்ட உதவித் தொகை மாதம் தோறும் கணக்கீடு செய்து நேரடியாக பயனாளிகளது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.மேலும், உதவித் தொகை பெற்றால் வேலைவாய்ப்பு எந்தவிதத்திலும் பாதிக்கப்படாது. தினசரி பள்ளி, கல்லூரி சென்று பயில்பவராக இருத்தல் கூடாது. சுய தொழில் செய்பவராகவோ இருத்தல் கூடாது. அரசிடமிருந்து வேறு எந்த வகையிலாவது உதவித்தொகை பெறுபவராகவோ, ஊதியம் பெறும் பணியிலோ இருத்தல் கூடாது. இதற்கு பயணப்படி எதுவும் வழங்கப்படமாட்டாது. என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.சுய உறுதிமொழி ஆவணம்ஏற்கனவே இவ்வலுவலகத்தில் உதவித் தொகை விண்ணப்ப படிவம் பெற்று சென்றுள்ள பதிவுதாரர்கள் தங்களது விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இத்திட்டம் ஏற்கனவே நடைமுறையில் உள்ள அரசு திட்டம் என்பதால், ஏற்கனவே முழுமையாக உதவித் தொகை பெற்றுள்ள பயனாளிகள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெறும் மாற்றுத்திறனாளி பயனாளிகள் தொடர்ச்சியாக உதவித் தொகை பெற சுய உறுதிமொழி ஆவணம் ஒவ்வொரு ஆண்டும் சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஏற்கனவே சுய உறுதிமொழி ஆவணம் அளித்திருப்பின் அலுவலகம் வர தேவையில்லை.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் காவல் சார்பு ஆய்வாளர்கள் (SI) (தாலுகா மற்றும் ஆயுதப்படை) - 1299 பணிக்காலியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கை 01.04.2025 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் விருதுநகர் மாவட்ட தேர்வர்கள் பயன்பெறும் பொருட்டு விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பயிற்சி வகுப்புகள் 23.04.2025 அன்று ஆரம்பிக்கவுள்ளது.இவ்வகுப்புகள் திறன் வாய்ந்த பயிற்றுநர்களை கொண்டு நடத்தப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு இத்தேர்வுக்கு தேவையான பாடக்குறிப்புகள் இலவசமாக வழங்கப்படும்.இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உடையவர்கள் https://forms.gle/x33dGAsvQ4xbwUHZ7 என்ற கூகுள் பார்ம் மூலமாகவோ அல்லது விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரடியாக தெரிவிக்கலாம்.மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை studycirclevnr@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாவோ அல்லது அலுவலகத்திற்கு வந்து நேரடியாகவோ தொடர்புகொள்ளலாம். எனவே TNUSRB - SI தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
1. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பள்ளிகள், கல்லூரிகள் பயிற்சி மையங்கள் என அனைத்து இடங்களிலும் பணிபுரியும் இடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் தீர்வு) சட்டம் -2013ன் கீழ் உள்ளக குழு (Internal Committee) அமைக்குமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.2. அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி மையங்கள் என அனைத்து நிறுவனங்களும் www.tnswd-poshicc.tn.gov.in என்ற இணையதள முகப்பில் பதிவேற்றம் செய்திடுமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.உள்ளக குழு அமைக்கப்பட வேண்டிய விபரம் :1. உள்ளக குழுவில் ஒரு பெண் மூத்த அலுவலர் அல்லது பெண் ஊழியரே தலைவராக இருத்தல் வேண்டும்2. குறைந்தது இரண்டு உறுப்பினர்கள் பெண்களின் நலனுக்காக பணியாற்றும் ஆர்வமிக்க நபர்களாக பணியாளர்களில் இருந்து நியமிக்க வேண்டும்3. ஒரு உறுப்பினர் பெண்களுக்கான குற்றங்களை தடுக்கும் பணிகளில் ஈடுபடும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் ஒருவராக இருத்தல் வேண்டும்.4. உள்ளக குழுவில் ஐம்பது சதவீதம் பெண்கள் இருத்தல் வேண்டும்தண்டனைகள்• உள்ளக குழு அமைக்கப்படாத இடங்களுக்கு ரூ.50,000/- அபராதமாக விதிக்கப்படும், மேலும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்களின் மீது எடுக்கப்படும் பரிந்துரைகளில் நடவடிக்கை எடுக்காமலும், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு ஆண்டறிக்கை சமர்பிக்காமலும் இருப்பினும் அபராதம் விதிக்கப்படும்.• நிறுவனம், சட்டத்திற்கு உட்படாமல் மீண்டும் மீண்டும் தவறிழைப்பின் அபராதத் தொகை இரட்டிப்பாக்கப்படுவதுடன், கடுமையாக தண்டனைக்கும் உட்படுத்தப்படுவர்.• விற்பனை கூடம்/பணியிட பதிவு அனுமதி இரத்து செய்யப்படுவதுடன், மீள பெறுதல்/புதுப்பித்தல் செய்யப்படாது என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து, நடைபெற்ற 2025-2026 -ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், விருதுநகர் மாவட்டத்தில் நான்கு வரலாற்றுச் சின்னங்கள் பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக அறிவிக்கப்படும் என சட்டசபையில் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் அறிவித்துள்ளார்.அதன் படி, நடைபெற்ற 2025-2026 -ஆண்டிற்கான தொல்லியல் துறை மானியக் கோரிக்கையில், விருதுநகர் மாவட்டம், நரிக்குடி மறையூர் சத்திரம், இராஜபாளையம் வட்டம், மீனாட்சிபுரம் வானிறைக்கல், குகைஓவியம் மற்றும் புடைப்புச் சிற்பங்கள், திருவில்லிபுத்தூர் வட்டம், மம்சாபுரம் கிராமத்திலுள்ள நாயக்கர் கால மண்டபம், மற்றும் திருவில்லிபுத்தூர் வட்டம் பிள்ளையார் நத்தம் மண்டபம் ஆகிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சின்னங்கள் தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக அறிவிக்கப்படும் என நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் அறிவித்துள்ளார்.
18 வயது நிறைவடையாத பெண்கள் குழந்தைகளாகவே கருதப்படுவர். அவ்வாறு 18 வயது நிறைவடையாத பெண்ணுக்கும், 21 வயது நிறைவடையாத ஆணுக்கும் நடைபெறுவதை தடை செய்வதே இச்சட்டத்தின் நோக்கமாகும். குழந்தை திருமணம் தொடர்பாக புகார்கள் 1098 அல்லது 181 மூலம் பெறப்பட்ட உடன் நடவடிக்கையாக குழந்தையின் விபரம் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் கீழ் பணிபுரியும் சமூக நல களப்பணியாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டு, களப்பணியாளர்கள், சைல்டு லைன் பணியாளர்கள், ஒருங்கிணைந்த சேவை மையம் வழக்கு பணியாளர்கள், ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் ஆகியோர்களால் நேரடியாக குழந்தையின் இல்லத்திற்கு சென்று விசாரணை செய்யப்படும். குழந்தை திருமணம் நடைபெற்றதற்கான ஆதாரங்களோ, திருமணம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் ஏதேனும் செய்யப்பட்டிருப்பின் உடனடியாக குழந்தையினை மீட்டு குழந்தைகள் நல குழுமத்தில் ஒப்படைக்கப்படும். குழந்தை திருமணம் நடைபெற்றிருப்பின் குழந்தையினை திருமணம் செய்து கொண்ட மணமகன், மணமகனின் பெற்றோர், குழந்தையின் பெற்றோர் மற்றும் திருமணம் நடைபெறுவதற்கு உடந்தையாக இருந்த அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும்.இளவயதில் கருவுற்ற குழந்தைகள் தொடர்பாக புகார் பெறப்படின் காரணமான நபர் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்யப்படும்வழங்கப்படும் தண்டனைகள் 18 வயது நிரம்பாத பெண் குழந்தையைத் திருமணம் செய்யும் ஆணுக்கு அதிக பட்சமாக 2 வருட கடும் சிறைத்தண்டனை அல்லது ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். குழந்தை திருமணத்தை நடத்தி வைப்போருக்கு 2 வருடம் கடும் சிறைத்தண்டனை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இக்குற்றம் பிணையில் விடுவிக்க இயலாத குற்றமாகும். 18 வயது நிரம்பாத பெண் குழந்தையை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி கருவுற்ற நிலையில் கண்டறியப்பட்டின் காரணமான நபருக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும் கடந்த 01.03.2025 முதல் 31.03.2025 வரை பதினான்கு குழந்தை திருமணங்கள் தொடர்பாக புகார் பெறப்பட்டதை தொடர்ந்து அவற்றின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது மற்றும் 18 வயது பூர்த்தியடையாமல் கருவுற்ற பெண் குழந்தைகள் தொடர்பாக பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பதினாறு நபர்களின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளுது என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் மக்களை தேடிச்சென்று குறைகளைக் கேட்டறியவும், பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும், மக்களை நாடி மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே சென்று ஆய்வு செய்திட "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற புதிய திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர், அரசு அலுவலர்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் வட்டம் அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும், தங்கு தடையின்றி மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்து வருகின்றனர்.அதன்படி, விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டத்தில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற திட்ட முகாமானது 16.04.2025 காலை 9 மணி முதல் மறுநாள் 17.04.2025 அன்று காலை 9 மணி வரை நடைபெற்று வருகிறது. இந்த முகாமின் முதல் நாளான இன்று, மாவட்ட ஆட்சித்தலைவர், பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் அரசின் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், சுக்கிலநத்தம் ஊராட்சியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ.10 இலட்சம் மதிப்பில், கட்டப்பட்டு வரும் நியாயவிலைக் கடையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்னர், சுக்கிலநத்தம் கிராமத்தில் செயல்பட்டு வரும் நூலகத்தினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, நூலகத்திற்கு வருகை தரும் வாசகர்களின் விபரம், நூல்களின் இருப்பு, அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டறிந்தார்.மேலும், சுக்கிலநத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம், பயன்பெறும் மாணவர்கள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்து மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.டி.மீனாட்சிபுரம் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ.8 இலட்சம் மதிப்பில், புதிதாக கட்டப்பட்டு வரும் பயணியர் நிழற்குடை கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்னர், டி.மீனாட்சிபுரம் ஊராட்சியில், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ரூ.18.50 இலட்சம் மதிப்பீட்டில், புதிதாக கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும், மீனாட்சிபுரம் ஊராட்சியில், தூய்மைப் பணியாளர்களிடம் அவர்களின் பணிகள், ஊராட்சியில் செயல்படுத்தப்படும் திடக்கழிவு மேலாண்மை தொடர்பாக கலந்துரையாடினார்.வேலாயுதபுரம் ஊராட்சியில் செயல்பட்டு வரும் நியாயவிலைக் கடையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, பொருட்களின் இருப்பு, தரம், பயன்பெறும் குடும்ப அட்டைத்தாரர்கள், தராசு உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார்.வேலாயுதபுரம் ஊராட்சியில், பல் கிராம நீரியல் திட்டத்தின் கீழ், ரூ.20.48 இலட்சம்மதிப்பீட்டில்,குடிநீர்இணைப்புகள்வழங்குவதற்கான பணிகள் முடிக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதனை தொடர்ந்து, அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார். பின்னர், அனைத்து ஊராட்சிகளில் மேற்கொள்ள வேண்டிய குடிநீர், சுகாதாரம் மற்றும் சாலைப் பணிகள், அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் உரிய பயனாளிகளை சென்றடைவதை உறுதி செய்வது குறித்து அனைத்து அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.தெ.கண்ணன்,த.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மரு.தண்டபாணி, வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டத்தில் சீர்மரபினர் நலவாரியத்தில் உறுப்பினர் சேர்க்கைக்கான சிறப்பு முகாமானது மூன்றாவது கட்டமாக, ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 19.04.2025 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை கீழ்க்கண்ட இடங்களில் நடைபெற இருக்கிறது.மேலும், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் உச்சிமாகாளி உற்சவ மண்டபம், மேட்டுத்தெரு, ஸ்ரீவில்லிபுத்தூரிலும், அய்யம்பட்டி, மறவர் சமுதாயக்கூடம், PRC டிப்போ பின்புறத்திலும், TELC தொடக்கப்பள்ளி, ஆயர் தர்மம், வத்திராயிருப்பு ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.கல்வியில், பொருளாதாரத்தில் மேம்பாடு அடைவதற்கான முயற்சியில் பங்கேற்று இவ்வாய்ப்பினை பயன்படுத்தி சீர்மரபினர் சமுதாய மக்கள் உறுப்பினர்களாக சேர்ந்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S ., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், காரிசேரி கிராமம், வடக்குத் தெருவில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் பொங்கல் மறுபூஜைக்காக நேற்று 14.4.2025 மாலை சுமார் 3.10 மணியளவில் ரேடியோ அமைக்கும் பணியின்போது அருகில் உள்ள டிரான்ஸ்பார்மர் வயரின் மீது மின்சார வயர் பட்டதில் ரேடியோ அமைக்கும் பணியை மேற்கொண்ட காரிசேரி கிராமத்தைச் சேர்ந்த திரு.திருப்பதி (வயத 27) த/பெ.ராமர் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.மேலும், மேற்படி சம்பவம் இறந்த திரு.திருப்பதி அவர்களின் வீட்டிற்கு அருகில் நிகழ்ந்ததால் அவருடைய மனைவி திருமதி.லலிதா (வயது 25) மற்றும் பாட்டி திருமதி.பாக்கியம் (வயது 75) ஆகியோர் திரு.திருப்பதி என்பவரை காப்பாற்ற முயன்றபோது மேற்படி இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்ததில் அவர்களும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். மேலும், இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் (15.04.2025) CEOA மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 10, 11 மற்றும் 12-வது வகுப்பில் பயிலும் 200-ற்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுடனான Coffee With Collector” என்ற 163- வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடி, பள்ளித் தேர்வு, உயர்கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் குறித்த உரிய வழிகாட்டுதல் வழங்கினார்.விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவ / மாணவியர்களுடன் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, இன்று 163-வது முறையாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவர்களுடைய உயர்ந்த இலட்சியம், அவர்களுடைய உயர்கல்வி பயில்வதற்கு வழிகாட்டுதல், போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளுதல், தோல்வியை எவ்வாறு எதிர்கொள்வது, அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்களுடைய சந்தேகங்களை அகற்றி, அவர்கள் வாழ்க்கையில் எங்கு பிறந்தோம், நாம் அரசு பள்ளியில் பயின்றோம், நமக்கு வசதி இல்லை, நமக்கு பின்புலம் இல்லை என்பதெல்லாம், வாழ்க்கையில் ஒரு உயர்ந்த இடத்தை அடைவதற்கு ஒரு தடை இல்லை என்பதை புரிய வைத்து, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்புடன் தொடர்ந்து உழைத்தால் நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் சரியான வழிகாட்டுதல் வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவிகளிடம், அவர்களுடைய இலட்சியம், அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம் உள்ளது என்பது குறித்து கேட்டறிந்தார்.பள்ளி, கல்லூரி படிப்பு என்பது ஒருவரின் வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும். எனவே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின் மூலம் வாழ்க்கைக்கான பல அனுபவங்களை கற்றுக் கொள்ளலாம். அனுபவங்களில் இருந்து கிடைக்கும் கல்விதான் சிறந்த கல்வியாகும்.மத்திய மாநில அரசுகளின் மூலம் நடத்தப்பெறும் பல்வேறு போட்டித்தேர்வுகள் குறித்து தெரிந்து கொண்டு, அதில் முழு ஈடுபாட்டுடன் அந்த இலக்கை நோக்கி சென்றால் வெற்றி பெற முடியும். மேலும், ஒவ்வொருவருக்கும் என்று தனித்திறமைகள் உள்ளன. அத்திறமைகளை அனைவரும் வளர்த்து கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்த சந்திப்பில் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டு, இந்த நிகழ்ச்சி மூலம் எங்களுக்கு ஒரு புத்துணர்வு, ஊக்கம் அளிப்பதாகவும், மாவட்ட ஆட்சியர் போன்று தாங்களும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகி உள்ளதாகவும், எங்களுடைய கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியர் தெளிவான விடை கொடுத்ததாகவும், நாங்களும் மாவட்ட ஆட்சியர் போன்று சாதித்து காட்டுவோம் என்றும், இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்ததற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு மாணவர்கள் தங்களது நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.
விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு குற்றங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு முறையாக நீதிமன்றத்தில் எதிரிகளுக்கு தண்டனைகள் கிடைக்கும் வரை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சாத்தூர் நகர் காவல் நிலைய சரகம் வெங்கடாசலபுரம் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த வாதியான சீனிவாசன் மகன் குமரன்(56/2020) என்பவரின் வீட்டின் முன்பு அதே கிராமத்தை சேர்ந்த அயில்சாமி மகன் மாரிமுத்து(27/2025) எனிபவர் மாலை நேரங்களில் அவரது நண்பருடன் மது அருந்தி வந்தவரை வாதியும் அவரது தம்பி இறந்த நபரான சிவக்குமார்(50/2020) என்பவரும் கண்டித்ததற்கு 17.09.2020 அன்று இரவு 11.00 மணியாளவில் எதிரி மாரிமுத்து அருவாளுடன் வந்து சிவக்குமாரை தாக்கி கொலை செய்த குற்றத்திற்காக கடந்த 18.09.2020ம் தேதி சாத்தூர் நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விருதுநகர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.இவ்வழக்கில் (15.04.2025) விருதுநகர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம் மேற்படி எதிரியை குற்றவாளி என அறிவித்து, அவர்களுக்கு ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.5000/- அபராதம் அல்லது 3 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.மேலும் இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது உரிய சட்டப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.